Thursday, 1 September 2022

ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள்

 ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் 


தமிழ்வேள் கந்தக்கடவுளே சித்தராக நின்றும்,பதினென் சித்தர்களுள் ஒருவரான போகர் நவபாஷாண முருகப்பெருமானை உருவாக்கிய பின்னர் தனது ஸ்தூலத் திருமேனியை மறைத்து அருளுயதாலும் பழனியம்பதிக்கு 'சித்தன் வாழ்வு' என்று ஒரு பெயரும் உண்டு. அத்தகைய பெருமை மிக்க பழனியம்பதியில்  அருட் தொண்டாற்றியவரே ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் ஆவார்.

அறப்பணிகள்:-

🏵️☘️🏵️☘️🏵️☘️

  ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பொம்ம நாயக்கன்பட்டியில் பெரும் வசதி மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவராயினும் சுவாமிகளின் மனம் செல்வச் செழிப்பை வெறுத்து ஒதுக்கி துறவறத்தையே நாடியது. சித்தபூமியாம் பழனிக்கு வந்தடைந்த சுவாமிகள் தனது அறப்பணியைத் தொடங்கி முத்தாய்ப்பாக பழனிமலை அடிவாரத்தில் 'சரவணப் பொய்கை' எனும் பொய்கையை உருவாக்கி பழனிக்கு வரும் அடியவர்கள் அதில் நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்யும்படி வழிவகுத்தார்கள். அதன் படி சரவணப் பொய்கை மக்களிடையே முக்கியத்துவம் பெற்றதும் அதனைத் திருக்கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைத்தார்கள். அதற்குப் பிரதிஉபகாரமாக சுவாமிகள் பழனியம்பதியிலேயே தங்கியிருக்க ஒரு இடத்தையும் திருக்கோயில் நிர்வாகம் ஒதுக்கித் தந்தது.

  சுவாமிகள் அவ்விடத்தில் தங்கி இருந்தவாரே  பற்பல சித்தாடல்கள் புரிந்து வந்துள்ளார்கள். மண்சட்டியில் உணவு உண்ணும் வழக்கமுடைய சுவாமிகள் உணவு உண்டபின் அம்மண் சட்டியைத் தனது தலைமீது கவிழ்த்து வைத்துக் கொள்வார்கள்.அதனாலேயே சுவாமிகளைச் "சட்டி சுவாமிகள்" என மக்கள் அழைக்கலாயினர்.

அற்புதங்கள்:-

🌸🍃🌸🍃🌸🍃

 🚂பழனி மலை அடிவாரத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில்  தொடர்வண்டி (ரயில்) செல்லும் பாதையில் உள்ள 'சங்கிலி கேட்' என்னும் இடத்திற்கு சுவாமிகள் அடிக்கடி வருவாராம். அப்போது சுவாமிகள் விரும்பிச் செல்லும் இடத்திற்கு தொடர்வண்டிக்கு கை காட்டியதும்  நிற்குமாம்.வண்டி நின்றபின் அதில் ஏறிப் பயணித்துச் செல்வாராம்.அவ்விதம் ஒரு முறை செல்ல முயன்றபோது  தொடர்வண்டி  நிற்காது சுவாமிகளைக் கடந்து சென்றது.சில அடி தூரம் சென்றதும்  தொடர்வண்டி தானாகவே நின்று போனது. ஊழியர்கள் பல மணி நேரம் வெகுவாக முயற்சித்தும் இயங்க முடியாது நின்று போனது. பின்னர் தங்கள் தவறை உணர்ந்த ஊழியர்கள் சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்ட பின்னர் சுவாமிகள் கை காட்டிய பின்னரே தொடர்வண்டி புறப்பட்டுச் சென்றது*

  🚂சுவாமிகள் சமாதி அடைந்து 95 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் அவரது நடமாட்டத்தைத் தண்டவாளம் அருகில் மக்கள் உணர்கின்றனர். இன்றளவும் சட்டி சுவாமிகள் சூட்சும உருவில் அவரது சமாதிக் கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து 'சங்கிலி கேட்' வரை வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். இதனாலேயே மக்கள் அப்பகுதிக்கு "சித்தா நகர்"என்று பெயரிட்டு  ஞானாம்பிகை உடனுறை யோகீஸ்வரர் திருக்கோவிலையும் எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.

உபதேசம்:-

🌼🍂🌼🍂🌼

  சுவாமிகள் ஒருமுறை பழனி மலை அடிவாரத்தில் ஒரு ஆறு வயது சிறுவனை ஆட்கொண்டு அவனுக்கு உபதேசம் அளித்துள்ளார்கள். அவரே பிற்காலத்தில் மக்களால் போற்றப் பெற்ற 'பன்றிமலை சுவாமிகள்' ஆவார்.

பரிபூரணம்:-

💥🌺💥🌺💥

  ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகள் 1927 ஆம் ஆண்டு சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பரிபூரணம் ஆனார்கள். அப்போது பழனியில் இருந்த சாது சுவாமிகள் முன்னின்று சட்டி சுவாமிகளின் ஸ்தூலத் திருமேனியைக் குகை செய்வித்தார்கள்

தாமரை மொட்டு:-

🪷☘️🪷☘️🪷☘️🪷

 🪷ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகளின் சமாதியின் மீது கருங்கல்லால் ஆன சஹஸ்ரஹாரம் எனும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மொட்டு வடிவம் அமைத்து அதன் மீது உலோகத்தாலான சிறிய முருகன் சிலையையும் கிழக்குப் பார்த்தவாறு பிரதிஷ்டை செய்துள்ளனர்.

குருபூஜை:-

🍁☘️🍁☘️🍁

ஸ்ரீலஸ்ரீ சட்டி சுவாமிகளை சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை தினமாக பூஜித்து வருகின்றனர்

அமைவிடம்:-

🏵️🍁🏵️🍁🏵️

 பழனி மலை அடிவார பகுதியில் வடக்கு கிரி வீதியில் தேவஸ்தான சிறு குடில்கள் பகுதியை அடுத்து சட்டி சுவாமிகளின் சமாதித் திருக்கோவில் வளாகம் உள்ளது.


No comments:

Post a Comment