Tuesday, 30 August 2022

மடப்புரம் மகான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 187-வது குருபூஜை

 



 29.08.2022 திங்கள்கிழமை 187-வது குருபூஜை விழா காணும் மடப்புரம் மகான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள்
🌹🍀🌹🍀🌹🍀🌹🍀🌹
ஆரூரா!தியாகேசா!!
🌻☘️🌻☘️🌻☘️🌻☘️🌻
    நால்வர் பெருமக்களுள் ஆலால சுந்தருக்கென திருவாரூர் திருவீதிகளில் ஈசனே தூது சென்ற பெருமை மிக்கதும், தான் ஈன்ற கன்று இளவரசரின் தேர்க் காலில் இடரி மாண்ட செயலுக்காக ஆராய்ச்சி மணியை அடித்து தன் கன்றுக் குட்டிக்கென நீதி வழங்கக் கோரிய பசுவின் பொருட்டு தன் மகனையே தேர்க் காலில் இட்டுக் கொன்ற மனுநீதி சோழன் ஆண்ட திருவாரூர் எனவும், கோவில் பாதி குளம் பாதி என்று பெயர் பெற்ற திருவாரூர் எனவும், தியாகேசரைத் திருத்தேரில் சுமந்து வரும் ஆடிவரும் ஆழித்தேரின் அழகு எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட திருவாரூர் என்றும்  சோழமண்டலத் தலை நகரங்களுள் ஒன்றான திருவாரூர் சப்த விடங்கத் தலங்களில் முதன்மையான பெருமை மிக்க திருவாரூரின்கண் ஆரூர் அரசின் அருள் மழையால் அவதரித்த மகான் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார்.
  ஓடக்காரன் இன்றி தான் பாடிய தேவாரப் பதிகத்தால் ஓடத்தைச்  செலுத்தியதால் 'ஓடம் போக்கி ஆறு' என்று பெயர் பெற்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள 'மடப்புரம்' என்னும் சிற்றூரில் மகான் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் அதிர்ஷ்டானம் அமைந்துள்ளது.
அருணாச்சலம்:-
🌸🍁🌸🍁🌸🍁🌸
  பொன்னி நதி  அகண்ட காவிரியாய் விரிந்து பாயும் திருச்சிராப்பள்ளியில்  சிவசிதம்பரம்  பிள்ளை - மீனாம்பாள் தம்பதியருக்கு மகப்பேறு வாய்க்கப் பெறாது திருவண்ணாமலை சென்று அங்கு தங்கி நாளும் அண்ணாமலையாரிடம் தம் குறையை எடுத்துரைத்து வந்தனர். அண்ணாமலையாரும் தம் அடியாரின் குறை நீக்க சித்தம் கொண்டவாறு மீனாம்பாள் கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்து அக்குழந்தைக்கு 'அருணாச்சலம்' எனப் பெயரிட்டு வளர்த்து வருங்கால்...அடுத்த ஈராண்டுகளில் மற்றுமோர் ஆன்மகவை ஈன்று அக்குழந்தைக்கு 'நமச்சிவாயம்' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
  மூத்த மகன் அருணாச்சலம் பிறந்தது முதற்கொண்டு பசி, தாகம் என்ற எந்த உணர்வும் இன்றியும் அழுதல், சிரித்தல் முதலான உணர்வுகளும் இன்றி மௌனக் குழந்தையாகவே வளர்ந்து வந்தார். தாயாக முன்வந்து பாலைப் புகட்டினால் மட்டுமே அருந்திவிட்டு அமைதியாகி விடுவார். காலூன்றி நடக்க முற்படும் பருவத்தில் குழந்தை தானாகவே பத்மாசனத்தில் அமர்ந்து கண்மூடி தியானம் செய்ய விளைந்தது.அது கண்டு குழந்தையின் பெற்றோர் வியப்படைந்தனர்.
அருணையின் அன்பு:-
🌼🍂🌼🍂🌼🍂🌼🍂🌼
  அருணாச்சலம் ஐந்து வயது நிரம்பிய போதும் பேசும் திறன் இல்லாமல் கண்டு மனம் வருந்தி அண்ணாமலையானைத் தொழுது அழுதனர். அடியார் படும் துன்பம் கண்டு ஒருகணமும் பொறுக்க மாட்டாத தயாளனான ஈசன் முனிவர் உருக் கொண்டு சிதம்பரம் பிள்ளையின் இல்லம் வந்தவர் கண்மூடி நிஷ்டையில் அமர்ந்திருந்த பாலகனைக் கண்டு, "இப்புதல்வன் ஊமை அல்லன். உலக மக்களை உய்விக்கும் பொருட்டு உங்களுக்குத் திருமகனாக அவதரித்துள்ளான் இப்போது பேசுக!" என்று திருவாய் மலர்ந்து அருளினார். சிதம்பரம் பிள்ளையும் "குழந்தாய் ஏதாவது பேசு" என்று கண்கலங்கி அழுதார். அக்கணமே அருணாச்சலம் "சும்மா இருக்கிறேன்" என்று முதல்முறையாகத் தன் திருவாய் மலர்ந்து அறிவித்தார்கள். அப்போது துறவியாக வந்த ஈசன் அச்சிறுவனை பார்த்து "சும்மா இருக்கின்ற நீ யார்?" என்று கேள்விக்கணை தொடுத்தார். ஞானக் குழந்தையான அருணாச்சலம் தம் தவநிலை கலையாது மூடிய விழிகளை திறவாமல், "நீயே நான்! நானே நீ!!" என்று பதிலுரைத்தான். குழந்தையின் பதில் கேட்டு மகிழ்ந்த ஈசன் "அருணாச்சலத்தின் வார்த்தை சத்தியமானது!" என்று கூறி மறைந்தார்.
  முக்காலமும் உணர்ந்த ஞானியின் வடிவமாகத் திகழ்ந்த அருணாச்சலம் ஒருநாள் தம் தந்தையை நோக்கி "உமது அன்னை தேக முக்தி அடைவார்கள்" என்று ஒரு நாள் முன்பாக அறிவித்தார்கள். அதன்படியே அவ்வையம்மையாரும் தேக முக்தி அடைந்தார்கள்.
அற்புதங்கள் அநேகம்:-
🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷
  தன் இளைய சகோதரன் நமச்சிவாயம் பள்ளிக்கு செல்வதைக் கண்ட சுவாமிகள் தன்னையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று தந்தையிடம் கேட்டு பள்ளி சென்றார்கள். அங்கும் இதர மானாக்கர்களைப் போல அல்லாமல் எந்த நேரமும் சுவடிகளின் மீது கவனம் செலுத்தியும், சில நேரம் கண்களை மூடி தியானித்தும் அமர்ந்திருந்தார்கள். ஆசிரியரும் மாணவனின் இந்நிலை கண்டு நூல் அறிவை சோதிக்க எண்ணி கேள்வி கேட்க நொடிப்பொழுதும் தாமதியாது  சுவாமிகள் கேள்விக்கான பதிலுரைத்தார்கள். ஒரு நாள் ஆசிரியரை அழைத்த சுவாமிகள் "தங்கள் ஐந்து வயது மகன் திண்ணையில் இருந்து கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே இல்லத்திற்கு செல்க" என்று கூறினார்கள். அதன்படியே ஆசிரியரும் பதட்டத்தோடு இல்லம் நோக்கி ஓட அவரது இல்லத்தில் இருந்து பள்ளிக்கு வந்த வேலையாள் குழந்தை அடிபட்டுள்ளதை அறிவித்தார். அன்று முதல் ஆசிரியர் சுவாமிகளின் முன் ஆசனத்தில் அமர மறுத்த செய்கை கண்டு சுவாமிகள் பள்ளி செல்வதை தவிர்த்து விட்டார்கள்.
   மற்றும் ஒரு முறை சுவாமிகள்  பள்ளிக்குச் சென்ற போது ஒரு சிறுவனை பாம்பு கடித்து விட்டு விஷம் தலைக்கேறி மாண்டான். அதுகண்ட அவனது அன்னை மிக்க துயருற்ற போது சுவாமிகள் "உங்கள் மைந்தனை நான் எழுப்பி தருகிறேன்" என்று கூறிய சுவாமிகள் அருகில் இருந்த ஒரு பிரம்பை எடுத்து அச்சிறுவனின் தலையில் லேசாகத் தட்டி "சுந்தரம் எழுந்திரு” என்றார்கள். உடனே அச்சிறுவன் தூக்கத்திலிருந்து விழித்தார் போல உயிர் பெற்று எழுந்தான். இவ்வாறாக சுவாமிகள் மகிமைகளௌ நேரடியாக உணர்ந்த அப்பகுதி மக்கள் சுவாமிகள் மீது மிகுந்த பக்தி செலுத்தலாயினர்.
ஒரே சிதை:-
🔆💥🔆💥🔆
   தந்தையோடு உண்டான சிறு மனத்தாங்கலால் சுவாமிகளின் சகோதரன் நமச்சிவாயம் யாரோடும் பேசாது எவரிடமும் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறினான். பெற்றோர் பல இடங்களிலும் தேடி ஓய்ந்ததும் சுவாமிகள் "காசிக்குச் சென்று விட்டவன் நீங்கள் அழைத்தாலும் அவன் திரும்பி வந்து இல்லறத்தில் புக்கான்" என்று திடமாக உரைத்தார்கள். சில நாட்கள் கழித்து சுவாமிகள் ஈன்றோரை அழைத்து தம்மை சுட்டிக்காட்டி ”தமது கருமம் இன்றிலிருந்து எட்டாம் நாளில் முடிந்து விடும். நீங்கள் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள்" என்றார்கள். பெற்றோரும் சிவ நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது அருகில் சென்ற சுவாமிகள் அவர்கள் இருவரின் நெற்றியில் திருநீறிட்டதும் சட்டென்று இருவரும் மூர்ச்சை அடைந்து உயிர் துறந்தனர். மயானத்தில் இருவரையும் ஒரு சேர ஒரே சிதையில் இட்ட சுவாமிகள்   வெள்ளை வஸ்திரத்தை அணிந்தவாறு பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரையாகப் பயணித்தார்கள்.
  ஸ்ரீலஸ்ரீ மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் முக்காலமும் உணரும் ஆற்றலும்,அனுக்கிரக சக்தியும் உலகோருக்குத் தெரிய வர சுவாமிகள் பற்பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள அடியார்களின் பல்வேறு இன்னல்களையும் தீர்த்து வைத்தவாறு திருவாரூர் சென்று ஓடம்போக்கி ஆற்றின் படுகையில் நித்திய வாசம் செய்து வந்தார்கள்.
ஜீவ ஆலயம்:-
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
  முக்காலமும் உணர்ந்த சுவாமிகளின் அன்பர்கள் அவருக்கு ஜீவ ஆலயம் அமைக்க முற்பட்டு வந்தமை கண்டு ஓடம் போக்கியாற்றின் கரையில் சிறிது தூரம் சென்று பின் கரையை விட்டு இறங்கி ஒரு இடத்தில் கண்களை மூடி நின்றபின் தென் திசை நோக்கி வேகமாக நடந்து சென்றார்கள். சுவாமிகள் நின்ற இடமே திருக்கோயில் அமைக்க திருவுள்ளம் கொண்டார்கள் என்று முடிவு செய்து பூமி பூஜை நடத்த மண்ணைத் தோன்றிய போது அங்கு பொற்காசு கிடைக்கப் பெற்று மகிழ்வுற்றனர்.
ஜீவ ஐக்கியம்:-
💥🔥💥🔥💥🔥
   இவ்விதம் அடியவர்களின் அன்பிற்கினங்க ஜீவ ஆலயம் அமைத்துக் கொண்ட சுவாமிகள் ஒரு நாள் திருக்கோயிலின் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அடியவர்கள் புடைசூழ அமர்ந்திருந்தவர் "முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!!!" என்று தன் திருவாய் மலர்ந்து பின் நிஷ்டையில் ஆழ்ந்தார்கள். சுவாமிகள் விதேக முக்தி அடையும் காலம் நெருங்கியதை உணர்ந்த தொண்டர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் நிஷ்டையில் அமர்ந்த எட்டாம் நாள் ஆவணி மாதம் 12ஆம் நாள் அன்று திருதியை திதியில்  உத்திர நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் பகல் 12 மணிக்கு சிவ ஜோதியுள் இரண்டறக் கலந்தார்கள். அப்போது அமிர்த வர்ஷினியாக சந்தன மழைத்துளிகள் சுவாமிகள் மீது விழுந்து அதன் இனிய நறுமணம் எங்கும் பரவியது. சுவாமிகளின் திருமேனிக்கு ஆகம விதிகளின்படி அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்து ஆலயத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமாதிக் குகையினுள் சுவாமிகளின் திருமேனியை எழுந்தருளச் செய்தனர். அன்று முதல் இன்று வரை சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரவேசித்த பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இரவு 8 மணிக்கு சாயரக்ஷை பூஜையும் தவறாது நடைபெற்று வருகிறது.
  "முற்பிறவிகளில்  புண்ணியங்கள் பல செய்து அதன் மூலம் சேர்த்து வைத்த நற்பலன்கள் மட்டுமே ஒருவருக்கு இந்த அதிஷ்டானத் தரிசிக்க வாய்ப்புகள் அமையும்" என்பது கூற்று.
குருபூஜை:-
🌺☘️🍁🍀🌺
திருவாரூர் மடப்புரம் ஸ்ரீலஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் 187வது குருபூஜை நாளை 29.08.2022 திங்கட்கிழமை இன்று நடைபெற உள்ளது. 
  பக்தர்கள் அனைவரும் சுவாமிகளின் குருபூஜையில் கலந்து கொண்டு குருவருளோடு திருவருளும் பெற்று உய்வடையும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்

No comments:

Post a Comment