கி.பி 600முதல் கி.பி 1200 வரை உள்ள காலம் தென்நாடு பல்லவர்களாலும், சோழர்களாலும் ஆண்டப் பெற்ற பொற்காலம் எனலாம்.
பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் கி.பி 1008 இல் வாழ்ந்தவர் கொடைக்கல் அருட்குருநாதர் சிகாமணி சித்தர் ஆவார்.
ஸ்ரீலஸ்ரீ சிகாமணி சுவாமிகளின் தோற்றமும், பெற்றோர் பற்றிய விபரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.எனினும், சுவாமிகள் இன்றைய ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம் கொடைக்கல் கிராமத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து இறைவனுக்கு ஆலயத் தொண்டும், மக்களுக்குச் சைவ - சமய ஞானத்தையும் வளர்த்து ஆன்மீகத் தொண்டுகள் பலவும் புரிந்து வந்துள்ளார்கள்.
மக்களுக்கு ஆன்மீக உணர்வையும், இறை நாட்டத்தையும் வளர்த்து வந்த சுவாமிகள் ஒரு ஆவணி மாத வளர்பிறை மிருகசீரிட விண்மீன் நாளில் ஜீவமுக்தி அடைந்தார்கள்.
ஸ்ரீலஸ்ரீ சிகாமணி சுவாமிகளின் மீது குருபக்தி கொண்ட சீடர்களும், சுவாமிகளின் மீது பேரன்பு கொண்ட மக்களும் சித்தருக்கு ஜீவசமாதிக் கோவில் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். எளிமையாய் விளங்கி வந்த ஆலயம் கால மாற்றங்களாலும், புயல் - மழை போன்ற இயற்கை சீற்றங்களினாலும் இடிந்து.. சிதிலமடைந்து வழிபாடின்றிப் போயிற்று.
தற்சமயம் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் கொண்ட அன்பர்களும்,அடியார்களும்,பெரு மக்களும் கரங்கள் கோர்த்து சித்தரது அருளால் இறை உணர்வு தூண்டப் பெற்று அனைவரும் ஒன்றிணைந்து ஜீவசமாதி ஆலயத்தை கடந்த ஆண்டு மீண்டும் புனரமைத்துத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிகாமணி சித்தருக்கு நாள்தோறும் நித்திய வழிபாடுகளும், பிரதோஷ வழிபாடுகளும், முழுமதி வழிபாடுகளும், தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வந்தனர்.
சித்தர்கள் வழிபாட்டில் உள்ள பக்தர்கள் ஒன்றிணைந்து அருட்குருநாதர் சிகாமணி சித்தர் திருமேனி ஐம்பொன்னால் வடிவமைத்து இன்று முதலாம் ஆண்டு குருபூஜை ஆவணி மாதம் 5ம் நாள் 21.08. 2022 ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக மேன்மைமிகு தமிழ் மந்திரங்கள் ஓதி குருபூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அருள் குருநாதர் சிகாமணி சித்தரின் குருபூஜையில் கலந்து கொள்ளும் அன்பர்கள் அ/மி ஆனந்தவல்லி உடனாகிய அ/மி ஆனந்தீஸ்வரர் திருக்கோவில் திருப்பணி தற்சமயம் நடைபெற்றுக் கொண்டு வருவதால் தங்களால் இயன்ற பொருளுதவிகளையும் செய்து இறையருளுடன் குருவருளையும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment