மலைகளுக்கும் மகான்களுக்கும் பெயர் பெற்றது நம்
பாரத தேசம். இன்றைக்குத் திகிலைக் கிளப்பி, மனிதர்கள் நடமாடுவதற்கு சவாலாக
இருக்கும் பல மலைகளில் சித்த புருஷர்கள் ஒரு காலத்தில் தவ வாழ்க்கை
வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு காடு மலைகளியே சுற்றித்திரிந்த
சித்தபுருஷர்கள் நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றில் இருந்து தடம் மாறிப்
போன மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்கு ஆசி புரிவதற்கென்றே மலைகளை
விட்டு இறங்கி வந்தார்கள். பதிணெண் சித்தர்களில் ஒருவரான போகரின் வழியைப்
பின்பற்றி எண்ணற்ற சித்தர்கள் அவதரித்தனர். இவர்களில் ஓத சுவாமிகளும்
ஒருவர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் பின்பக்கம் இவர்
ஜீவசமாதி அடைந்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காத்து
அருள்புரிந்து வருகிறார். ஸ்ரீமத் ஓத சுவாமிகள் என்று பக்தர்களால்
அழைக்கப்படும் இவரை சுப்பையா சுவாமிகள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சுவாமிகளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவரது திரு அவதாரமே
மிகவும் சிலிர்க்க வைக்கும் ஒன்று. கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம்
திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் ஓத சுவாமிகள். காசியில் வாழும்
விஸ்வநாதரின் ஆசியோடும், அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஓதசுவாமிகள்.
பழநியில் இருந்து சுமார் 11 கி.மீ., தொலைவில் உள்ள பாலசமுத்திரம் என்கிற
கிராமத்தில் வாழ்ந்து வந்தது சுவாமிகளின் குடும்பம். ஓத சுவாமிகளின்
தந்தையாரான பரமேஸ்வர ஐயர், இறை பக்தி மிக்கவர். ஒருமுறை வடமாநிலங்களுக்கு
÷க்ஷத்திராடனம் சென்றார்.
வாகன வசதி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் சுமார் ஏழு வருடங்கள் நீடித்தது இந்த யாத்திரை. அதாவது வீட்டை விட்டுக் கிளம்பி, ஏழு வருடங்களுக்குப் பிறகு தான் மீண்டும் வீடு திரும்பினார் பரமேஸ்வர ஐயர். அந்தக் காலத்தில் யாத்திரை என்றால் இப்படித்தான் இருக்கும்.யாத்திரை நிகழ்ந்த ஏழு வருடமும் கடுமையான விரதம். காய்ந்த சருகு மட்டுமே உணவு. எங்காவது நீர்நிலைகளில் ஓடுகின்ற தண்ணீரை மட்டுமே அருந்துவார். இப்படிக் கஷ்டப்பட்டுச் சென்று காசி விஸ்வநாதருக்கு கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்து ஆனந்தப்பட்டார் பரமேஸ்வர ஐயர். அந்த ஜோதிர்லிங்க சொரூபனின் சன்னதியிலேயே ஆசிர்வாதமும் கிடைத்தது. பரமேஸ்வரா... இந்த காசிவிஸ்வநாதனே உனக்கு மகனாகப் பிறக்க போகிறான் பார், என்று அங்கே ஓர் அசரீரி வாக்கு எழுந்தது. மனம் மகிழ்ந்தார் பரமேஸ்வர ஐயர். அதன் பின் பூரி, திருப்பதி, ராமேஸ்வரம் முதலான ÷க்ஷத்திரங்களைத் தரிசனம் செய்து பாலசமுத்திரம் திரும்பினார் பரமேஸ்வரர். மகான் வழங்கிய ஆசி மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது. தன் மனைவியிடம் அவ்வப்போது இதைச் சொல்லி பூரிப்பார். உத்தம மகன் பிறக்கப் போகும் நாளை அந்தப் பெற்றோர் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலங்கள் ஓடின. காசி விஸ்வநாதரின் அருளால் பரமேஸ்வரரின் துணைவியார் கருவுற்றார். பிரசவ காலமும் நெருங்கியது. பிரசவ வலி ரொம்பவும் வாட்டியது. எனவே உள்ளூரில் இருந்த மருத்துவச்சியின் துணையோடு வீட்டின் தனியான ஓர் அறையில் கிடத்தப்பட்டார் பரமேஸ்வரரின் துணைவியார். வீட்டிற்கு வெளியே