ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை என்னும் கிராமத்தில் உழவுத் தொழில் மரபில் சிவஞான தேசிகருக்கும் - ஞானம்மை தம்பதிகளுக்கு 1785-ம் ஆண்டு இளைய மகனாகப் அவதரித்தார்கள். மூத்தவர் தங்கப் பிள்ளை. சங்கு சுவாமிகள் சிறு வயது முதலே சிவ சிந்தனையுடன் எந்த நேரமும் தன் நிலை மறந்து எப்போதும் வானத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். மழையோ,வெயிலோ அதனைப் பொருட்படுத்த மாட்டார்கள். தனியாகச் சிரிப்பதும், அழுவதுமாக இருப்பார்கள். இரவில் ஊருக்கு வெளியில் உள்ள தோப்புகளில் உறக்கமின்றித் தன்னந்தனியே உலவுவார்கள்.எனவே, சுவாமிகளை உணராதவர்களான ஊரார் அவரை மனநிலை பாதித்தவர் என்றே நினைத்தார்கள். ஆயினும், ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் எல்லோரையும் தமது குடும்பத்தார் என்று எண்ணி யார் இட்ட பணியையும் முகம் கோணாது செய்து முடித்து வந்தார்கள். அதைப் பயன்படுத்திய ஊர் மக்கள் நெற்கதிர் கட்டுக்களைச் சுமக்கச் செய்தும், கிணற்றில் நீர் இறைக்கச் சொல்லியும் இன்னும் பற்பல வேலைகளை சுவாமிகளைச் செய்யச் சொல்லி வந்தனர். சுவாமிகளும் அவற்றைச் செவ்வனே செய்து முடித்து வந்தார்கள்.
கார் மேகக் குவியலுக்குள் மறைக்கப்பட்ட கதிரவனைப் போல ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் தனது சக்திகளை வெளி உலகத்தினருக்கு வெளிப் படுத்தாமலேயே இருந்து வந்தார்கள்.
அடித்த கை வலித்தது:-
🍁🍂🍁🍂🍁🍂🍁🍂
ஒரு சமயம் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் தந்தையார் சுவாமிகளை விவசாய பூமியில் உழவு மாட்டைப் பூட்டி நிலத்தை நன்கு உழுது வருமாறு அனுப்பி இருந்தார். ஆனால் மதியம் சுட்டெரிக்கும் உச்சி வெயிலின் போது எருதுகள் தவிப்பதைக் கண்ட சுவாமிகள் தான் உடுத்தியிருந்த வேட்டியைத் தண்ணீரில் நனைத்து எருதின் மீது போர்த்தி விட்டார்கள். அப்போது அங்கு வந்த தந்தையார் அவரை அடித்து உதைத்தார். உடனே சுவாமிகள், "அப்பா அடிக்காதீர்கள். உங்கள் கை வலிக்கும்" என்றார். அதுபோலவே அடுத்த கனமே கை வலியால் மிகவும் துடித்துப் போனார் தந்தை. அப்போது அவரது கையை பிடித்து விட்டவராய் அப்பா "இனி கை வலிக்காது" என்றார். உடனே கை வலியும் நின்று போனது. இதைப்போலவே சுவாமிகளின் சகோதரரும் வயலுக்கு ஏற்றம் இரைத்துத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லி விட்டுச் சென்றார். சுவாமிகள் சிவ சிந்தனையுடன் ஏற்றம் இறைக்கத் தொடங்கினார்கள். சுவாமிகளின் சுபாவம் அறிந்த பக்கத்து வயலுக்குச் சொந்தக்காரன் தன் வயலுக்குத் தண்ணீர் மடையைத் திருப்பி விட்டுக் கொண்டான். விடிவதற்குள் பக்கத்து வயலில் நன்றாக நீர் பாய்ந்து இருந்ததைக் கண்ட சுவாமிகளின் சகோதரன் தங்கள் வயலில் ஒரு துளி நீரும் பாயாதிருப்பது கண்டு கோபத்துடன்,
ஒரு கம்பை எடுத்து வந்து சுவாமிகளைப் பலமுறை ஓங்கி அடித்தான். இத்தனை நேரம் சிவ சிந்தனையில் இருந்த சுவாமிகளோ சிரித்தபடி "தம்பி உனக்குக் கை வலிக்குமே" என்றார். அடுத்த நிமிடமே கீழே விழுந்து புரண்டு கை வலியால் துடியாய்த் துடித்தான். அது கண்டு சுவாமிகள் "வலி சரியாகிவிடும்" என்றார். உடனே வலி நீங்கியது
சுவாமிகள் குறித்த இச்செய்தி ஊருக்குள் பரவியது முதல் சங்கு சுவாமிகளைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வகை பயம் தொற்றி யாரும் கடுமையான வேலைகள் தர முன் வராது ஒதுங்கினர்
புயல் மழை:-
🌀🌀🌀🌀🌀
ஒரு முறை வீட்டின் வெளியே அனைவரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். சுவாமிகள் திடீரென்று எழுந்து அனைவரையும் வீட்டினுள்ளே சென்று படுக்கச் சொன்னார்கள். கால்நடைகளைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு சென்று கட்டினார்கள். அதன் உணவுகளை பத்திரமாக சேமித்து வைத்தார்கள். "இவனுக்குக் கிறுக்கு முற்றி விட்டது" என்று வீட்டில் உள்ளோர் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மிகப்பெரிய புயல் காற்று வந்து கூரைகள் பறந்து சென்று கடும் மழையும்,வெள்ளமும் பாய்ந்து ஓடியது. இச் சம்பவத்துக்கு பிறகு சுவாமிகளின் சக்தியைப் பற்றி அனைவரும் உணரத் துவங்கினர். ஆனாலும் சுவாமிகளை முழுமையாக நம்பாது இருந்து வந்தனர்.
அமுத சுரபியான உணவு:-
🪷🍃🪷🍃🪷🍃🪷🍃
ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளும் அவரது சகோதரரும் உணவருந்த அமர்ந்திருந்தனர். சுவாமிகள் சாப்பிடும் முன்பாக தியானிப்பது வழக்கம். அவ்வாறு கண்களை மூடி தியானத்தில் இருந்த போது சுவாமிகளின் தாயார் இருவருக்கும் பரிமாற சுவாமிகளின் இலையிலிருந்த உணவை அவரது சகோதரன் எடுத்து உண்ட போதிலும் அந்த இலையில் அள்ள அள்ளக் குறையாமல் அமுத சுரபி என உணவு வந்து கொண்டே இருந்தது. இதனால் பயந்து போன அனைவரும் சுவாமிகளின் சக்தியை உணராது ஏதோ துஷ்ட ஆவி பிடித்து விட்டது என நினைத்து சுவாமிகளை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.
மந்திரவாதி:-
🏵️💥🏵️💥🏵️💥
ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் மந்திரவாதியைக் கண்டதும் "விதி முடிந்தவனா என் விதியை மாற்றப் போகிறான்?" என்றார். அவர் சொன்னதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை. மந்திரவாதி எலுமிச்சம்பழம் எடுப்பதற்கென அருகில் இருந்த பூக்கூடையினுள் கையை விட உள்ளே இருந்த கருநாகம் அவனைத் தீண்டியது. அலறியபடியே சரிந்து அவ்விடத்திலேயே இறந்து போனான். மந்திரவாதியின் பூக் கூடையிலிருந்து வெளி வந்த கருநாகம் சுவாமிகளின் முன் வந்து பணிந்து நின்றது. இச்சம்பவத்திற்குப் பின்னரே சங்கு சுவாமியிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை பசுவந்தனை மக்கள் உணரத் தொடங்கினர்.
ஜமீன்தாரின் மகோதரம்:-
🌸☘️🌸☘️🌸☘️🌸☘️
இது போலவே சிங்கம்பட்டி ஜமீன்தார் 'மகோதரம்' எனும் நோயினால் பிடிக்கப்பட்டு வயிற்று வலியால் அவதியுற்ற போது மருத்துவரால் கைவிடப்பட்ட நிலையில் தில்லை அம்பல நடராஜனிடம் ஜமீன்தார் வேண்டினார். தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருந்து நடராஜப் பெருமானை வணங்கி வந்தார். அப்போதும் நோய் தீங்காது போகவே ஜமீன்தார் அம்பலவாணனிடம் "விடிவதற்குள் என் நோய் தீரவில்லை என்றால் சிவகங்கை குளத்தில் விழுந்து உயிரிழந்து விடுவேன் என்று சபதம் செய்தார். அன்று இரவு ஜமீன்தாரின் கனவில் தோன்றிய தில்லை அம்பலத்தான் "பாண்டி நாட்டில் பசுவந்தனை என்னும் தலத்தில் உள்ள சங்கு சுவாமிகள் எனும் பற்றற்ற அடியவர் ஒருவனால் உன் நோய் நீங்கும்" என்று அருளிச் செய்தார்.
அதன்படி ஜமீன்தார் பசுவந்தனை நோக்கி பல்லக்கில் கிளம்பி சங்கு சுவாமிகளைக் கண்டறிந்து அவரது திருவடிகளில் விழுந்து கண்ணீர் பெருக வணங்கி நின்றார். அதுவரை தியானத்தில் மூழ்கி இருந்த சுவாமிகள் எதிரில் நின்ற ஜமீன்தாரைப் பார்த்து சிரித்தபடி, "நடராஜ மூர்த்தி அனுப்பி வைத்தாரோ? எனக் கேட்டபின் "இந்தப் பழத்தை சாப்பிடு" என்று தட்டில் உள்ள பழங்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்கள். அதை உண்டதும் ஜமீன்தாரின் 'மகோதரம்' எனும் நோய் அகன்றது. ஊரணிகள்:-
💧💦💧💦💧💦
பசுவந்தனையிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு எப்போதும் தட்டுப்பாடு இருந்து வந்துள்ளது. காரணம் ஆறு, குளங்கள் எதுவும் அக்கிராமத்தில் இல்லை. எனவே, கிராம மக்கள் மழை நீரைச் சேகரித்து வைத்து அதனையே பயன்படுத்தி வருவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் மக்கள் பெரும் அவதியுற்று வந்தனர்.அது போன்ற தருணத்தில் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் பல ஊரணிகளையும், குளங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளார்கள். சுவாமிகள் வெளியில் எங்கும் பயணிக்கும் போது எவரேனும் "தாகமாக இருக்கிறது. குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும்" என்று கேட்டுவிட்டால் சுவாமிகள் உடனே ஓரிடத்தில் அமர்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார்கள். உடனிருப்பவர்களும் சேர்ந்து நிலத்தைத் தோண்டுவார்கள். சிறிது ஆழத்திலேயே தண்ணீர் ஊற்றுப் போல பீறிட்டுக் கொண்டு வரும். சுவாமிகளின் அருட்த்திறத்தால் உண்டான பல ஊரணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. அவைகளுக்கு 'சங்கு சுவாமிகளின் ஊரணி' என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.
ஜீவ ஐக்கியம்:-
🔥🔥🔥🔥🔥🔥
பிற மகான்களைப் போலவே சங்கு சுவாமிகள் தன் சமாதியாகப் போகும் நேரத்தைத் துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்கள். அன்றைய தினம் சுவாமிகள் பசுவந்தனையில் உள்ள கைலாய நாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுது பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் உருத்திராக்க மாலைடனும், சின் முத்திரையுடன் அமர்ந்து சுவாமிகள் சிவஜோதியில் ஐக்கியமானார்கள்.
ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் தன் சீடர்களிடம் கூறி இருந்தபடியே சமாதி செய்வித்து அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். இன்றளவும் தன் சமாதிக் கோயிலை நாடிவரும் பக்தர்களின் பிரார்த்தனைகளில் நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சுவாமிகள்.
ஸ்ரீலஸ்ரீ சங்கு சாமிகள் பிறந்தது கி.பி 1785 என்றும் ஜீவசமாதி ஆனது 1830 என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
ஜீவசமாதி பீடம்:-
🍃🌸🍃🌸🍃🌸🍃
ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் சகோதரரான தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் சமாதி வழிபாடுகளைக் கவனித்து வருகிறார். அடுத்தவர் மாடசாமிப் பிள்ளை பசுவந்தனை அ/மி கைலாய நாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே அவரது ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதி பீடத்தின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டையும், லிங்கத்தின் முன்பாக நந்தி தேவரும், தவிர விநாயகப் பெருமானுக்கும் சன்னதி உண்டு.
சீடர்கள்:-
🍁🍀🍁🍀
ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் சமாதி பீடத்தைச் சுற்றி வலம் வந்தால் சங்கு சுவாமிகளின் சீடரான நத்தக்காடு சங்கு சுவாமிகள் சமாதியும் உள்ளது. மேலும், கோவிந்தபுரம் சங்கு சுவாமிகள், சிங்கிலிபட்டி சங்கு சுவாமிகள், மாவிலைப்பட்டி சங்கு சுவாமிகள் முதலான சீடர்களும் சங்கு சுவாமிகளுக்கு உள்ளனர். இவர்களில் சமாதிகள் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
குருபூஜை:-
🔥🔆🔥🔆🔥
இன்று 17.08.2022 புதன் கிழமை ஆவணி மாதம் முதல் நாளில் அசுபதி நட்சத்திரத்தில் ஸ்ரீலஸ்ரீ சங்கு சுவாமிகளின் 192 ம் ஆண்டு குருபூஜை நடைபெற உள்ளது.அதுசமயம் சுவாமிகளின் ஜீவ சமாதி பீடத்திற்கு பக்தர்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசி பெற வேண்டுகிறோம்.
அமைவிடம்:-
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
கோவில்பட்டியில் இருந்து தெற்கு 24 கி.மீ தொலைவில் உள்ளது பசுவந்தனை கிராமம்.