Monday, 5 September 2022

மஸ்தான் சுவாமிகள்

 மஸ்தான் சுவாமிகள்

மஸ்தான் சுவாமிகள் பெரும்பாலானோரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். அதி உன்னத பக்குவியாய் இருந்தும் , சாதாரணமானவன் போல் காட்சி அளிப்பார். பிறருக்கு எப்போதும் உதவிசெய்யக் காத்திருக்கும் இரக்கமும் பெருந்தன்மையும் கொண்டவர். தன்னை முன்னிலைப் படுத்தாது பின்புலத்தில் இருப்பதையே விரும்பினார் ; சாதாரண மக்களின் கவனமும் பாராட்டும் அவர் பால் செல்லாத அளவிற்கு ஒதுங்கியிருந்தார் .

இவ்வாறு குருவினால் சிறப்பிக்கப்பட்ட பக்தரே மஸ்தான் சுவாமி. 


தேசூரில் எளிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் நெசவுத் தொழில் செய்பவர். ஆரம்ப நாட்களிலேயே மஸ்தான் தறியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தானாகச் சமாதிபோன்ற நிலையில் ஆழ்ந்துவிடுவாராம். மகன் உறங்குகிறான் என்று நினைத்த பெற்றோர் அவரை அடித்து எழுப்பி வேலையைத் தொடருமாறு சொல்வார்களாம். குழந்தைப் பருவத்திலேயே இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்ததாம்.


இருபது வயது இருக்கும் போது பக்தியின் வயப்பட்டார் மஸ்தான் மொகரம் பண்டிகை சமயம் விபூதியைப் பூசிக் கொண்டு , பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு அலைவாராம்.




பின்னர் குணங்குடி மஸ்தானின் பாடல்களைப் படித்தவர் , “ பேரின்ப ” நிலை குறித்த பாடல்களால் பெரிதும் கவரப்பட்டு , முக்தியை நாட உள்ளம் கொண்டார். ஓராண்டு இரவிலும் பகலிலும் உறங்காது அவர் குணங்குடி மஸ்தான் , தாயுமானவர் , பட்டினத்தார் பாடல்களைப் படித்தவண்ணம் இருந்தார்.


1914 ஆம் ஆண்டு தேசூர் அகிலாண்டம்மாவோடு திருவண்ணாமலை வந்து முதன்முரையாக பகவானைத் தரிசித்தார். பகவானுடைய பார்வை பட்ட உடனேயோ , பலமணி நேரம் நீடிக்கும் சமாதி அனுபவம் கிடைக்கப் பெற்றார்.

ஆனால் இச்சமாதி அனுபவங்கள் பூரணமும் , நித்தியமுமான ஆன்மானுபூதியைத் தரவில்லை. ஆதலினால் பகவானை அடைந்து அவர் அருள் வேண்டி நின்றார். நிர்குண உபாசனையையே விரும்பிய அவரிடம் பகவான் பின் வருமாறு கூறினார் : “ மனதை இதயத்தில் நிலை நிறுத்த வேண்டும். எல்லா எண்ணங்களும் எங்கிருந்து எழுகின்றனவோ அந்த மூலஸ்தானத்தில் மனதின் கவனத்தை நிலைக்கச் செய்தால் , மனம் மூலத்தானத்தில் ஒடுங்கிவிடும் ; உள்ள பொருள் சுயமாய்ப் பிரகாசிக்கும் . ”


குருவின் உபதேசம் மஸ்தானை ஆன்ம விசாரத்தில் ஈடுபடுத்தியது


பகவான் ரமணரின் பெயரில் உலகில் தோன்றிய முதல் மையம் “ரமணானந்த மடாலயம்.” வந்தவாசியை அடுத்த தேசூரில், 1914ல் இந்த மையத்தை தேசூரம்மாள் என்று அழைக்கப்படும் அகிலாண்டம்மாள் என்ற பெண் பக்தருடன் இணைந்து ஆரம்பித்தவர் மஸ்தான் சுவாமிகள். இவர் பிறப்பால் ஓர் இஸ்லாமியர். இளம் வயதிலேயே ஆத்மானுபூதி பெற்றவர். பகவான் ரமணரின் அன்புக்குப் பாத்திரமானவர். பகவானின் பூரண அருளைப் பெற்றவர். பகவானுடனே பல காலம் விருபாக்ஷி குகையில் தங்கியிருந்தவர். அடிக்கடி தனது ஊரான தேசூருக்குச் சென்று பகவானுக்கும் பக்தர்களுக்குமான உணவுப் பொருட்களை தலைமேல் சுமந்து வருவார். கீழே பிற பக்தர்களுடன் சென்று பிக்ஷை எடுத்து வந்து ரமணருக்கு அளிப்பார். தன் கையாலேயே ராட்டையில் நூல் நூற்று பக்தர்களுக்கு ஆடை நெய்து வந்து தருவார். பகவான் ரமணர், குற்றவேல் குஞ்சு ஸ்வாமிகள் என பலருக்கு இவ்வாறு அவர் ஆடை அளித்திருக்கிறார்.


மஸ்தான் சுவாமிகளின் இறுதி நேரத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் ஆச்சரியமானது.


படுத்த படுக்கையாக இருந்தார் மஸ்தான் சுவாமிகள். தேசூரம்மாள் உடனிருந்து அவருக்கு உதவிகள் செய்து வந்தார். படுக்கையில் படுத்திருந்தவாறே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார் மஸ்தான் சுவாமிகள். திடீரென்று அவர் உரத்த குரலில், “ஆஹா.. ஆஹா.. அதோ நந்தி பகவான் வானிலிருந்து கீழே இறங்கி வருகின்றார். இதோ... என் உடலை அன்போடு தடவிக் கொடுக்கிறார். அடடா.. அடடா... சிவ கணங்கள் ஆடிக் கொண்டு இங்கே வருகின்றனவே. அவர்களுடைய உலகிற்கு என்னை அழைக்கின்றார்கள். நான் செல்லப் போகிறேன்” என்றார்.


தேசூரம்மாள் திடுக்கிட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. மஸ்தான் சுவாமிகள் ஜூர வேகத்தில் ஏதோ பிதற்றுவதாக நினைத்தார் தேசூரம்மாள்.


மஸ்தான் சுவாமிகள் திடீரென்று எழுந்து நின்றார். அவர் ஒரு வாரமாகப் படுத்த படுக்கையாக இருந்தவர். அவர் கண்கள் கண்ணீர் சொரிந்தன. இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பினார். தனக்கு முன்னால் யாரோ நின்று கொண்டு தன்னைக் கூப்பிடுவது போலத் தலையை அசைத்தார். பின்னர் உணர்ச்சி மேலிட்டவராய் உரத்த குரலில், “அம்மா... அம்மா... அபீதகுசாம்பாளே... என்னை அழைத்துச் செல்ல நீயே வந்தாயோ” என்றார். கை கூப்பி வணங்கினார். அடுத்த கணம் உயிரற்ற உடலாய்க் கீழே விழுந்தார்.


அன்று நவம்பர் 8, 1931 தீபாவளித் திருநாள். புனித நாளான அன்று தான் தன் உடலை உகுத்தார் மஸ்தான் சுவாமிகள். அவர் காலமான செய்தி அறிந்ததும் திருமந்திர முறைப்படி அவரைச் சமாதி வைப்பதற்கான முறைகளை குற்றவேல் குஞ்சு சுவாமிகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்பொருட்களைத் தன் கையாலேயே அதற்கான தனித் தனிப் பைகளிலிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் பகவான் ரமணர். பகவான் அவ்வாறு தன் கையாலேயே சமாதிக்கான கிரியைகளைச் செய்தது அன்னை அழகம்மை, மஸ்தான் சுவாமிகள், பசு லட்சுமி ஆகிய மூவருக்கு மட்டுமே. இதிலிருந்தே மஸ்தான் சுவாமிகளின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம்.


பெரும்பாலான சமணர்கள் வாழ்ந்திருந்த அவ்வூரில் இஸ்லாமியரான மஸ்தானுக்கு சிவஞானியருக்கு அமைக்கப்படும் சமாதி பகவான் ரமணரது கூற்றுக்கு இணங்க அமைக்கப்பட்டது. சிம்மக்குட்டி நாயனார் என்னும் அவ்வூர்க்காரரான சமணர் ஒருவர் சமாதி அமைப்பதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்றார்.


அருகில் இருந்த சிவன் கோவில் நிர்வாகம் மஸ்தானின் உடலை ஊர்வலமாகக் கொண்டு செல்ல கோவில் சப்பரத்தைத் தந்து உதவியது. அது ஒரு புத்தம் புதிய சப்பரம். அப்பொழுதுதான் வேலை முடித்து  வந்திருந்தது.  மஸ்தானுடைய உடலை ஊர்வலமாய் எடுத்துச் செல்வதாய் ஆயிற்று.


அந்நாள் தீபாவளி நாளும் ஆயிற்று. மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. கொட்டும் மழையிலே மஸ்தானின் உடல் சப்பரத்தில் வைக்கப்பட்டு அருகிலிருந்த மூன்று கிராமங்களின் வழியே ஊர்வலமாய்ச் சென்றது. சில இடங்களில் பக்தர்கள் இடுப்பளவு நீரில் சப்பரத்தைத் தள்ளிக் கொண்டு சப்பரத்தைத் தள்ளி உதவினர். முனிசாமி 200 கிலோ அரிசி வழங்கி அனைவரும் உணவு அளித்தார். தொடர்ந்து தன் வாழ்நாள் வரை மஸ்தானின் சமாதி தினத்தன்று அவர் உணவு படைத்து வந்தார்.


பின்னர் ஒரு சமயம் பகவான் ரமணரைச் சந்தித்த தேசூரம்மாள் மஸ்தான் சுவாமிகளின் இறுதிக் கணத்தில் நடந்த நிகழ்வுகளைச் சொல்ல, உடனே பகவான், “ஆஹா... அகில உலக அன்னையான அபீதகுசாம்பாளே மஸ்தானை அழைத்துச் செல்லத் தானே வந்திருக்கிறாளே. அவர் கண்டது, சொன்னது அனைத்தும் சிவலோகத்தோடு ஒத்துப் போகின்றது” என்றார்.


“அபீதகுசாம்பாளும் அருணாசலரும் ‘மோட்சம் தருகிறேன் வா, வா’ என்று அழைக்கும் ஒரே இடம் பூமியில் இதுதான்” என்பது சேஷாத்ரி சுவாமிகளின் வாக்கு.. அந்த வாக்கு மஸ்தான் சுவாமிகளின் விஷயத்தில் உண்மையாயிற்று. அகில உலக அன்னையான உண்ணாமுலை அம்மனே நேரில் வந்து மோட்சம் அளிப்பது என்றால் அது எவ்வளவு உயரிய நிலை! மஸ்தான் மிகவும் கொடுத்து வைத்தவர்தான் இல்லையா!


மஸ்தான் சுவாமிகளின் சமாதி வந்தவாசியை அடுத்த “மடம்” கிராமத்தில் அமைந்துள்ளது. 


காலப்போக்கில் மஸ்தானின் சமாதி ஊர் மக்கள் அனைவரும் வேண்டியதை அருளும் புனித தலமாக மாறிவிட்டது. ஆரம்ப காலத்தில் மஸ்தானுக்கு உதவி செய்தவர் அனைவரும் வளம்பெற ஆரம்பித்தனர். இதைக் கண்ணுற்ற எல்லோரும் அருள் வேண்டிச் சமாதியை நாடினர்.


மஸ்தான் சுவாமியின் எளிமையும் , தன்னடக்கமும் , அன்பும் பெருந்தன்மையும் குரு பக்தியும் , அதி உன்னத ஆன்மிகப் பக்குவமும் அதிசாமான்யத் தோற்றமும் . அதீத நிர்மலத்துவமும் , வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அனைவரையும் ஒருமிக்கச் செய்த அவரது முக்தியும் மெய்ப்பொருள் நாட்டம் உடையவருக்கு மனமாசு அகற்றும் அருமருந்தாகும்

No comments:

Post a Comment