Friday, 30 August 2013

சித்தேஸ்வர சுவாமிகள்





அரசனுக்கும் உயரத்தில் ஆசனமிட்ட சித்தர்: தமிழ்நாட்டில் வேலூரை அடுத்துள்ள ஆம்பூரிலும், கர்நாடகாவில் பெல்காம் மாவட்டத்தில் சாவளிகே என்ற இடத்திலும் சித்தேஸ்வர சுவாமிகள் எனும் சித்தர் சமாதி அடைந்துள்ளார். 

இது மட்டுமல்ல, இவர் வாழ்வில் மிகப்பல அற்புதங்களையும் செய்திருக்கிறார். குல்பர்காவில் கொல்லூர் எனும் கிராமத்தில் பிறந்த சிவலிங்கேஸ்வரர் சிறு வயதிலிருந்தே தெய்வீகம் நிறைந்தவராகவே இருந்தார். பலபேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். ஒரு முறை இப்பகுதிக்குப் படையெடுத்து வந்த அவுரங்கசிப் நதியின் மீது ஆசனமிட்டு நமாஸ் செய்தார். அவருக்கு மேல் அந்தரத்தில் பத்மாசனமிட்டு சுவாமிகள் அமர்ந்திருந்ததைப் பார்த்துத் தன் பெருமையை ஒழித்தார் மன்னர். சுவாமிகளின் அறிவுரைப்படி அவரவர் நாடுகளை அவரவரிடமே திருப்பித்தந்தார். 

இப்படிப் பல வருடங்கள் வாழ்ந்த சித்தேஸ்வர சுவாமிகள் கடைசியில் சாவளிகே என்ற இடத்தில் பல வருடங்கள் வாழ்ந்து, உயிரோடு தன்னை குகையில் வைத்து மூடுமாறு செய்தார். ஒரு வாரம் கழித்து குகையைத் திறந்தபோது அங்கு விபூதிக் குவியல் இருப்பதைக் கண்டனர். சாவளிகே மடம் பின்னர் பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றது. கர்நாடகாவில் அப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டபோது வீரசைவ லிங்காயத்து சமூகத்தினர் பலரும் தெற்கே வந்தனர். இவர்களுள் பல குடும்பங்கள் ஆம்பூரில் குடியேறின. சாவளிகே மடத்தில் சமாதியடைந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இங்கு கடைத்தெருவில் அமர்ந்து, பலருக்கும் விபூதி கொடுத்து குணமடையச் செய்வதைப் பார்த்த இவர்கள் அதிசயம் அடைந்தனர். சுவாமிகளை மிகுந்த மரியாதையுடன் கொண்டாடினர்.

இச்சமயத்தில் இப்பகுதி வழியே சென்ற ஆற்காடு நவாபின் குதிரையின் வேகத்திற்கு ஏற்ப, தான் அமர்ந்திருந்த குட்டிச் சுவரை ஓடச் செய்தார்! வியந்து போன நவாப், சுவாமிகளை வணங்கினார். அவர் தங்குவதற்கான இடத்தையும் தானமளித்தார். அந்த இடத்திலேயே சமாதியடைந்த சுவாமிகள், வானில் பறக்கும் பறவைகளின் நிழல் தன் சமாதி மேல் பட்டாலும் அவைகளுக்கும் மோட்சம் கிடைக்கும் என்றார். அதனால் சமாதியின் மேல் விதானத்தை மூடாமலே கோயில் அமைத்தனர். 

அக்கோயிலையே இப்போது புணருத்தாரணம் செய்து மிகச் சிறப்பாக திருப்பணி செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment