ஸ்ரீலஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமிகள்
*ஸ்ரீலஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமிகள் ஆரம்ப காலகட்டத்தில் தன்னிலை அறியாதவராய் பெரியசெவலை ரோடு மார்க்கத்தில் அரைக்கால் சட்டை அணிந்து உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி முக்காடிட்டுக் கொண்டு அங்குமிங்கும் நடந்து செல்வதுமாய் இருந்தார்கள்.
அன்னதானம்:-
🌺🌺🌺🌺🌺🌺
தனியனாய் வந்த சுவாமிகள் பின் உளுந்தூர்பேட்டை வந்து சேர்ந்தவுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு சொற்ப அளவில் அன்னதானம் செய்தும், முடிந்த அளவில் அரிசியில் கஞ்சி காய்ச்சித் தருபவராகவுமே இருந்து வந்தார். பசித்தோருக்கு அன்னமிட்டு வந்த புண்ணியத்தினாலேயே சுவாமிகளுக்கு அதீத சக்திகள் கைவரலாயிற்று.
கர்மவினை நீக்கம்:-
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகள் 'தன்னை' அறிந்த பின் தன்னை நாடி வந்தோரின் இடர்களைக் களையும் வண்ணம் நாவன்மை மிக்கவரானார்கள். அதனாலேயே வாழ்வில் துன்புறும் மக்கள் தங்கள் துன்பங்களைக் களைய வேண்டி சுவாமிகளை நாடி வந்தனர்.
இல்லறத்தில் பிரிவினை,கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள், நோய்நொடிகள் நீக்கம் பெறவும், காணாமல் போனவர்கள் திரும்பக் கிடைக்கவும், குழந்தையின்மை, தொழில் முன்னேற்றம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் தீர வேண்டியும் சுவாமிகளை நாடி மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
அவ்விதம் சுவாமிகள் தம்மை நம்பி.. நாடி வந்தவர்களுக்குத் தன் நாவன்மையால் நல்வாக்கு கூறி நம்பி வந்தவர்களுக்கு நன்மைகள் நடைபெறச் செய்தார்கள். அவ்விதம் நன்மை பெற்றோர் பலர் தாமாக முன்வந்து சுவாமிகள் அன்னதானம் செய்விக்க அரிசி, பழம், காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்துச் சென்றனர்.அதன் மூலம் அவர்கள் தங்களது கர்மவினைகள் நீக்கம் பெற்று நல்வாழ்வு பெற்று மகிழ்வுற்றனர்.
தன்னலமற்ற சேவை:-
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சுவாமிகளின் தன்னலமற்ற சேவைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது அன்ன தானம்.அன்னதானம் செய்வதற்கென மக்கள் தரும் பொருட்களையோ, பணத்தையோ, சிறிதேனும் தன் மனைவி - மக்களுக்கும், தம் உறவினர் - சுற்றத்தார் என்ற வகையில் அவர்களுக்கோ சுவாமிகள் சிறிதேனும் தனக்கென்றோ எதையும் எடுத்து வைத்துக் கொள்வார் இல்லை.
பக்தர்கள் தாமாக முன்வந்து அளித்த அனைத்தையும் அன்னதானத்திற்கு என்றே சுவாமிகள் பயன்படுத்தி வந்தார்கள். தினமும் நூற்றுக்கணக்கில் வரும் ஏழை, எளியோருக்குத் தங்கு தடையின்றி எந்நேரமும் டீ,காபி முதலான பானங்களையும் அளித்து வந்தார்கள். வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் தங்குவதற்கு உணவும், தங்குமிடமும் அளித்து உதவி வந்தார்கள்.
கர்மாவைக் கழிக்கும் விதம்:-
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகள் தன்னிடம் பிரச்சினைகளோடு வருபவர்களை இனம் கண்டுகொண்டு தாமாக அவர்களை அழைத்து "என்னை நினைத்து... என்னை நாடி வந்து விட்டாய் அல்லவா? உன் பிரச்சனைகள் யாவும் இன்றோடு தீர்ந்துவிடும். உனக்காக நான் இருக்கிறேன்" என்று ஆறுதல் மொழிகள் சொல்லியும், வந்தோரின் மனம் நிறையும் படியான அன்பு மொழிகள் சொல்லியும் ஆசீர்வதித்து உணவருந்தச் சொல்வார்கள்.
கர்மவினைகள் அதிகம் உள்ளோருக்கு சுவாமிகள் தன் கரங்களாலேயே உணவோ,கஞ்சியோ தருவார் அதனை பக்தர்கள் தங்கள் இருகரங்களால் ஏந்தியபடி அப்படியே உண்ணவேண்டும் என்பார். அவ்விதம் உண்பதால் அவர்களது கர்ம வினைகள் நீக்கம் பெறும் இது சித்தரது சூட்சும ரகசியம் ஆகும்.
நல்வழி - நற்பலன்:-
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
தன் உழைப்பால் சம்பாதித்த பணம் பத்து ரூபாய் ஆனாலும் அதில் ஒரு கட்டு பீடி வாங்கித் தந்தாலும் சுவாமிகள் அதனை அன்போடு ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார். ஆனால் தவறான வழியில் சம்பாதித்த பணத்தை நன்கொடையாக லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அதனைக் குறித்து முன்னரே அறிந்தவர் ஆகையால் அதனைத் தீண்ட மாட்டார்கள்.
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பார்க்காமலும்,மேலோர், கீழோர் என ஜாதி பேதம் பாராமலும் அனைவரையும் சமமாகவே பாவித்து நல்லுபதேசம் செய்வார்கள்.ஞாய, தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வரும் அனைவருக்கும் நற்குருவானார்கள்.
காலப்போக்கில் சுவாமிகள் செய்து வரும் தான, தர்மத்தினாலேயே பக்தர்கள் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகளைப் "பண்ணையார் ஐயா" என்றே அழைக்கலாயினர்
ஜீவமுக்தி:-
☘️☘️☘️☘️☘️
முக்காலமும் உணர்ந்த பெரும் அருளாளனாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகள் 15.07.1997ம் தேதி அன்று ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்கள் .
சமாதி பீடம்:-
🌻🌻🌻🌻🌻
ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகளின் சமாதி பீடம் எண்கோண வடிவமைப்பில் கட்டப்பட்டு அதன் மீது, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். அற்புதக் கலை அமைப்புடன் கூடிய சுற்றிலும் எட்டு தூண்கள் வண்ணப்பூச்சுடன் காணப்படுகின்றன. எண்கோண வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள சமாதி பீடத்தின் மீதுள்ள சிறு கோபுரத்தில் சுற்றிலும் முனிவர்கள் மற்றும் சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்:-
🏵️🏵️🏵️🏵️🏵️
சுவாமிகளின் ஜீவசமாதி உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட கோட்டப் பொறியாளர் அலுவலகத்தினுள் அமைந்துள்ளது.
மிகப்பெரிய தர்மவானான ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமிகளின் குருபூஜை நாளன்று சுவாமிகளின் ஜீவசமாதி பீடத்தில் அபிஷேக ஆராதனைகளும், வடலூரில் உள்ள 'அணையா அடுப்பென' அன்னதானமும், தொடர்ந்து வெகு விமர்சையாக நடைபெறும்.
No comments:
Post a Comment