ஸ்ரீலஸ்ரீ ஆத்தூர் அன்னை
ஆன்ம சாதகர்கள் கடவுளின் அன்பையும் கருணையையும் பெற முயல்கிறார்கள். கடவுளை நேசிப்பதும் அவரது அன்பைப் பெறுவதும் எளிது. ஆனால் நமது இதயத்துள் கடவுள் நிறைந்து இருத்தல் வேண்டும்.
அன்பே சிவமானால் மட்டுமே பார்க்கும் யாவையும்.,யாவற்றிலும் இறையையே காணமுடியும்.
அருள் அன்னை
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
இவ்விதமே சிறுமியே பெண்ணாகி.. பெண்ணே அன்னையாகி... அன்னையே தெய்வமாகி.. அன்பெனும் தவமியற்றி அன்பே சிவமானவர்தான் "ஆத்தூர் அன்னை" என்று வழங்கி வரும் "அருள் அன்னை".
அன்னையின் தவம்:-
☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கொண்ட வள்ளல் பெருமானாரின் வள்ளன்மையால் ஆத்தூர் அன்னையை ஆட்கொண்டு "அருள் அன்னை" என ஆக்கினார்கள்.
அன்பெனும் அருட் ஜோதியைத் தன் கருவில் சுமந்து ஈன்றெடுத்த பெற்றோர் அன்னைக்கு 'லட்சுமி அம்மாள்' என்று பெயரிட்டு வளர்த்து வந்த போதும் இளம் வயதிலேயே பக்தியெனும் ஞானஊற்று அன்னையிடம் பீரிட்டு எழ ஆரம்பித்தது.
பக்தன் தனது நன்மைக்காக அன்றி சுயநலமின்றி ஜோதி வடிவான இறைவனை மனத்துள் இருத்தி உலக நன்மைக்காக ஒளி ரூபமான இறையை நினைந்து செய்யும் பக்தி "நிஷ்காமிய பக்தி"யாகும். பக்தன் பெயரும் உருவமுமற்ற பிரம்மத்தை மனதில் நிலை நிறுத்தி செய்யும் தியான நிலையே "நிர்குண உபாசனை" ஆகும்.
இவ்விதம் அன்னை பலவிதத் தியான நிலைகளில் தவம் இயற்றத் தொடங்கினார். அன்னையைத் தவநிலையில் கண்டவர்கள் அவர்களுக்கு ஏதும் புரியாத நிலையில் அன்னையை மனநிலை பாதித்தவர் என்று எண்ணி அன்னையைத் துன்புறுத்தத் தொடங்கினர்.
அதனால் அருளன்னை இடையூறுகள் இன்றி தவமியற்றும் வகையில் மரக் கிளைகளின் மீது அமர்ந்து தவம் மேற்கொள்ளத் தொடங்கினார். அதனைக் கண்ட குடும்பத்தினர் காவல்துறையினர் மூலம் அன்னைக்குப் பாதுகாப்பு அளித்தனர்.
அன்னையின் அற்புதங்கள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒருமுறை அம்மையார் மிகுந்த கசப்பு மிக்க எட்டிக்கொட்டையை உண்ட போதும்,அன்னையை ஒருமுறை அரவு தீண்டிய போதும் அன்னையின் உடலில் எவ்வித பாதிப்பும், மாற்றமும் இன்றி இயல்பாக இருப்பதைக் கண்டபோது தான் அன்னையின் ஞான நிலையைக் குடும்பத்தினரும், ஊராரும் உணர்ந்து கொண்டனர்.
அதுமுதல் அன்னையின் பக்தி நிலைக்கும், தவநிலைக்கும் ஊரு ஏதும் விளைவிக்காது இருந்தனர்.இந்நிலையில் தொடர்ந்து தவம் மேற்கொண்டிருந்த ஸ்ரீஅன்னை, கால ஓட்டத்தின் இடையே மனம் போன போக்கில் சென்று பின்னர் பவானி கூடு துறையை அடைந்தார்கள்.
தவ அன்னையின் அருள் ஆற்றலை அறிந்து கொண்ட பக்தர்கள் தவ அன்னையிடம் அருளாசி பெற நாடி வந்தனர். பக்தர்கள் அதிகம் வரவே அன்னையைப் பவானி ஊராட்சிக் கோட்டை வேதகிரி மலை அடிவாரத்தில் இருந்த ஒரு நந்தவனத்தில் தங்க வைத்தனர். அன்னை அம்மலையின் அடிவாரத்தில் பாறைகளின் இடுக்கில் இருந்த ஒரு குகையினுள் சென்று அமர்ந்து கொண்டு உலகியலை விட்டு விலகிச் சென்று அமைதியான ஆள் அரவமற்ற சூழ்நிலையில் ஆழ்நிலை தவமியற்றி வந்தார்கள்.
குருவே துணை:-
🌸🌸🌸🌸🌸🌸🌸
எவ்வளவு தான் அதிகமாக எண்ணை ஊற்றினாலும் தீபம் சுடர் விட்டு எரிய வேறு ஒரு நெருப்பின் உதவி தேவைப்படுகிறது அல்லவா? அந்த நெருப்பே குருவானவர் ஆவார். அந்த வகையில் அருட்பெரும் ஜோதியாக அருள் அன்னையின் ஞான ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்படி செய்விக்க வந்தவர் தான் வள்ளல் பெருமான்.
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில்புகும் *அரசே!
அன்பெனும் வலைக்குட்படும் பரம்பொருளே! அன்பெனும் கரத்தமர் அமுதே!"
என்று அன்பே சிவமாய்த் தவம்புரிந்து சுத்த சன்மார்க்க நெறியை இறைவனிடமே பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய சுத்த ஞான வள்ளல் பெருமானைத் தம் வாழ்வியல் குருவென நினைந்து தவம் இயற்றத் துவங்கினார் அம்மையார்.
குரு வடிவில் அருள் வடிவு:-
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
குரு வள்ளலாரைப் போன்று அமைதியையும், சமாதானத்தையும் குறிக்கும் வகையில் தூய வெள்ளை நிற புடவையை அணிந்தும், அதனைத் தன் குருவைப் போன்றே தலையைச் சுற்றி முக்காடு அணிந்தும், நெற்றி நிறைய திருநீறு பூசியும் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் சாந்த ஸ்வரூபமாய் காட்சி தருகின்றார்கள். ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னை நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் வள்ளலாரது சீடராய் விளங்குதற்குச் சாட்சியாய் அம்மையாரின் அருள் கோலங்களும் குருவையொத்தே அமைந்திருக்கிறது.
அருள் ஜோதி:-
🌺🌺🌺🌺🌺🌺
அருள் அம்மையின் ஜீவசமாதி மேடையில் என்றென்றும் அணையா விளக்கு அருள் ஜோதியைப் பரப்பி சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது.
நிலவறை:-
🌼🌼🌼🌼🌼
ஜீவ சமாதி அமைந்துள்ள கூடத்தில் ஒரு மூலையில் அருள் அன்னை தவம் இயற்றிய குகைக்குள் சென்று தரிசிக்கப் படிகள் அமைத்து சுரங்கம் போன்ற அமைப்புடன் கூடிய நிலவறை ஒன்று உள்ளது. அதனுள் சென்றால் ஸ்ரீலஸ்ரீ அன்னை அமர்ந்து தவம் இயற்றிய பாறை இடுக்கில் தவக்குழியும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அமர்ந்து நாமும் தவம் செய்யும் வகையில் இட வசதி செய்துள்ளனர். இந்த அதிசய நிலவறையைக் காண்கையில் அருளம்மை தவம் செய்த காட்சிகள் நம் கண்முன்னே விரிந்து மெய் சிலிர்க்கும் வண்ணம் அதிர்வலைகளை நம்முள் உருவாக்குகின்றது.
ஜீவகாருண்யம்:-
🌻🌻🌻🌻🌻🌻🌻
பெண் சித்தரான தவசி அன்னை தம்மைக் காண வந்த மக்கள் பசியாறும் வண்ணம் கஞ்சி வழங்கிப் பசியால் வாடி வந்த எளியோர் மற்றும் அடியவர்களின் பசிப்பிணியைப் போக்கி வந்தார்கள்.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் ஈகை வழியைக் கடைப்பிடித்து அங்கு வரும் அனைவருக்கும் உணவளித்து குருவழியில் தனது ஜீவகாருண்யத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.
அருள் ஜோதி உதயம்:-
💥💥💥💥💥💥💥💥
அன்பெனும் தவம் இயற்றிய ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னையின் ஜீவ காருண்ய ஜோதி அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரோடு 25.08.1971 ஆம் நாளில் ஒன்றிணைந்தது.
அரை நூற்றாண்டுகள் ஆன பின்பும் அன்பு அன்னையின் ஜீவகாருண்யத் திருப்பணி ஸ்ரீஅருள் அன்னையின் ஆசிரமத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ராமலிங்க சுவாமிகளைப் பின்பற்றி வாழ்ந்த ஆத்தூர் அன்னையின் ஜீவசமாதியில் நித்தமும் கஞ்சி வழங்குதலும், பிரதி ஞாயிறு தோறும் அன்னதானமும் வழங்கி என்றென்றும் தொடர்ந்து வறியோரது பசிப்பிணி அகற்றப்பட்டு ஜீவகாருண்யம் கடைபிடிக்கப்பட்டு வள்ளலாரது அகவல் பாராயணமும் நடைபெற்று வருகிறது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இணைந்த அன்பு அன்னையின் அருள் ஜோதியும் இணைந்து பிரகாசித்து வறியோரின் வாழ்வில் பசிப்பிணி அகற்றி "அன்பே தவமாய் - அருளே சிவமாய்" விளங்கும் அருள் அன்னையின் ஜீவசமாதி பீடத்தைத் தரிசித்து நாமும் நம்முள் குருவருளை நிரப்பிக் கொள்வோம்.
குருபூஜை:-
💥💥💥💥💥
25.08.1971ம் நாளன்று சித்தியடைந்த அன்புத் தவசீலி அருள் அன்னைக்கு அதே நாளில் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு சுபகிருது வருடம் ஆவணி மாதம் 9ம் நாளன்று குரு வாரமும், மாத சிவ ராத்திரியும் இணைந்த வியாழக்கிழமை அன்று ஆகஸ்டு மாதம் 25ம் தேதி (25.08.2022) அன்று ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னையின் குருபூஜை நடைபெற உள்ளது. அது சமயம் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீலஸ்ரீ அருள் அன்னையின் குரு பூஜையில் கலந்து கொண்டு அன்னையின் அருள் அமுதம் பெற்று உய்ய வேண்டுகிறோம்.
அமைவிடம்:-
🍀🍀🍀🍀🍀🍀
அருளாலயம்,
முருகன் கோவில் அருகில், ஜீவாநகர்,
ஊராட்சிக் கோட்டை மலை அடிவாரம்,
பவானி, ஈரோடு மாவட்டம்.
No comments:
Post a Comment