தவிப்புடன் காணப்பட்டார் பரமேஸ்வரர். என்னதான் இறைவனின் ஆசியோடு மகன் பிறக்கப் போவதாக திருவாக்கு மலர்ந்திருந்தாலும், உள்ளே தன் மனைவி படும் அவஸ்தையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சில நிமிடங்கள் உருண்டோடின. உள்ளே எந்தவிதமான அலறல் சத்தமும் இல்லை. மருத்துவச்சியின் ஆறுதல் குரலும் கேட்கவில்லை. மாறாக வேத ஒலி கன கம்பீரமாக அட்சர சுத்தமாகக் கேட்டது. பிரசவ அறைக்குள் இருந்து வேத ஒலி எப்படி? வெளியே தவிப்புடன் நின்றிருந்த பரமேஸ்வர ஐயரும், அவரது உறவினர்களும் பிரமித்தனர். மருத்துவச்சி வந்து தகவல் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் வெளியே காத்திருந்த அனைவருக்கும் பிரமிப்பு தாங்க முடியவில்லை. எனவே, கதவை வேகமாகத் திறந்து உள்ளே நுழைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் நிலை குலைந்து போனார்கள். பேசுவதற்கு வார்த்தைகள் எதுவும் எழவில்லை. உள்ளே ரோஜாப்பூக்களுக்கு நடுவில் ஒரு ஆண் குழந்தை புன்னகை ததும்பும் முகத்தோடு காணப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகளின் அருளோடு அக்குழந்தை பிறந்தது. இவ்வாறு பிறக்கும் போதே பல அற்புதங்களை நிகழ்த்தினார் ஓத சுவாமிகள். குழந்தைக்கு முருகப்பெருமானின் திருநாமமான சுப்ரமண்யன் என்பதையே சூட்டி விட்டார் பரமேஸ்வர ஐயர். பின்னாளில் இவர் சுப்பையா என எல்லோராலும் அழைக்கப்பட்டார். சுவாமிகளுடைய ஐந்தாவது வயதில் அவருக்கு உபநயனம் நடந்தது. சிறு வயதில் இருந்தே இறை இன்பத்தில் நாட்டம் அதிகம் கொண்டவராகத் திகழ்ந்தார் சுவாமிகள். ஓம் என்றும் ஆதிசங்கரா என்றும் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் தந்தையார் மறைந்து விட்டார். அதன் பின் காடு, மலை என்று சுற்றித் திரிய ஆரம்பித்தார். ஒருமுறை தன் தாயாரிடம் நீ என்னை எப்போடு கூப்பிடுகிறாயோ அப்போது நான் வருகிறேன். எனக்கென்று சில பணிகள் இருக்கின்றன என்று சொல்லி, அன்னையின் ஆசியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். தனது எட்டு வயதிலேயே அஷ்டமா சித்திகளும் சுவாமிகளுக்கு கைவரப் பெற்றதாகச் சொல்வர். தெருவில் குடிநீர் எடுத்துக்கொண்டு போகும் ஒரு வண்டியில் உள்ள ஒட்டுமொத்த நீரையும் ஒரே மடக்கில் விறுவிறுவெனக் குடித்து விடுவார். பின்பு அதை அப்படியே உமிழ்ந்து விடுவார். இவ்வாறு எண்ணற்ற லீலைகளை சிறு வயதிலேயே நிகழ்த்திக் காண்பித்தார் சுவாமிகள். பகவான் ரமண மகரிஷியைத் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த பெருமை ஓத சுவாமிகளையே சாரும். ஸ்ரீரமணர் திருச்சுழியில் பிறந்தவர். தந்தையின் பணி மாறுதல் காரணமாக அவரது குடும்பம், திண்டுக்கல்லுக்கு இடம் பெயர்ந்தது. அபிராமி அம்மன் கோயில் அருகே ரமணரின் குடும்பம் வசித்து வந்தது. அப்போது நகராட்சி பள்ளியில் சேர்க்கப்பட்ட ரமணர் துவக்கத்தில் ஒழுங்காகத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால், ஒருமுறை அவதூராகத் தெருக்களில் வலம் வரும் ஓதசுவாமிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவர் செல்லும் இடமெல்லாம் ரமணரும் செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சிறுவனான ரமணரை அடையாளம் கண்டுகொண்ட ஓதசுவாமிகள், அவரை அருகே அழைத்து திருவண்ணாமலைக்குச் செல்... அங்கே உனக்கான பணி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலையார் உன்னை வரவேற்கக் காத்திருக்கிறார் என்றார். அதன்பின் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு புறப்பட்டார் ரமணர். ஒரு சமயம் சிருங்கேரி மடத்தின் முப்பத்திரண்டாவது பீடாதிபதியான ஜகத்குரு நரசிம்ம பாரதி சுவாமிகள் திண்டுக்கலுக்கு விஜயம் செய்திருந்தார். அபிராமி அம்மன் ஆலயத்தின் எதிரே இருக்கும் சாலையில் சிருங்கேரி மடம் இருந்தது. அங்கே முகாமிட்டிருந்தார் ஆச்சார்யர். சிருங்கேரி மடத்தின் மீது அபிமானம் கொண்ட எண்ணற்ற பக்தர்கள் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வந்து திண்டுக்கல் மடத்தில் குவிந்திருந்தார்கள். பக்தர்களுக்கு ஆசி வழங்க வேண்டும் என்பதற்றகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு தெருவழியாக செல்லும் போது அங்குள்ள சாக்கடை நீரில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார் ஓத சுவாமிகள். சிருங்கேரி ஆச்சாரியாரின் பல்லக்கை பார்த்து பெருமூச்சுவிட்டு ஹும்... பல்லக்கு, பட்டு பீதாம்பரம் தெரு வழியே போகுது பார் என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். இதை ஞானத்தால் உணர்ந்த பாரதி சுவாமிகள் பல்லக்கை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி நடந்து வந்தார். சாக்கடையில் அமர்ந்து ஸ்நானம் செய்து கொண்டிருந்த ஓதசுவாமிகளின் அருகே வந்தார் ஆச்சார்யார். அண்ணா என்ன கோலம் இது! என்று சுவாமிகளை பார்த்துக் கேட்டார். ஓ.. நரசிம்மனா வா நரசிம்மா, வா வா என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் இவன் பித்து பிடித்தவன், இவனை ஒரு பொருட்டாக மதிக்காதீர்கள் என்று கூறினர். அப்படியெல்லாம் கூறாதீர்கள் என்ற ஆச்சார்யார் மற்றவர்களின் அழுக்கைப் போக்குவதற்காகவே இவ்வாறு நீராடுகிறார். மாபெரும் சித்த புருஷர். இறை பக்தியில் இத்தகைய நிலையை அடைவது என்பது எவருக்கும் எளிதில் கைகூடாது. நானும் இது போன்ற நிலையை அல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். பின்னர் சிருங்கேரி ஆச்சாரியாரின் மடத்திற்கு சென்ற ஓத சுவாமிகள் அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறு பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருப்பார் ஓதசுவாமிகள். இவ்வாறு பல லீலைகளை செய்து கொண்டிருந்த சுவாமிகள் ஒரு நாள் அவரது பக்தரான சதாசிவ ஐயரின் கனவில் தோன்றி, சதாசிவா... இன்னும் சில நாட்களுக்குள் நான் சித்தி ஆகப் போகிறேன். நிரந்தரமாகக் குடிகொள்ள எனக்கென்று ஒரு இடத்தை தேர்வு செய் என்று சொல்லி மறைந்தார். ஓத சுவாமிகள் 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேத சித்தி ஆனார். அன்று திருவாதிரை நட்சத்திரம். சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தற்போது அதிர்ஷ்டானம் அமைக்கப்பட்டு அனைவரும் ஓதசுவாமிகளை வழிபட்டு வருகின்றனர். |
நமது புனித பாரதநாட்டில் உலவிய,உலவி வரும் சித்தர்கள் கோடானுகோடிஅதுவும் கடந்த 20 ஆண்டுகளுக்குள் நம்மிடையே நடமாடி சமாதி நிலை ஏற்ற சித்தர்கள் மிக பலர். இந்த சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும்.இவர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டு,நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்தி, நம்புவர்களை உடன் இருந்து காத்து,வழி காட்டுபவர்கள்.அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்பட்டதே இந்த இணையதளம்.அப்படிப்பட்ட சித்தர்களை , ஜீவசமாதிகளை பற்றி இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Friday, 30 August 2013
ஓத சுவாமிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment