புராண காலத்தில் மட்டுமன்றி சமீபகாலத்திலும்கூட
எத்தனையோ மகான்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுள்
ஒருவர்தான் கோணிப்பை சாமியார். இடுப்பில் கிழிந்த கோணிப்பையை மட்டுமே இவர்
அணிந்ததால் கோணிப்பை சாமியார் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதுவே இவர்
பெயராக நிலைத்து விட்டது. வேலூர் மாவட்டம் திருவலத்தில் உள்ளது
வில்வநாதீஸ்வரர் திருத்தலம். இது ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது.
அவனது மனைவியின் தாய் வீடு, திருவலம் நகரம்தான். அரசனால் கட்டப்பட்ட
அரனாலயம் அநேக ஆண்டுகள் கடந்த நிலையில் புதர் மண்டி கவனிப்பார் எவரும்
இன்றிக் கிடந்தது. அந்த தருணத்தில்தான் சிவானந்தன் என்பவர் அங்கு வந்து
சேர்ந்தார். 1960-களில் வந்த அவர், ஆலயத்தின் அவல நிலை கண்டு வருந்தினார்.
மண்டிக்கிடந்த புதர்களை தன்னந்தனி ஆளாய் களையத் தொடங்கினார். முதலில் அதைப்
பார்த்த திருவலம் நகரவாசிகள் யாரோ பித்துப் பிடித்தவர். வீட்டில் இருந்து
விரட்டப்பட்டவர் என்றெல்லாம் அவரை ஏளனம் செய்தனர். பிற்காலத்தில் அவர்
பெரிய யோகியாக விளங்கப் போகிறார் என்பது, பாவம் அவர்கள் யாருக்கும்
தெரியவில்லை. அந்த பக்தரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலைச்
சீரமைப்பதில் மட்டுமே நேரத்தைச் செலவழித்தார். அதோடு, கோயிலுக்கு ஏழைகள்
எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு வயிராற கூழ் ஊற்றவும் ஏற்பாடு செய்தார்.
தாமே முயன்று கோயிலைச் சீரமைத்து அவரே கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது ஊரே வியந்து நின்று பார்த்தது. அவர்மேல் மதிப்பும் மரியாதையும் வைத்தது. கோயிலின் உள்ளே உள்ள வில்வ மரத்தின் கீழ் அமர்வதுதான் அவரது வாடிக்கை. அதிகம் பேசாமல் மவுனமாகவே இருந்த அவர் ஏதாவது சொன்னால், அந்த வாக்கு அப்படியே பலித்தது. செய்தி ஊர் முழுவதும் பரவ, அவரை தரிசிக்க பலதரப்பட்ட மனிதர்கள் குவிந்தனர். கை நீட்டிக் காசோ பணமோ வாங்க மாட்டார் அவர். அவர் அருகில் யாராவது காசை வீசிவிட்டுச் சென்றால், தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு சின்னக் குச்சியால் அந்தக் காசுகளை தள்ளிக் கொடுப்பார். அவர் ஆசியால் வாழ்வில் வளமும் நலமும் அடைந்தோர் பலர். எல்லாம் இருந்தபோதிலும் கோயில் திருப்பணியில்தான் அதிக ஆர்வம் காட்டிய கோணிப்பை சாமியாரின் தலைமையில் எட்டு முறை கும்பாபிஷேகம் கண்டது கோயில். இக்கோயிலுக்கென நால்வர், நாயன்மார்கள், தொகையடியார்கள் சிலைகளும், செப்புத் திருமேனிகளும் செய்து வைத்துள்ளார். அதோடு கந்தகோட்டம், திருத்தணி, பொள்ளாச்சி கோயில்களுக்கு மரத்தேரும், வெள்ளித் தேரும் அளித்திருக்கிறார். திருப்பதி கோயிலுக்கும்கூட உதவிகள் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். இவர் அளித்த வில்வ விபூதி மகிமையால் பல நோய்கள் குணமாகியுள்ளது என்றும்; குழந்தை வரம் கிடைத்தது என்றும் பல பக்தர்கள் சொல்கிறார்கள். பக்திப் பணியோடு சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டிருந்த இவர், தான் ஜீவ சமாதியடையும்போது என்ன செய்ய வேண்டும், அதன்பின் அமையப் போகும் அதிஷ்டானம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் முன்கூட்டியே வடிவமைத்துக் கட்டிவைத்தார். பின்னர், 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று திருவலம் கோயிலின் நுழைவாயிலுக்கு இடது புறத்தில் ஜீவ சமாதியாகிவிட்டார். கோணிப்பை சாமியார் எங்கள் ஊருக்கு வந்த பின்னர்தான் பல நன்மைகள் நடந்தது. அதனால் அவரை மகானாகவும் தெய்வமாகவும் போற்றுகிறோம். இன்றும் எங்கள் மனதில் அவர் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்கிறார்கள். வேலூர் மாவட்டம் திருவலத்தில் கோணிப்பை சாமியாரின் ஜீவசமாதி உள்ளது. |
நமது புனித பாரதநாட்டில் உலவிய,உலவி வரும் சித்தர்கள் கோடானுகோடிஅதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நம்மிடையே நடமாடி சமாதி நிலை ஏற்ற சித்தர்கள் மிக பலர். இந்த சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும்.இவர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டு,நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்தி, நம்புவர்களை உடன் இருந்து காத்து,வழி காட்டுபவர்கள்.அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம்.அப்படிப்பட்ட சித்தர்களை , ஜீவசமாதிகளை பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Friday, 30 August 2013
கோணிப்பை சித்தர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment