Thursday, 31 January 2019

ஸ்ரீ மிளகாய் பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி


Image may contain: outdoor



ஸ்ரீ மிளகாய்  பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி - கழுகுமலை
மிகவும் அமானுஷ்ய அதிசயம் நிறைந்த அற்புதமான ஜீவசமாதி 

நேரில் சென்று தரிசனம் செய்யும் போது தான் அதன் மகிமையும் அங்குள்ள ஆற்றலும் நம்மை எப்படி ஆட்கொள்கிறது என்பது புரியும்..
85 வயது மதிக்க தக்க பாட்டி அவர்கள் இங்கு பூஜைகள் செய்கிறார்கள் 
சுவாமிகளின் வாரிசு வரிசையில் இவர் 8வது தலைமுறை சேர்ந்தவர்கள் .. இப்போதும் சுவாமிகள் இங்கு தேகத்துடன் உள்ளார்கள் என்பதற்கு இவரே சாட்சி..சுவாமிகளுடன் நேரடியாக பேசவும் தேவையானதை மக்களுக்கு பெற்று தருவதும் இவர்தான்...

மிளகாய் பழம் மற்றும் வற்றல்ளே இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.. அதையே நமக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்..
பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகளை வைத்து இங்கு பூஜை அன்னாதனம் நடைபெறுகிறது..
திருமணம் வரம் வேண்டுவோர் ஒரு ரோஜா மாலையை இங்கு சுவாமிக்கு சாற்றி விளக்கேற்றி வழிபட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை..
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இங்கு வந்து எலுமிச்சை பழம் வாங்கி வந்து சமாதி பீடத்தில் வைத்து வழிபட்டு அத்துடம் சுவாமி நிவேதனம் செய்த மிளகாய் வற்றல்களை சேர்த்து எலுமிச்சை சாதம் செய்து அதில் இந்த மிளகாய் வற்றல்களை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பது இங்குள்ள நடைமுறை..
ஒரு முறை தரிசனம் செய்யுங்கள் ஆனந்தமாக வாழுங்கள் ...
ஸ்ரீ மிளகாய் சித்த பரதேசி சுவாமிகள் ஜீவசமாதி
ஆறுமுக நகர்..
கிரிவல பாதை ..
கழுகு மலை

கீரை மஸ்தான் சித்தர்


 இந்தச் சித்தர் எட்டயபுர பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரபலாகத் திகழ்ந்திருக்கின்றார். இவரது இயற் பெயர் தெரியாது. இவர் கீரையை மசித்து தினம் தினம் சாப்பிட்டுவருவாராம். இதனால் கீரை மசித்தான் என்று வழக்கிலிருந்து பின்னர் இப்பெயர் கீரை மஸ்தான் என மாறி விட்டதாம். (இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கின்றது என்று தெரியவில்லை. )

. கிராம சிறுபான்மையினர் முன்னேற்ற அமைப்பு, பெண்கள் முன்னேற்ற அமைப்பு, முதியோர் இல்லம், மன நலம் குன்றியோர் காப்பகம் என நான்கு அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து இயங்குகின்றது.  இது ஒரு காப்பகம் என்பது பெயர் பலகையில் மட்டும் உள்ளதே தவிர வேறு எந்த வகையிலும் ஒரு மண்டபமோ கட்டிடமோ இல்லை.

இந்த இடத்தைக் கடந்து கீரை மஸ்தான் சமாதி இருக்கும் தினம் குருக்கள் இங்கு வருகின்றார். கீரை மஸ்தான் சமாதியில் நடக்கும் பூஜை தினம் ஒரு சிறப்பு நிகழ்வு.

