Showing posts with label சுவாமி கல்யாண்தேவ்ஜி. Show all posts
Showing posts with label சுவாமி கல்யாண்தேவ்ஜி. Show all posts

Friday, 30 August 2013

சுவாமி கல்யாண்தேவ்ஜி





Temple images



உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பட் என்ற ஊரில் 1876, ஜூன் 21ம் தேதி காலூராம் பிறந்தான். இளம்வயதிலேயே புதானா என்ற ஊரில் ஜமீன்தாராக விளங்கிய தன் தாய் மாமன் புல்லா பகத்தின் வீட்டிற்கு அடிக்கடி செல்வான். யாத்திரை செல்லும் பல சாதுக்கள் பகத்தின் வீடு தேடிச் செல்வர். அங்கு ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் நடக்கும். இந்தச் சூழ்நிலையில் காலூராம் வளர்ந்து வந்தான். அதிகாலையில் எழுந்து சுவாமி அறையில் அமர்ந்து மாமா படிக்கும் ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தை அன்றாடம் கவனமாகக் கேட்பான். ராமாயணமும் பஜனைகளும் காலூராமின் இதயத்தைக் கொள்ளை கொண்டன. தான் சந்தித்த சாதுக்களின் துறவையும் அவர்கள் அனுபவித்து வந்த ஆனந்தத்தையும் கவனித்த காலூராம் இறைவனைத் தரிசிப்பதற்காக ஒரு நாள் வீட்டைத் துறந்து கிளம்பி விட்டான். எந்த உடைமையும் இன்றி, பிச்சை எடுத்து உண்டு, வழி விசாரித்தபடி தான் காணத் துடித்த அயோத்தியை அடைந்தான். அங்கு சுவாமி ராமதாஸைச் சந்தித்தான். அந்த மகான் அவனுக்கு ஹிந்தி மொழியைக் கற்றுத் தந்தார். அறிவுக்கூர்மை மிகுந்த காலூராம் உற்சாகத்தோடு படிக்கத் துவங்கினான்.
காலூராம் ஹரித்வாரில் இருந்தபோது தனது 21-வது வயதில் விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார். விவேகானந்தர் 1893-இல் சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவைப் பற்றி அறிந்தார். சுவாமிஜி ஜெய்ப்பூர் வழியாக கேத்ரி செல்கிறார் என்பதை அறிந்தவுடன் அவரைத் தரிசிக்க எண்ணினார் காலூராம். காலூராம் ஜெய்ப்பூரை நோக்கி நடந்தார். ஆனால் பாவம்! அவர் ஜெய்ப்பூர் செல்வதற்குள் சுவாமிஜி கேத்ரிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். விவேகானந்தர் கல்கத்தா திரும்பும்போது வேறு வழியாகப் போய்விடுவார் என்று அறிந்தார். கேத்ரியை நடந்து சென்று அடைவது மிகக் கடினம். ஆனால் முன்வைத்த காலைப் பின் வைத்தறியாத காலூராம் கேத்ரியை நோக்கி நடந்தார். விவேகானந்தரை கேத்ரி மன்னரின் தோட்டமாளிகையில் தரிசித்து அருளுரைகளைப் பெற்றார். அவர் கூறிய கருத்துகளைக் கேட்டு அவரைப் பின்பற்றத் தொடங்கினார்.
விவேகானந்தர் எனக்கு அளித்த மந்திரம் ஏழைகளுக்குச் சேவையாற்றுவதன் மூலம் கடவுளை அடையலாம் என்பதே.  கடவுளை நீ அடைய விரும்பினால் ஏழை, எளியவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், துன்பப்படுபவர்களுக்கும் சேவை செய் என்று கூறினார். அந்தத் தாக்கம் என்னை ஆட்கொண்டதால் என்னால் அதை மறக்கவோ, செயல்படுத்தாமல் இருக்கவோ முடியவில்லை. குடிசைகளில் வாழும் விவசாயிகளும் ஏழைக்கூலிகளும் கடவுளின் இரண்டு குழந்தைகள். காலையில் கட்டாயம் இரு ஒலிகள் நம் செவிகளை வந்தடையும். ஒன்று கஷ்டப்படுபவர்களின் கூக்குரல்; அடுத்தது, கோயில் மணியோசை. நாம் முதலில் கேட்ட ஒலிக்குச் செவிமடுத்து ஏழைகளின் துயரை நம் சக்திக்கேற்ப தீர்க்க முயல வேண்டும். அதன்பின் கோயிலுக்குப் போகலாம் என்பது நான் சுவாமிஜியிடம் கற்றது. சுவாமிஜியிடம் விடைபெற்று ஹரித்வார் திரும்பியதும், ரிஷிகேசில் முனி - கி -ரேதி என்ற இடத்தில் சுவாமி பூர்ணானந்தாவைச் சந்தித்தார். 1900-ல் அவர் காலூராமிற்கு சந்நியாசம் அளித்து சுவாமி கல்யாண்தேவ் என்ற நாமம் வழங்கினார். குருநாதரின் கட்டளைப்படி, இமயமலை சென்று சில ஆண்டுகள் கடுந்தவத்தில் ஈடுபட்டார் கல்யாண்தேவ். ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு நெருடல் இருந்தது. மலையிலிருந்து இறங்கி, பலவிதத் தொண்டுகளில் ஈடுபட்ட பிறகே அவர் மனம் அமைதி அடைந்தது. சுவாமி கல்யாண்தேவ்ஜி தமது வாழ்க்கையைச் சமுதாய சேவை எனும் யாகத்திற்கே அர்ப்பணித்தார்.
தொடர்ந்து ஒரு நூற்றாண்டு காலம், கிராமம் கிராமமாகச் சென்று ஏழைகளுக்குச் சேவையாற்றி, அவர்களது துயர் துடைத்தார். இடையறாத முயற்சியினால், 300-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சேவை நிறுவனங்களை நிறுவினார். உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களில் அவர் அமைத்த நிறுவனங்களுள் முறைசாராத் தொழில்நுட்பப் பள்ளிகள், ஆயுர்வேதக் கல்லூரி, மருத்துவமனைகள், ஸம்ஸ்கிருதப் பள்ளிகள், தர்மசாலைகள், காதுகேளாதவர் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பள்ளிகள், யோக மையங்கள், வயதான பசுக்களுக்கான சரணாலயங்கள், அநாதை விடுதிகள், சமய மற்றும் ஆன்மிக மையங்கள் போன்றவை அடங்கும். இவை போன்ற நவீன அமைப்புகளின் மூலம் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் சுவாமி கல்யாண்தேவ். தீண்டாமை, மதுப்பழக்கம், குழந்தைத் திருமணம் போன்ற சீர்கேடுகளுக்கு எதிராக அவர் மக்களை வழிநடத்தினார். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை நிறுவினாலும் கல்யாண்தேவ்ஜி அவை எதிலும் பதவி வகிக்கவில்லை! புறக்கணிக்கப்பட்டு இடிந்த நிலையிலிருந்த பல சமய, வரலாற்றுச் சின்னங்களையும் புதுப்பித்துள்ளார் சுவாமிகள்.

உதாரணமாக மீரட்டிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள, பரீக்ஷித் அரசனுக்கு சுகமகரிஷி பாகவதம் கூறிய சுக்தல் என்ற இடத்தில் சுகதேவ ஆசிரமத்தையும், சேவா சமிதியையும் ஸ்தாபித்தார். எளிமையாக வாழ்ந்த கல்யாண்தேவ்ஜியை, காலை முதல் இரவு வரை பல தரப்பட்ட மக்கள் சந்தித்துத் தங்கள் பிரச்னைகளை அவரிடம் கூறி, தீர்வுகளைப் பெறுவார்கள். 1915-இல் காந்திஜியைச் சந்தித்தார் சுவாமி கல்யாண்தேவ். பண்டித நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற தலைவர்களும் இவருடன் நெருங்கிப் பழகினர். 1982-இல் பத்மஸ்ரீ விருதும், 2000-இல் பத்ம பூஷண் விருதும் வழங்கி, இந்திய அரசு இவரைக் கவுரவித்தது. தன் 128-வது வயதில்கூட சளைக்காமல் ஏழைகளுள் இறைவனைக் கண்டு சேவையாற்றியவர் சுவாமிகள். சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றிய இந்தத் தொண்டர், பயம் அறியாதவர். நோய்களையோ, கவலைகளையோ அவர் பொருட்படுத்தியதே இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறிய துறவுக்கும் தொண்டுக்கும் தமது வாழ்வை அர்ப்பணித்த சுவாமி கல்யாண்தேவ்ஜி ஜூலை 14, 2004-இல் மகாசமாதி அடைந்தார்.