Saturday, 31 August 2013

ஹரிதாசர்




விட்டல! விட்டல! ஜய ஜய விட்டல! ஹர ஹர விட்டல! என்று எந்நேரமும் கிருஷ்ண பஜனை செய்து கொண்டிருந்தவர் ஹரிதாசர். லோகதண்டம் என்னும் புண்ணியதலத்தில் ஜத்வாமுனிவர்- சாத்யகி தம்பதியின் திருமகனாகப்  பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் புண்டரீகன். அவன் பெண்ணாசை மிக்கவனாக  இருந்தான். மகன் திருந்த  வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து வைத்தனர். அப்போதும் பயனில்லை. மகனுக்குப் புத்திமதி சொல்லிப் பார்த்தனர். ஆனால்,  கோபத்துடன் அவர் பேசிய பேச்சு பெற்றோர் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.  ஜத்வாமுனிவரும், சாத்யகியும், இப்படியொரு பிள்ளையைக் கொடுத்துவிட்டாயே என்று கடவுளிடம் முறையிட்டனர். அப்போது வீட்டு வாசலில் கோவிந்த நாம சங்கீர்த்தனம் கேட்டது. வீதியில் கோவிந்தா! ஹரி கோவிந்தா! என்று பாகவதகோஷ்டியினர் யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அவர்களோடு யாத்திரை செல்வதாக மருமகளிடம் சொல்லி விட்டு, ஜத்வாமுனிவர் மனைவியோடு கிளம்பி விட்டார். விஷயம் அறிந்த புண்டரீகன், இன்றோடு என்னைப் பிடித்த கஷ்டகாலம் தொலைந்து விட்டது என்று ஆனந்தப்பட்டான்.
அன்றிரவு புண்டரீகனுக்கும், எங்காவது சுற்றுலா கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டது. கையில் இருந்த பணத்திற்கு இரு குதிரைகளை விலைக்கு வாங்கி வந்தான். கணவனும், மனைவியும் கிளம்பினர். சற்று தொலைவில் காட்டுப்பாதையில், தனது பெற்றோர் பாகவத கோஷ்டியோடு நடந்து செல்வதை புண்டரீகன் பார்த்தான். இதென்னடா வம்பு என மாற்றுப் பாதையில் குதிரையை செலுத்தத் தொடங்கினான். வழியில் ஒரு சத்திரத்தில் அவர்கள் தங்கினர். சத்திரம் அருகில் இருந்த குடிலில், குக்குட முனிவர் என்னும் தவசீலர் இருந்தார். அவரிடம், சுவாமி! தீர்த்த யாத்திரையாக நானும் என் மனைவியும் சென்று கொண்டிருக்கிறோம். இங்கிருந்து காசி எவ்வளவு தூரம் என்று சொன்னால் வசதியாக இருக்கும் என்று கேட்டான்.  நான் காசிக்குப் போனதும் இல்லை. கங்கையில் நீராடியதும் இல்லை. என் பெற்றோரின் பாதங்கள் தான் எனக்கு புனிதமான காசி. அதில் படும் நீரே எனக்கு புண்ணிய கங்கை என்று சொன்னார். 


 இவரிடம் போய் விபரம் கேட்டோமே, என்று அலட்சியம் செய்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான். காலையில் எழுந்தான். முனிவர் குடிலின் வாசலில் மூன்று அவலட்சணமான பெண்கள் நின்று கொண்டிருந்தனர். இங்கும் அங்குமாக குடிலுக்குள் விரைந்து பணிகளைச் செய்து முடித்தனர். குடிலின் வாசல் பெருக்கி கோலமிட்டனர். செடிகளுக்கு நீர் பாய்ச்சினர். குடிலுக்குள் சென்று முனிவரை வணங்கினர். வெளியே வரும் போது, மூவரும் அழகானவர்களாக உருமாறியிருந்தனர்.  பெண்ணாசை பிடித்த புண்டரீகன் அவர்களை நோக்கி ஆசையுடன் ஓடினான். அற்பப் பதரே! எட்டிநில்! என்று கோபமாகக் கத்தினர். அவன் பயந்துபோய், அவர்களது கால்களில் விழுந்து தாய்மாரே! என்னை மன்னியுங்கள்! என்றான். அப்பெண்களின் அருட்பார்வையால் அவனைப் பற்றியிருந்த தீய எண்ணங்கள் மறைந்தன. அவர்கள் அவனிடம்,நாங்கள் தான் புண்ணிய நதிகளான கங்கா, யமுனா, சரஸ்வதி. உன்னைப் போன்ற கொடியவர்கள் நீராடுவதால் எங்களின் புனிதம் போய் விடுகிறது. எங்கள் பாவம் தீர வேண்டி, பெற்றவர்களே தெய்வமென வணங்கும் இந்த முனிவரின் குடிலுக்கு வந்து சேவை செய்கிறோம்.
பெற்றோருக்குச் சேவை செய்பவர்கள் பெரும்பாக்கியவான் ஆவார்கள், சொல்லிவிட்டு மறைந்தனர்.  குக்குட முனிவரின் குடிலுக்குள் சென்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். ஒரு நொடிகூட காத்திராமல், பெற்றோரைத் தேடிப் புறப்பட்டான். காட்டுவழியின் ஓரிடத்தில் தாயும் தந்தையும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், அவனது கண்களில் கண்ணீர் பெருகியது. கண்ணிருந்தும் இத்தனை நாளும் குருடாக இருந்துவிட்டேனே! அம்மா! அப்பா! இருவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று அழுதான். மகனின் மனமாற்றம் கண்ட பெற்றோர் சந்தோஷம் கொண்டனர். திருந்திய புண்டரீகன், பக்த புண்டரீகராக மாறி விட்டார். குதிரையில் பெற்றோரை ஏற்றிக் கொண்டு காசி சென்றார். யாத்திரை முடித்து திரும்பும்போது, தாய் தந்தைக்காக பீமாநதிக்கரையில் குடில் அமைத்தார். எப்போதும் அவர் வாயில் ஹரிநாமம் ஒலித்தது. புண்டரீகருக்கு அருள்புரிய பாண்டுரங்கனே நேரில் வந்தார். 


ஆனால், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், பாண்டுரங்கா! இப்போது நான் பெற்றோருக்கு சேவை செய்து கொண்டிருக்கிறேன். சிறிதுநேரம் அங்கிருக்கும் செங்கல் மீதேறி காத்து நில்! இதோ வந்து விடுகிறேன்! என்று தன் பணியைத் தொடர்ந்தார். பெற்றோர் பாதசேவையை முடித்து விட்டு ரங்கனைத் தேடி வந்தார். கோபாலா! கோவிந்தா! என்னை மன்னித்துவிடு! எனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தாயே! என்ற வருந்தினார். புண்டரீகா! பெற்றோர் சேவையின் மகிமையை உலகிற்கு உணர்த்த உன் வாழ்வு உதாரணமாகட்டும் என்று இறைவனும் அருள்புரிந்தார். இந்த இடமே புண்டரீகரின் பெயரில் புண்டரீகபுரமாக விளங்கி, பண்டரிபுரமாக மாறிவிட்டது. செங்கல்லில் காத்திருந்ததால்பாண்டுரங்கனுக்கு விட்டலன் என்ற திருநாமம் ஏற்பட்டது. மராத்தியில் விட்டல் என்பதற்கு செங்கல் என்று பொருள். ஹரிபக்தியில் முழுமையாக ஈடுபட்ட புண்டரீகரை பக்தர்கள் ஹரிதாசர் என்று இன்றும் போற்றுகின்றனர்.

Friday, 30 August 2013

சாது சிதம்பர சுவாமிகள்











                                                                                        

சாது சிதம்பர சுவாமிகள். இவரது பெற்றோர் சண்முக சுவாமிகள் - உலகம்மை. இவர்  20.10.1922 வெள்ளிக்கிழமை, தீபாவளி தினத்தன்று சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தார்.  இவரது ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியிலுள்ள  வல்ல நாடாகும்.  இவர்தான்  பின்னாளில் அனைவராலும் போற்றப்பட்ட சாது சிதம்பர சுவாமிகள் ! இவர் வள்ளலார் வழி வந்தவர் என்பதை அருட்பெருஞ்ஜோதி அணிந்துரை பாடலில் காணலாம்.

அருட்பெரும் ஜோதி அருட்பிரகாசர்
அகத்தும் புறத்தும் அணிந்தெழுந்து
பொருட்பெரும் உலகில் புதுயுகம் தோன்றப்
போந்த நாள் தருமச் சாலை நாளாம்
மருட்டவிர்த் தன்பர் மகிழ்வினில் வாழ
வல்ல நாட்டடிகள் வழி திறந்தார்
அருட் சுடர் உள்ளே அகவற் பொருளை
அருட்குரு வாய்க்கண்டு போற்றுதுமே

என்பதே அப்பாடல். வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வகுத்தருளிய பாதையிலேயே தன் ஆன்மிகப் பணியைச் செய்துவந்தார். கருணை, அடக்கம் போன்ற உயர் பண்புகளின் உறைவிடமாக - மிகவும் எளிமையாக - மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்தவர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் தினமும் தம் தாய் - தந்தையரை வணங்கி விட்டு - அதுவும் 108 முறை தாயாருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்கிய பின்புதான் தனது அன்றாட வாழ்க்கை முறையைத் தொடங்குவார். அவரது பெற்றோர்கள் லட்சுமி என்னும் உத்தமியை அவருக்குத் திருமணம் செய்வித்தனர். இல்லற இன்பத்தில் நாட்டமில்லாத சுவாமிகள் பேரின்ப நாட்டமுடையவராகவே வாழ்ந்து வந்தார். வள்ளலார் வழங்கிய சன்மார்க்க நெறியை பாமர மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டினார். மனிதனுக்கு அருளும் ஆறுதலும் கிடைக்க ஒரே வழி மனிதன் மனித குலத்துக்கு தொண்டு செய்வது ஒன்றே. நாமெல்லாம் தொண்டர் குலம்; தொண்டு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்க்கையின் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் தொண்டு செய்து கொண்டேயிருந்தார்.
திருக்கோயில் குடமுழுக்கு, திருமணம், மஞ்சள் நன்னீராட்டு, நீத்தார் நினைவு, புதுமனை புகுதல் போன்ற அனைத்து விழாக்களையும் சன்மார்க்க வழியில் நடத்தி வைத்தார். கோபூஜை. கணபதி ஓமம், 108, 1008 தீபஜோதி வழிபாட்டு முறையில் விநாயகர் அகவல், அருட்பெருஞ்ஜோதி அகவல், சிவபுராணம், தேவார - திருவாசக - திவ்யபிரபந்த பக்திப் பாடல்களைப் பாடச் செய்து, சமபந்தி போஜனம் நடத்தி விழாக்களை நிறைவு பெறச் செய்வார். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல், தீப தரிசனமே பாவ விமோசனம் என்னும் அருள்வாக்கை தான் செல்லும் இடங்களில் எல்லாம் செயற்படுத்திக் காட்டினார். எண்ணற்ற சித்துகள் செய்தவர் சிதம்பர சுவாமிகள். தீர்க்க முடியாத வியாதிகளைத் தனது ஆத்மசக்தியாலும் மூலிகை மருந்துகளாலும் தீர்த்து வைத்துள்ளார். சுவாமிகள் பாதம்பட்ட வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் சுவாமிகளின் அருள் பெற்று, தம் கர்மவினை நீங்கி ஆத்மானந்தமும் அமைதியும் அடைந்தனர். வல்லநாட்டு சுவாமிகள் பல இடங்களில் 1008 தீபங்கள், லட்ச தீபங்கள் ஏற்றி, அருட்பெருஞ் ஜோதி அகவலைப் பாராயணம் செய்து, அன்னதானம் சிறப்பாக நடத்தி உலகில் அமைதியை ஏற்படுத்த பணிபுரிந்துள்ளார். இறந்தவர்களை எரிப்பது தவறு; சமாதி செய்வதே சாலச் சிறந்தது என்பது சுவாமிகளின் கொள்கையாகும். சமாதி நிலை கூடிய முன்னோர்களுக்கு, அவர்களின் குரு பூஜை நாளன்று மகேசுவர பூஜை நடத்தி நன்மைகள் பெற வழிகாட்டினார். தம்மை நாடி வந்த மங்கையர்க்கரசி அம்மையாருக்கு காசியில் முக்தி கொடுத்தார்.

குறுக்குத்துறை அமாவாசை பரதேசி என்பவருக்கு, ஒரு அமாவாசை நாளன்று முக்தி நிலைக்கு உதவினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்ற அறவோர்க்கும் சமாதி நிலை அமைத்து உதவினார். ஞானி மாதவானந்தா, ஐந்நூறு வயதுக்குமேல் வாழ்ந்த யோகி சடைநஞ்சப்ப சுவாமிகள் போன்ற மகான்களுக்கு நிர்விகல்ப சமாதி அடைய துணை புரிந்து, மண்டல பூஜையையும் இயற்றி அருளினார். பொதிகை மலையில் வாழ்ந்த தெய்வீக வெள்ளை யானையோடும், சதுரகிரி மலையில் வாழ்ந்த ஒற்றைக் கொம்பன் என்ற தெய்வீக யானையோடும் சுவாமிகளுக்கு நட்பு இருந்தது. வள்ளலார் தண்ணீர்விட்டு விளக்கெரித்த தன்மைபோல், வல்லநாட்டு சுவாமிகளும் தீபஜோதி வழிபாட்டில் அவசியம் நேரும் பொழுது தண்ணீர் விட்டு விளக்கெரித்துள்ளார். பிறர் தம் காலில் விழுந்து வணங்குவதை சுவாமிகள் ஒப்புக்கொள்வதில்லை. அறியாமல் விழுந்தால், தாமும் அவரடியில் வீழ்ந்து வணங்குவது சுவாமியின் வழக்கம். நவகிரக நூதன ஸ்தாபனம் இவர் செய்த புதுமையாகும். நடுவில் தீபத்தண்டும், அதைச் சுற்றி நவகிரக மூர்த்திகள் வெளிப்பார்வையாகவும் அமைத்தலே அந்த முறை. இந்த மூர்த்திகள் யாவும் அனுக்கிரக மூர்த்திகளாகச் காட்சியளிக்கும். இத்தகைய நூதன நவகிரகங்களை வல்லநாடு, வீரசிகாமணி, ஐவர் மலை, பூண்டி போன்ற திருத்தல கோயில்களில் இன்றும் காணலாம். இத்தகைய மகிமை வாய்ந்த வல்லநாட்டுச் சுவாமிகள் 1981-ஆம் ஆண்டு, வைகாசி பூசத்தில் அருட்ஜோதியில் கலந்து அருள்பாலித்து வருகிறார்.

குரு பூஜை: மார்கழி மாத அவிட்டத்தில் சுவாமியின் தந்தைக்கும், ஆனி மாத மகத்தில் தாயாருக்கும், வைகாசி பூசம், மாதப் பூசம் போன்ற நாட்களில் வல்லநாட்டு சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் (லட்சம் பேருக்கு) நடைபெற்று வருகின்றது. பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும் என்பது வல்லநாட்டாரின் அருள்மொழியாகும். ஏழைகளின் பசியாற்றினால் இறைவன் அருள் தானாகக் கிட்டும் என்பது அவரின் வேதவாக்கு. வல்லநாட்டு சுவாமிகளின் தாய் - தந்தை சமாதி, வல்லநாட்டு சுவாமிகளின் ஜீவசமாதி, சுவாமிகள் அன்புடன் பழகி வளர்த்த மணிகண்டன் என்ற யானை சமாதி அனைத்தும் வல்லநாட்டு சித்தர் பீடத்தில் உள்ளன. அணையா விளக்கு எப்பொழுதும் அங்கு எரிந்து கொண்டிருக்கும். இன்றும் தினசரி வயது முதிர்ந்தவர்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. எண்ணற்ற பக்தர்கள் சுவாமிகளின் சமாதிக்குச் சென்று வழிபட்டு, தம் கர்மவினை நீங்கி செல்வச் செழிப்புடன் பிணியில்லாத வாழ்வு வாழ்கின்றனர்.

குள்ளச்சாமிகள்





பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது அவருக்கு ஞானகுருவாக விளங்கியவர் குள்ளச்சாமி. வண்ணான் தொழில் என்ற தலைப்பில் பாரதியார் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு நூறு வயதாகிவிட்டது என்றும் பார்ப்பதற்கு நாற்பது வயதானவராகவே காணப்படுகிறார் என்றும் மக்கள் கூறுவர். கறுப்பு நிறமும் உருண்டை முகமும் கொண்ட அவர், நாலரை அடி உயரமே உள்ளவராக இருந்தார். வயிரம் ஏறிய உடல். திக்தித் திக்கி தொடர்பின்றிப் பேசுவார்; தெருவிலே படுத்திருப்பார்; மண்ணிலே புரள்வார்; நாய்களுடன் சண்டை செய்வார்; கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; பசித்தபோது சில வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுத்து உண்பார். பெண்களுக்கு அவர் மேல் இரக்கம் உண்டு. திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகளின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு ஓடி விடுவார். யாராவது அவரைத் திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகலுவார். அவரிடமிருந்து திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டால் நோய் அணுகாது என்பது பலருடைய நம்பிக்கை. ஒரு நாள் குள்ளச்சாமியார் கிழிந்த அழுக்குத்துணிகளை மூட்டையாகக் கட்டி, அதை முதுகின்மேல் சுமந்துகொண்டு வந்தார். பாரதியார் அதைக் கண்டவுடன் வழக்கம்போல் வணங்கினார். ஆனால் சாமியார் குறும்புச் சிரிப்பு சிரித்தார். பாரதியார், சாமி, கந்தைகளைக் கட்டி முதுகின்மேல் வைத்து சுமப்பதேன்? என்று வினவினார். சாமியார், நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய். நான் முதுகின் மேலே சுமக்கிறேன் என்று விடையளித்துவிட்டு, விரைவில் மறைந்தார். 

குள்ளச்சாமியார் கூறியதன் பொருளை பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்:
அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங்கவலைகளையும், பழந்துன்பங்களையும், பழம் சிறுமைகளையும் மனதில் வைத்து வீணாய்ச் சுமந்து திரியும் மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டே குள்ளச்சாமி இவ்வாறு கூறினார். ஒருநாள் பாரதியார் குள்ளச் சாமியாரைப் பார்த்து விளையாட்டாக, சாமி. இப்படி பிச்சை வாங்கி உண்ணுகிறீர்கள். ஏதேனும் தொழில் செய்து பிழைக்கலாகாதா? என்றார். சாமியார், தம்பி, நான் வண்ணான் தொழில் செய்கிறேன். ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்ப்பதும் அந்தக்கரணம் ஆன துணி மூட்டைகளை வெளுப்பதும் என் தொழில்கள் என்றார். பாரதியார், சாமியாரே, ஞானநெறியில் செல்வோன் எத்தொழிலை முதலில் செய்யவேண்டும்? என்று கேட்டார். சாமியார், முதலில் நாக்கை வெளுக்கவேண்டும். பொய், குறளை, கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி ஆகியவை கூடாது. உண்மையே பேசவேண்டும். அச்சத்தை நீக்குவதே அந்தக்கரணத்தை வெளுத்தலாகும் என்றார். சும்மா என்ற கட்டுரையில் பாரதியார் குள்ளச்சாமியைப் பற்றி எழுதுவதாவது : இவர் கலியுக ஜடா பரதர். மகாஞானி. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர். பெண்கள் இவரைத் தெருவில் கண்டவுடன் வணங்குவார்கள். குழந்தைகள் இவரைக் கண்டால் விருப்பத்துடன் ஓடி வருவார்கள். 

பாரதி அறுபத்தாறு எனும் பகுதியில் பாரதியார் பாடியிருப்பதன் கருத்து :
குள்ளச்சாமி புகழ் : குருவின் திருவருளால் பிறப்பு மாறி அமர நிலை அடைந்துவிட்டேன். பராசக்தியின் திறம், சித்தின் இயல்பு, வானத்தைத் தீண்டும் வகை ஆகியவற்றை அவர் உணர்த்திக் காத்தார். அமைதி நிலை அளித்து குப்பாய ஞானத்தால் சாவு எனும் அச்சத்தைப் போக்கினார். தெளிந்த ஞானியான இக்குள்ளச்சாமி பாசத்தையும் அச்சத்தையும் நீக்கியவர்; அவர் பெருமை எவ்வளவு எழுதினும் அடங்காது. காயகற்பம் சாப்பிட்டவராகையால், அவருடைய வயதைக் கணக்கிட்டுச் சொல்ல யாராலும் இயலாது. 1930ஆம் ஆண்டில், பாரதி பாடல்களுக்குத் தகுந்த ஓவியங்கள் மித்திரனில் தொடர்ச்சியாக வெளிவந்தன. கே.ஆர். சர்மா என்ற ஓவியர் வரைந்த படமொன்றில், பாரதியார் தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, தரையில் அமர்ந்து, தம் முன்னுள்ள மேசைப் பெட்டிமேல் உள்ள ஏட்டினில் எழுதிக் கொண்டிருப்பதையும், அருகில் குள்ளச்சாமி நின்று கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

சுவாமி கல்யாண்தேவ்ஜி





Temple images



உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பட் என்ற ஊரில் 1876, ஜூன் 21ம் தேதி காலூராம் பிறந்தான். இளம்வயதிலேயே புதானா என்ற ஊரில் ஜமீன்தாராக விளங்கிய தன் தாய் மாமன் புல்லா பகத்தின் வீட்டிற்கு அடிக்கடி செல்வான். யாத்திரை செல்லும் பல சாதுக்கள் பகத்தின் வீடு தேடிச் செல்வர். அங்கு ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் நடக்கும். இந்தச் சூழ்நிலையில் காலூராம் வளர்ந்து வந்தான். அதிகாலையில் எழுந்து சுவாமி அறையில் அமர்ந்து மாமா படிக்கும் ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தை அன்றாடம் கவனமாகக் கேட்பான். ராமாயணமும் பஜனைகளும் காலூராமின் இதயத்தைக் கொள்ளை கொண்டன. தான் சந்தித்த சாதுக்களின் துறவையும் அவர்கள் அனுபவித்து வந்த ஆனந்தத்தையும் கவனித்த காலூராம் இறைவனைத் தரிசிப்பதற்காக ஒரு நாள் வீட்டைத் துறந்து கிளம்பி விட்டான். எந்த உடைமையும் இன்றி, பிச்சை எடுத்து உண்டு, வழி விசாரித்தபடி தான் காணத் துடித்த அயோத்தியை அடைந்தான். அங்கு சுவாமி ராமதாஸைச் சந்தித்தான். அந்த மகான் அவனுக்கு ஹிந்தி மொழியைக் கற்றுத் தந்தார். அறிவுக்கூர்மை மிகுந்த காலூராம் உற்சாகத்தோடு படிக்கத் துவங்கினான்.
காலூராம் ஹரித்வாரில் இருந்தபோது தனது 21-வது வயதில் விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். விவேகானந்தர் 1893-இல் சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றி அறிந்தார். சுவாமிஜி ஜெய்ப்பூர் வழியாக கேத்ரி செல்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரைத் தரிசிக்க எண்ணினார் காலூராம். காலூராம் ஜெய்ப்பூரை நோக்கி நடந்தார். ஆனால் பாவம்! அவர் ஜெய்ப்பூர் செல்வதற்குள் சுவாமிஜி கேத்ரிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். விவேகானந்தர் கல்கத்தா திரும்பும்போது வேறு வழியாகப் போய்விடுவார் என்று அறிந்தார். கேத்ரியை நடந்து சென்று அடைவது மிகக் கடினம். ஆனால் முன்வைத்த காலைப் பின் வைத்தறியாத காலூராம் கேத்ரியை நோக்கி நடந்தார். விவேகானந்தரை கேத்ரி மன்னரின் தோட்டமாளிகையில் தரிசித்து அருளுரைகளைப் பெற்றார். அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரைப் பின்பற்றத் தொடங்கினார்.
விவேகானந்தர் எனக்கு அளித்த மந்திரம் ஏழைகளுக்குச் சேவையாற்றுவதன் மூலம் கடவுளை அடையலாம் என்பதே.  கடவுளை நீ அடைய விரும்பினால் ஏழை, எளியவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், துன்பப்படுபவர்களுக்கும் சேவை செய் என்று கூறினார். அந்தத் தாக்கம் என்னை ஆட்கொண்டதால் என்னால் அதை மறக்கவோ, செயல்படுத்தாமல் இருக்கவோ முடியவில்லை. குடிசைகளில் வாழும் விவசாயிகளும் ஏழைக்கூலிகளும் கடவுளின் இரண்டு குழந்தைகள். காலையில் கட்டாயம் இரு ஒலிகள் நம் செவிகளை வந்தடையும். ஒன்று கஷ்டப்படுபவர்களின் கூக்குரல்; அடுத்தது, கோயில் மணியோசை. நாம் முதலில் கேட்ட ஒலிக்குச் செவிமடுத்து ஏழைகளின் துயரை நம் சக்திக்கேற்ப தீர்க்க முயல வேண்டும். அதன்பின் கோயிலுக்குப் போகலாம் என்பது நான் சுவாமிஜியிடம் கற்றது. சுவாமிஜியிடம் விடைபெற்று ஹரித்வார் திரும்பியதும், ரிஷிகேசில் முனி - கி -ரேதி என்ற இடத்தில் சுவாமி பூர்ணானந்தாவைச் சந்தித்தார். 1900-ல் அவர் காலூராமிற்கு சந்நியாசம் அளித்து சுவாமி கல்யாண்தேவ் என்ற நாமம் வழங்கினார். குருநாதரின் கட்டளைப்படி, இமயமலை சென்று சில ஆண்டுகள் கடுந்தவத்தில் ஈடுபட்டார் கல்யாண்தேவ். ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. மலையிலிருந்து இறங்கி, பலவிதத் தொண்டுகளில் ஈடுபட்ட பிறகே அவர் மனம் அமைதி அடைந்தது. சுவாமி கல்யாண்தேவ்ஜி தமது வாழ்க்கையைச் சமுதாய சேவை எனும் யாகத்திற்கே அர்ப்பணித்தார்.
தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலம், கிராமம் கிராமமாகச் சென்று ஏழைகளுக்குச் சேவையாற்றி, அவர்களது துயர் துடைத்தார். இடையறாத முயற்சியினால், 300-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சேவை நிறுவனங்களை நிறுவினார். உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களில் அவர் அமைத்த நிறுவனங்களுள் முறைசாராத் தொழில்நுட்பப் பள்ளிகள், ஆயுர்வேதக் கல்லூரி, மருத்துவமனைகள், ஸம்ஸ்கிருதப் பள்ளிகள், தர்மசாலைகள், காதுகேளாதவர் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பள்ளிகள், யோக மையங்கள், வயதான பசுக்களுக்கான சரணாலயங்கள், அநாதை விடுதிகள், சமய மற்றும் ஆன்மிக மையங்கள் போன்றவை அடங்கும். இவை போன்ற நவீன அமைப்புகளின் மூலம் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் சுவாமி கல்யாண்தேவ். தீண்டாமை, மதுப்பழக்கம், குழந்தைத் திருமணம் போன்ற சீர்கேடுகளுக்கு எதிராக அவர் மக்களை வழிநடத்தினார். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை நிறுவினாலும் கல்யாண்தேவ்ஜி அவை எதிலும் பதவி வகிக்கவில்லை! புறக்கணிக்கப்பட்டு இடிந்த நிலையிலிருந்த பல சமய, வரலாற்றுச் சின்னங்களையும் புதுப்பித்துள்ளார் சுவாமிகள்.

உதாரணமாக மீரட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள, பரீக்ஷித் அரசனுக்கு சுகமகரிஷி பாகவதம் கூறிய சுக்தல் என்ற இடத்தில் சுகதேவ ஆசிரமத்தையும், சேவா சமிதியையும் ஸ்தாபித்தார். எளிமையாக வாழ்ந்த கல்யாண்தேவ்ஜியை, காலை முதல் இரவு வரை பல தரப்பட்ட மக்கள் சந்தித்துத் தங்கள் பிரச்னைகளை அவரிடம் கூறி, தீர்வுகளைப் பெறுவார்கள். 1915-இல் காந்திஜியைச் சந்தித்தார் சுவாமி கல்யாண்தேவ். பண்டித நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற தலைவர்களும் இவருடன் நெருங்கிப் பழகினர். 1982-இல் பத்மஸ்ரீ விருதும், 2000-இல் பத்ம பூஷண் விருதும் வழங்கி, இந்திய அரசு இவரைக் கவுரவித்தது. தன் 128-வது வயதில்கூட சளைக்காமல் ஏழைகளுள் இறைவனைக் கண்டு சேவையாற்றியவர் சுவாமிகள். சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றிய இந்தத் தொண்டர், பயம் அறியாதவர். நோய்களையோ, கவலைகளையோ அவர் பொருட்படுத்தியதே இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறிய துறவுக்கும் தொண்டுக்கும் தமது வாழ்வை அர்ப்பணித்த சுவாமி கல்யாண்தேவ்ஜி ஜூலை 14, 2004-இல் மகாசமாதி அடைந்தார்.

பாபா ராமதாஸ் சுவாமிகள்




ஸ்ரீராம நவமி, சீதா கல்யாணம் கொண்டாடப்படும் நன்னாட்களில், ராம நாமத்தையே சதா சர்வ காலமும் தியானித்து, சுற்றியிருக்கும் எல்லாப் பொருட்களிலும் ராமனே இரண்டற கலந்திருப்பதாகப் பாவித்து, எல்லாமே ராமன், அனைத்தும் ராமனுக்கே சமர்ப்பணம்! என்று உபதேசித்த முற்றும் துறந்த ஒப்பற்ற மகான் பாபா ராமதாஸ் சுவாமிகள். பப்பா என்று எல்லோராலும் ஆசையுடன் அழைக்கப்பட்டவர். கேரளா காசர்கோடு ஜில்லாவில் கஞ்சன்கோடு கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தின் பெயரிலேயே விளங்கும் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது. இது மங்களூரு - öஷாரனூர் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. 1884-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பவுர்ணமி தினம்.. அன்றைய தினம் ராமதூதனான அனுமனின் ஜயந்தி விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த தருணத்தில், பகவான் நாராயணனின் பூரண அருளுடன் பாலகிருஷ்ணா ராவ் - லலிதா பாய் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. விட்டல் ராவ் எனப் பெயரிடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் ராமனுக்குத் தாசனாகவே ஆகி எல்லாராலும் வினயமுடன் பாபா ராமதாஸ் என அழைக்கப்பட்டான். 


விட்டலுக்குப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் செல்லவில்லை. ஆனால், நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் இருந்தது. நகைச்சுவை கலந்த தன் நாவன்மையால் மற்றவர்களை மயக்கித் தன்பால் ஈர்க்கும் சக்தியும் அவரிடம் இருந்தது! சிறு வயதிலிருந்தே பக்தி மார்க்கத்தில் மனதைப் பறிகொடுத்து, எப்போதும் ராம், ராம் என்று உச்சரித்தபடியே வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். காலப்போக்கில் மும்பையில் நெசவுத் தொழில் படிப்பில் பட்டம் பெற்று, கர்நாடகம் குல்பர்க்காவில் நூற்பாலை ஒன்றில் ஸ்பின்னிங் மாஸ்டராகப் பணியில் அமர்ந்தார். கையிலுள்ள காசையெல்லாம் பிறருக்கே அளித்து வள்ளலாகவே திகழ்ந்தார். 1908-ஆம் ஆண்டு திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியும் இல்லறத்தில் மனம் லயிக்காமல், தாமரை இலைத் தண்ணீர் போலவே இருந்தார். தன் தகப்பனாரிடமே, ஓம் ஸ்ரீராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம் என்ற மந்திர உபதேசம் பெற்றுக் கொண்டார். அதன் பின் ஊர் ஊராகத் திரியும் தேசாந்திரியாகி, உலகை ராமனின் உருவாகவே உருவகப்படுத்தி, எல்லோருக்கும் ராமனின் அருமைப் பெருமைகளைப் பற்றி உபதேசிக்கலானார். 


அனைவரும் அவரை மரியாதையுடன் பாபா என்றும், ராமனின் தாசர் என்று பொருள்படும்படி ராமதாஸ் எனவும் அழைக்கலாயினர். 1922-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்து அருள் பெற்றதும், அவரது வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. முதன் முதலாக, இவ்வுலக பந்தங்களிலிருந்து விலகி, அருணாசலத்தில் உள்ள குகை ஒன்றில் 21 நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அதிலிருந்து மீண்டெழுந்த வந்தவர், எல்லாமே ராமன்தான். அவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை! என்று உணர்ந்தார். அவரது பெருமை வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது ஒரு சிறு சம்பவம் மூலமாகத்தான். ஒரு முறை பாபா நகரத்துக்கு வெளியில் உள்ள ஒரு மலைக் குகையில் இருக்க நேர்ந்தது. அதை அறிந்த ஊர்மக்கள் அவரது அருள் பெறுவதற்காக வரத் தொடங்கினர். அங்கு தினமும் நடக்கும் சத் சங்கத்தில் பங்கேற்கத் தொடங்கினர். ராமனின் பெருமைகளைப் பற்றிக் கூறும் அவரது உபன்யாசங்கள் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. கரடுமுரடான அந்தக் குகையில் எவ்வித வசதியும் இன்றி அவர் இருப்பதைக் கண்ட பக்தர்கள், அவரது தேவைக்கு வேண்டிய கட்டில், மெத்தை, பாத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவித்தனர். அவற்றைப் பார்த்தும் பார்க்காமல் சலனமின்றி இருந்தார் பாபா. 


விலை உயர்ந்த பல பொருட்கள் அந்தக் குகையில் இருப்பதை அறிந்து கொண்ட ஒரு திருடன், இரவில் தனியே தியானத்தில் இருக்கும் பாபாவை நெருங்கி, எல்லாப் பொருட்களையும் படுக்கை விரிப்பில் வைத்து முடிந்து கொடுக்கச் சொன்னான். அவரும் சிரித்தவாறே, அவன் கூறியபடி செய்தார். ஒரு கையில் கட்டிலைத் தூக்கிக் கொண்டு, துணி மூட்டையை மற்றொரு கையில் ஏந்தியவாறு வெளியேறினான். பாபாவும் கவலை ஏதுமின்றி மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். மறுநாள் காலை குகைக்கு வந்த பக்தர்கள் திடுக்கிட்டனர். பாபாஜி! இங்கிருந்த பொருட்கள் எல்லாம் எங்கே போய்விட்டன சுவாமி? என அவர்கள் வினவ, அவரோ அமைதியாக, ராம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இருப்பது ஒரே ஒரு ராமன்தான். கொடுத்தது எல்லாம் அவனே... அவற்றை எடுத்துப் போனவனும் ராமனே! என்று கூறி வாய்விட்டுச் சிரிக்கலானார். அப்போதுதான் கூடி இருந்தோருக்கு சுவாமிஜியின் பெருமை புரிய ஆரம்பித்தது. ஒருவன் உலக பந்தங்களை அறவே துறந்து விட்டால், எப்படி அமைதியுடன் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டனர். பக்தியில் திளைத்த மனமும், ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்த அமைதியும்தான் உண்மையான மன நிறைவை அளிக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லித் தன் பக்தர்களுக்குப் புரிய வைத்து விட்டார் பாபா ராமதாஸ்! 


மற்றொரு சமயம், பவுர்ணமியன்று நாம ஜபம் செய்து கொண்டிருந்த ராமதாஸர் அருகில் கொடிய விஷமுடைய நாகம் ஒன்று வந்தது. அதைக் கண்டு மகான் பயம் கொள்ளாமல் இன்று ராமன் நாகருடைய உருவத்தில் வந்துள்ளார் என்று தன்னிடமிருந்த வெல்லத்தை அதற்கு சமர்ப்பித்து, ராமா ! இதை ஏற்றுக்கொள் என்றார். அந்த நாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை. இரண்டு மூன்று முறை தன்னுடைய நாக்கை நீட்டி வெல்லத்தைத் தீண்டி விட்டு அவருடைய நாம கீர்த்தனத்தைக் கேட்டவாறே சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்தது. காலைப் பொழுது விடியும் சமயத்தில் தானாகவே வந்த வழியிலேயே போய்விட்டது. பாம்பு தீண்டிய அந்த வெல்லத்தை ராமதாஸர், ராமருடைய பிரசாதம் என்று வாயில் போட்டுக்கொண்டார். தொடர்ந்து ஆனந்தமாக நாம ஜபம் செய்து வந்தார். பொழுது விடிந்தபிறகு, ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இதைக் கண்டு அதிசயித்தனர். பக்தியின் மூலம் இறையுணர்வை மக்களுக்குப் போதித்து, அன்பைக் காட்டினால் நிச்சயம் உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்தோங்கும். இதற்கு உரிய முக்கிய சாதனம் பகவான் ராமனின் திருவடிகளைச் சரணடைவதே ஆகும்! என்கிறார் பாபா ராமதாஸ். பாபாஜியும் அவரது சிஷ்யை பூஜ்ய மாதாஜி கிருஷ்ணா பாயும் சேர்ந்து 1931-ல் ஆரம்பித்த ஆனந்தாச்ரமம் கீர்த்தியுடன் காசர்கோட்டில் உள்ள கஞ்சன்கோட்டில் இயங்கி வருகிறது. அவரது முக்கிய சீடர்களில் ஒருவர்தான் திருவண்ணாமலை மகான் - யோகி ராம்சுரத் குமார் ஆவார்! பாபா ராமதாஸ் 1963-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2-ஆம் தேதி ஸித்தி அடைந்தார். அப்படிப்பட்ட ராம பக்த தாசரை நாமும் போற்றி வணங்குவோம்!

சத்ரு சம்ஹாரமூர்த்தி ஸ்வாமிகள்

 



திருச்சி மண்டல தீயணைப்பு நிலையங்களில் மகிழ மரத்தடியில் கோயில் கொண்டு அருள்புரிகிறார் சித்தர் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி. சித்தராக வாழ்ந்த இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அன்புகோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லமுத்து பிள்ளை, பொன்னம்மாள் தம்பதி. இவர்கள் திருச்சி மாவட்டம் வாதிரிப்பட்டியில் குடியிருந்தனர். இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக 13.6.1880ல் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி பிறந்தார். அவருக்கு கனகசபாபதி என பெயரிடப்பட்டது. 1901ம் ஆண்டு இவருக்கும், மாமன் மகள் சொர்ணத்தம்மாளுக்கும் திருமணம் நடந்தது. பொன்னமராவதியில் அரசு ஆசிரியராக வேலை பார்த்தார். நல்ல நூல்களை படிக்கும் வழக்கத்தை குருநாதர் மேற்கொண்டார். 1915ம் ஆண்டு சிதம்பரம் கோயில் கும்பாபிஷேகததிற்கு சென்ற குருநாதர் ஆறுமாதம் வரை வீடு திரும்பவில்லை. ஓராண்டு கழித்து குருநாதர் கண்டுபிடிக்கப்பட்டார். 1917ம் ஆண்டு மீண்டும் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. 11 ஆண்டுகள் கடந்த பின்னர் 1928ம் ஆண்டு திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் தவக்கோலத்தில் அடிகளார் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
திருச்சி கோர்ட் வளாகத்தில் உள்ள மகிழ மரத்தடியில் குருநாதர் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். ஒரு சமயம் சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பிள்ளை என்பவர், குருநாதரிடம் தனது வழக்கு தள்ளுபடியாக வேண்டும் என்று வேண்டினார். குருநாதரும் அவ்வாறே தள்ளுபடியாகும் என்று கூறி திருநீறு அளித்தார். அதன்படியே ஞானப்பிரகாசம் பிள்ளையின் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அது முதல் குருநாதரிடம் அவருக்கு நெருக்கம் அதிகமானது. இந்நிலையில் குருநாதர் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் படத்திற்கு கோர்ட் வளாகத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைகண்ட போலீஸ் அதிகாரி ஒருவர் குருநாதரை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். ஞானப்பிரகாசம் பிள்ளை ஓடிச்சென்று தடுத்து, குருநாதரை சோழமாதேவியில் தன் வீட்டில் தங்க வைத்தார். குருநாதரை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரிக்கு கை கால்கள் இழுத்துக் கொண்டது. உடன் சுவாமிகளை தேடி வந்தார். குருநாதரும் மன்னித்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் அந்த அதிகாரி சுவாமிகளை மீண்டும் கோர்ட் வளாகத்திற்கே அழைத்து வந்து பணிவிடை செய்தார்.
குருநாதர் 11.10.1938 செவ்வாய்கிழமை பரணி நட்சத்திரத்தில் காலை 6.15 மணிக்கு திருச்செந்தூர் திருமுன்பில் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அடிகள் எனப்பெயர் பெற்று ஒளிவடிவாய் அமைதி ஆலயம் பெற்றார். பின்னர் திருச்சி கோர்ட் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள மகிழ மரத்தடியில் சுவாமிகளுக்கு அழகிய கோயில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. குருநாதர் தியானம் செய்த மகிழ மரத்தை சுற்றி சுவர் எழுப்பி, ஞாபகச் சின்ன கல்வெட்டு வைக்கப்பட்டது. 1985ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்களுக்கு இவர் மீது பக்தி அதிகம் என்பதால் திருச்சி ஸ்ரீரங்கம், துறையூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், இலுப்பூர், ஆலங்குடி, நாகப்பட்டினம், நன்னிலம், கரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் குருநாதரின் ஆலயம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் பூஜையும், ஆண்டுதோறும் குருபூஜையும் நடந்து வருகிறது.

கம்பளிச் சித்தர்




 புதுச்சேரி மாநிலத்தில் பல  சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன. அவற்றில் கம்பளி ஞானதேசிக சுவாமிகள் ஜீவசமாதியும் ஒன்று. எப்போதும் இவர் ஒரு கம்பளிப் போர்வையைத் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தபடியால் மக்கள் இவரை கம்பளிச் சித்தர், கம்பளிச் சாமியார் என்று அழைத்தனர். இவர் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உடையவராம். தன் ஆட்காட்டி விரலாலேயே சுருட்டைப் பற்ற வைத்துக் கொள்வாராம். ஒருமுறை இவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தபோது, அதன் விஷம் இவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அந்தப் பாம்புதான் இறந்து கிடந்தது. நீரில் மிதப்பது, நீருக்குள் வெகுநேரம் மூழ்கியிருப்பது, ஓரிடத்தில் மறைந்து வேறொரு இடத்தில் தோன்றுவது போன்ற சித்துக்களில் வல்லவர்.
வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் இவரை விரட்டினால் அன்று முழுவதும் வியாபாரமே நடக்காதாம். கடைக்காரர், கம்பளிச் சித்தரிடம் மன்னிப்பு கேட்ட பிறகே வியாபாரம் மீண்டும் சிறப்பாக நடைபெறுமாம். இவருக்கு ரசவாத வித்தையும் தெரியும் என்பர். ஆனால் இவர் பொருளாசை, பொன்னாசை கொண்டவரல்ல. இந்த சித்தர் 1874-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், வெள்ளிக்கிழமை ஜலசமாதி ஆனார். மறுநாள், கம்பளி தண்ணியிலே என்ற அசரீரி கேட்ட மக்கள், இவருக்கு சமாதிக் கோயில் எழுப்பினர். சமாதிமீது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். தற்போது இந்த சமாதிக் கோயிலை, வெளிநாட்டில் இருந்து வந்து புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள ஒரு மேல்நாட்டுக் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். கம்பளிச் சித்தர் கோயில் விசாலமான நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. அடர்ந்த மரங்கள், பூஞ்செடிகள் நிரம்பிய இக்கோயிலை தரிசிப்பது மிகவும் சிறப்பான விஷயம். கம்பளிச் சித்தரின் சமாதிக்குப் பின்னால் சிவபெருமானது மிக அழகிய வெண்கல உருவம் உள்ளது. இது நம் கண்களையும் சிந்தையையும் கவர்ந்திழுக்கிறது. முன்புறம் இருக்கும் நந்தியின் கீழே கம்பளிச் சித்தரின் சிஷ்யர் அம்பலவாண சுவாமிகளின் சமாதி உள்ளது. கம்பளிச் சித்தரின் ஜீவசமாதிக்கு நேரே - வெளியிலும் ஒரு பெரிய நந்தி உள்ளது. 

பிராகாரத்தைச் சுற்றி வரும்பொழுது தனிச் சன்னதிகளில் விநாயகரும் முருகப் பெருமானும் அருள்புரிகின்றனர். இங்குள்ள தெய்வச் சிலைகள் அனைத்தும் கலைநயம் மிக்கவை. முருகனுக்கு எதிரிலுள்ள மயில் வாகனமும் புதுமையாக வடிக்கப்பட்டுள்ளது. முருகன் சன்னதியைக் கடந்து வந்தால் கஜலட்சுமி தனிச்சன்னதியில் அருளாட்சி செய்வதைக் காணலாம். வழக்கமாக, கஜலட்சுமியின் இருபுறங்களிலும் இரண்டு யானைகள் இருக்கும். இங்கு எதிரில் ஒரேயொரு யானை மட்டும் காணப்படுகிறது. இந்த யானையும் புதுமையாக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அடுத்து சென்றால், ரிஷப வாகனத்தில் சிவபெருமானும் சக்தியும் வீற்றுள்ளனர்.கோயிலின் வெளிப்புறம் உள்ள பரந்தவெளியில் ஒரு பக்கம் அம்மன் சிலையும், அதற்கு நேராக சிம்ம வாகனமும் உள்ளன. இன்னொரு பக்கம் பிள்ளையார், ஆஞ்சனேயர், சரஸ்வதி உருவங்கள் கலைநயத்துடன் காட்சி அளிக்கின்றன. ஆஞ்சனேயரின் திருவுருவம் கனிவான முகத்துடன் காட்சி அளிக்கின்றது. இன்னொரு பக்கம், கம்பளிச்சித்தரின் அருளாசி பெற்ற மேலும் ஏழு சித்தர்களின் சமாதிகளும் உள்ளன. அகத்திய முனிவரின் சிலையும் உள்ளது.
பரந்த வெளியின் முகப்பில் காணப்படும் ஓர் அழகிய வெண்கலச் சிலை பிரமிப்பூட்டுகிறது. சிவனும் சக்தியும் ஒரு அக்கினி வளையத்தின் நடுவே ஆனந்தத் தாண்டவமாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சிவபெருமானின் ஆட்காட்டி விரல்நுனி பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. கீழ்ப்பக்கம் தலை; உயரத் தூக்கிய கால்கள். சக்தியின் முகமும் கீழ்ப்பக்கம்; கால்கள் சிவனுடைய கால்களோடு பின்னிப் பிணைந்த திருக்கோலம். மலர்ந்த செந்தாமரைப் பூவின் இதழ்களுக்கு நடுவே மேற்கூறிய சிவன் - சக்தி உருவங்கள்! முப்பது அடிக்கு மேலே உள்ள இந்த ஆனந்தத் தாண்டவ சிலையின் கீழ்ப்பக்கம் ஒரு சிறிய கதவு உள்ளது. அக்கதவை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதாவது சிவராத்திரி அன்று மட்டுமே திறப்பார்கள். அதற்கு முப்பது அடிக்குக் கீழே ஒரு பாதாள லிங்கம் இருக்கிறது. அந்த லிங்கத்திற்கு சிவராத்திரி அன்று மட்டுமே பூஜை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு பதினோரு மணிக்குமேல் கதவு திறக்கப்பட்டு, மேல்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே கீழே இறங்கிச் சென்று சிவபூஜை செய்கிறார். பாதாள லிங்கத்திற்கு சுமார் அரை மணி நேரம் பூஜை நடக்கிறது. 

பூஜை செய்தவர் திரும்பி வந்து அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்குகிறார். சிவன் -சக்தி ஆனந்தத் தாண்டவச் சிலையைச் சுற்றிலும் பெரிய வட்டவடிவமான பள்ளம் உள்ளது. இவ்வட்டத்தைச் சுற்றி பக்தர்கள் தங்கள் கையில் விளக்குகளை ஏந்தியபடி சிவநாமத்தைச் சொல்லிய வண்ணம் வேண்டிக் கொள்கின்றனர். சுமார் ஆயிரம் பேர், கைகளில் விளக்குகளைத் தாங்கியபடி சிவபெருமானைப் போற்றிய அந்தக் காட்சி, காணக் கிடைக்காத அபூர்வக் காட்சியாகும். பூஜை முடிந்த பிறகு, பக்தர்கள் பாதாள லிங்கத்தை தரிசிக்கலாம். இந்த அரிய வாய்ப்பு மகா சிவராத்திரி அன்று மட்டுமே கிடைக்கும். கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில், புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அருகில் ருத்ரபூமிப் பகுதியில் உள்ளது.

மருதாநல்லூர் சுவாமிகள்




கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும் வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள் மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆவர். நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள். சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கி, மருதாநல்லூர் பாணி என்று புகழ்பாடும் அளவிற்கு அதை மக்களிடையே பரப்பியவர். 1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இளம் பிராயத்தில் வெங்கட்ராமன் என்ற பெயர் பெற்ற சுவாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை காவியங்களில் பற்றுடையவர்.
பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால், ராமஜபம் மட்டுமில்லாமல், உள்ளும்புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார். பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தை செய்த சிரார்த்தம் முதலான வைதீக காரியங்களில் பிழைப்புக்காக ஈடுபட்டு வந்தார். ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிரார்த்தம் செய்ய சென்ற போது, ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது. சிரார்த்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்தபோது, நீங்கள் இன்று வெகுநன்றாக சிரார்த்தம் செய்து வைத்தீர்கள், என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை நினைத்து திகைத்து நின்று விட்டார். இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று  குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது.
இது இவரது ஜப வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது. எனவே, தம் சொத்துக்களை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு ராமஜபம் செய்யும் ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமபெயரைச் சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதை கண்டார். தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படுகிறார்களே! ஆனால், இங்குள்ள மக்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்களே, என எண்ணியவராய், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒருநாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார். அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி,  உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய், என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி விட்டார். ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். 10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்மகர்ஜனையாக ராம் ராம் என்ற நாமம் காதில் கேட்டது. அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார், என்று சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார். மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார். இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, அதடே பரபிரும்மம் என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது. 1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

ஜட்ஜ் சுவாமிகள்




உலகில் ஆன்மீகப் பசியை தீர்க்க ஏராளமான மகான்கள் அவதரித்தனர். அவர்களில் ஒருவர் ஜட்ஜ் சுவாமி. இவரது அதிஷ்டானம் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திற்குள் அமைந்துள்ளது. சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி என்றும், ஜட்ஜ் சுவாமி என்றும் எல்லோராலும் அழைக்கப்படுவார். புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் நுழைந்ததும் நேர் எதிரில் ஜட்ஜ் சுவாமியின் அதிஷ்டானம் தென்படும். அவரை பக்தியுடன் வணங்கி இடது புறம் திரும்பினால் அஷ்டதசபுஜா மகாலட்சுமி துர்காதேவி சன்னதி உள்ளது. அம்பிகை மிக உயரமாக பத்து கரங்களுடன் இன்னருள் பாலிக்கிறாள். சற்றே நடந்தால் 18 சித்தர்களை தரிசிக்கலாம். சித்தர்களை அடுத்து நால்வர், 25 தலை கொண்ட சதாசிவர், அபீஷ்ட வரத மகாகணபதி, ஸற்குரு சாந்தானந்த சுவாமிகள், பஞ்சமுக மகா கணபதி, விஸ்வகர்மா, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஐயப்பன். பாலமுருகன், தெட்சிணாமூர்த்தி, தட்சிணகாளி, காசி விஸ்வநாதர், காவல் தெய்வமான பொற்பனை முனீஸ்வரர், கைவல்யானந்த சுவாமி, லட்சுமி நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
தியானம் செய்ய ஏற்ற தலம் இது. எவ்வளவு கஷ்டத்துடன் வந்தாலும் ஜட்ஜ் சுவாமியும் புவனேஸ்வரி மாதாவும் நம் மனதிற்கு சாந்தி தருவர். ஆந்திர மாநிலத்தில் தவளேஸ்வரம் என்ற ஊர் இருந்தது. ஒரு காலத்தில் கோதாவரி நதிக்கு அணைகட்ட எடுத்த முயற்சியின் போது இவ்வூர் அணைக்குள் மூழ்கிவிட்டது. இதனால், அங்கு வசித்த அந்தணர்கள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு விசாகப்பட்டினத்திற்கு குடி பெயர்ந்தவர்களில் ஒருவர் வேதமூர்த்தி சாஸ்திரிகள். பத்ராசலம் ராமபிரானின் தீவிர பக்தர் இவர். அந்த ஸ்ரீராமனின் அருளால், அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை பார்த்தவுடனேயே, இது உலகிற்கு ஒளி காட்ட வந்த குழந்தை என்பது தந்தைக்கு தெளிவாகி விட்டது. வேதக் கல்வி பயில மகனை அனுப்பினார். மகனின் விருப்பப்படி அவரை சட்டம் படிக்க வைப்பதற்காக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். மகன் கற்றுத் தேர்ந்தார். வக்கீல் தொழிலில் வருமானத்தை விட, புகழ் அதிகமாக சேர்ந்தது. ஏனெனில் இவர் நியாயமான வழக்குகளில் மட்டுமே ஆஜரானார். அவரது இயற்பெயர் என்னவென்று தெரியாததால் அவரை ஜட்ஜ் சுவாமி என்றே அவைரும் அழைத்தனர். ஜட்ஜ் சுவாமிக்கு திருமணமும் ஆனது. இரண்டு புத்திரர்களும் பிறந்தார்கள். 20 வருடங்கள் கழிந்தன.
இந்நேரத்தில் தான் இறைவன் அவரது பிறப்பின் நோக்கத்தை வெளிப்படுத்த நினைத்தான். திருவிதாங்கூர் ராஜ்யத்தில் நீதி பரிபாலனம் செய்ய மகாராஜா சரியான ஒருநபரை தேர்வு செய்ய விருப்பம் கொண்டார். அந்நேரத்தில் ஜட்ஜ் சுவாமி குறித்த தகவல் அவரை எட்டியது. தக்கார் ஒருவரை அனுப்பி, அவரிடம் பேசினார். வக்கீல் தொழிலை விட குறைந்த வருமானமே வரும் எனினும் கூட அவரும் சம்மதித்தார். திருவாதங்கூர் ராஜ்யத்தின் தலைமை நீதிபதியானார் ஜட்ஜ் சுவாமி. பல வழக்குகளிலு<ம் நடுநிலையோடு தீர்ப்பு சொன்னார். ஒருமுறை கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது, குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என சுவாமியின் மனதில் பட்டது. ஆனால் சட்டப்படி சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு, அவரை தண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சட்டம் பெரிதா, தர்மம் பெரிதா என்ற மனப்போராட்டத்தில் சிக்கினார். அவனை தண்டித்து விட்டால், அவன் குடும்பம் படப்போகும் பாட்டை எண்ணி வேதனைப்பட்டார். தன்னால் ஒரு நிரபராதியின் வாழ்வு அழியக்கூடாது எனக்கருதிய அவர். யாரிடமும் சொல்லாமல் கிளம்பி விட்டார். குடும்பத்தினருக்கும் அவர் சென்றது தெரியாது.
பின்பு ஆன்மஞானம் தேடி திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை என பல தலங்களுக்கு அலைந்தார். காளஹஸ்தி சென்றடைந்தார். தனக்கு வழிகாட்ட ஒரு சற்குரு வேண்டும். நான் யார் என்பதை எனக்கு உணர்த்த வேண்டும். எனக்கு வழிகாட்ட ஒரு குருவின் துணை வேண்டும் எனக் கருதியவர் ஒரு ஆஸ்ரமத்தின் முன் சென்று நின்றார். ஒரு வாரம் பட்டினியாய் கிடந்தார். அந்த ஆஸ்ரமத்தின் தலைவர் ராமகிருஷ்ண குரு மகராஜ், தன்னைத் தேடி வந்த அந்த ஞானதீபம் வாசலில் நின்றுகொண்டிருப்பதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். அவரை நேரில் வந்து வரவேற்றார். அவருக்கு தீட்சை அளித்தார். சதாசிவம் என்ற தீட்சாநாமம் அவருக்கு கிட்டியது. இதன் பிறகு அவர் சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமி என அழைக்கப்பட்டார். சதாசிவ அவதூதர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இருப்பினும் இவர் வகித்த நீதிபதி பதவியைக் கருத்தில் கொண்டு, மக்கள் ஜட்ஜ் சுவாமி என்ற திருப்பெயரிட்டே இன்றும் வழங்கி வருகின்றனர்.பல்வேறு தலங்களுக்கு சென்றார். கடைசியாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் வந்து தங்கியிருந்தார்.
இதனிடையே புதுக்கோட்டை கானாம்பேட்டை(பிரம்ம வித்யாபுரம்)யில் வசித்த நரசிம்ம கனபாடிகள், குருஸ்வாமி கனபாடிகள் ஆகியோரின் சகோதரரான கிருஷ்ணமூர்த்தி துறவறம் பூண்டார். அவர் சுவாமியைத் தேடி மானாமதுரை வந்தார். அவரே தனது ஞான வாரிசு என்பதை உணர்ந்த ஜட்ஜ் சுவாமி அவருக்கு சுயம்பிரகாசர் என் தீட்சாநாமம் வழங்கினார்.  இதன் பின் திருச்சி தாயுமானசுவாமி கோயிலுக்கு வந்தார் சுவாமி. அங்கு வந்ததும் தனது அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்தார். புதுக் கோட்டை நோக்கி நடந்தே சென்றார். இங்கிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ள நார்த்தாமலை சென்ற அவர், அங்குள்ள சிவன்கோயிலில் நிஷ்டையில் அமர்ந்தார். அவரது நிலையைக் கண்டு பரவசத்தில் மூழ்கினர் பக்தர்கள். அவரது தியானம் கலையாமல் அவரை அப்படியே ஒரு பல்லக்கில் ஏற்றி, புதுக்கோட்டை கொண்டு வந்தனர். அங்கு வந்ததும் சுவாமி இறைவனுடன் ஒன்றினார். புதுக்கோட்டை மன்னரின் திவான் சுவாமியை வணங்கினார். மன்னரின் உத்தரவுபடி நகரின் வடகிழக்கு பகுதியில், தற்போது கோயில் அமைந்துள்ள பகுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.