கீரை மஸ்தானைப் பற்றி,  அன்றாடத் தேவைக்குள்ள தங்கத்தை உருவாக்கி அதனை வைத்து வாழ்ந்து வந்தாராம் கீரை மஸ்தான் .எட்டயபுரத்தில் தெய்வீகத் தன்மை வாய்ந்த மகான்களின் சமாதிகள் இருப்பதாகவும் இது ஒரு சக்தி பூமி என்றும் கூறி மகிழ்ந்தார். இங்கு தவசி தம்பிரான், மௌன குருசாமி, கீரை மஸ்தான், உமறுப் புலவர், முத்துசாமி தீஷிதர், போன்றோர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர்.

ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் தவசி தம்பிரான். அவரது சமாதியில் அவருக்குத் தினம் காலை 7:30க்கும் மாலை 4:30க்கு பூஜை நடக்கின்றது. காலையில் அபிஷேகம் முடித்து சாதம் பால் பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது. அதே போல மாலை ரொட்டி, பால், பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது. அவரைப் பற்றி பல கதைகள் உண்டாம். அதில் ஒன்று - தவசி தம்பிரான் குருமலையில் இருந்த போது அவரைத் தேடி பசு மாடு ஒன்று போய் நிற்குமாம். அவர் பால் கறந்து குடித்தவுடன் பசுமாடு சென்று விடுமாம். ஒருவர் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மிகச் சிறிய குகையில் தான் தவசி தம்பிரான் வாழ்ந்திருக்கின்றார். இங்குள்ள சமாதிக்குக் கூட மிகச் சிறிய வாசல்தான் அமைத்திருக்கின்றார்கள். கீரை மஸ்தான் சமாதியைவிட மிகச் சிறிய அளவிலான சமாதி அது.

கீரை மஸ்தான் சமாதி மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒரு கோயில். சிறிய பூந்தோட்டம் போன்ற ஒரு அமைப்பு. அதற்கு நடுவே சமாதி அமைக்கபப்ட்டுள்ளது. சமாதிக்கு மேலே சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.

 கோயிலுக்குப் பக்கத்தில்  குளங்கள் இருக்கின்றன. பாதை நடக்க முடியாதவாறு முள் புதற்கள் மண்டிக் கிடக்கின்றன.
இந்தக் குளத்தில் தான் கீரை மஸ்தான் குதித்து விழுவாராம். அவர் அப்படி விழும் போது அவர் உடல் 9 துண்டுகளாக தனித்தனியே பிரிந்து விழுமாம். இதனால் அவருக்கு நவயோகி என்ற ஒரு பெயர் உண்டாம். குளத்திலிருந்து மேலே எழும்பி வரும் போது 9 பாகங்களும் இனைந்து முழுமையாகி வருவாராம். கீரை மஸ்தானுக்கென்றே பிரத்தியேகமாக இந்தக் கிணற்றினை எட்டயபுரத்து மன்னர் வழங்கியிருக்கின்றார்.
கீரை மஸ்தான் பாடல்களோ நூல்களோ எழுதிய ஒரு சித்தரல்ல. அவர் வாழ்ந்த கால கட்டத்தில் பல அதிசயங்களைச் செய்து மக்களை ஆச்சிரியப்படுத்தியிருக்கின்றார். தினமும் சிவ பூஜை செய்து தங்கத்தை உருவாக்கி மக்களுக்கு காண்பித்து அவர்களை ஈர்த்திருக்கின்றார். இவர் எட்டயபுர மக்களுக்கு ஒரு அதிசயமான மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.

பிரம்ம ஸ்ரீ அமிர்தானந்த சுவாமிகளின் ஜீவசமாதி



கேரளா நாட்டில் தோன்றி இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விஜயம் செய்து உயர் ஞானம் எய்தி முனிவர்கட்கெல்லாம் சிகரமாய் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்தமலைக்கு கீழ்புறமுள்ள பொம்மாடிமாலையில் சமரச சாது சன்மார்க்க சத்தியாகிரக ஞான தெய்வராஜ சபை என்னும் மடாலயத்தை அமைத்துக்கொண்டு நடமாடும் தெய்வமாய் விளங்கி கொண்டிருக்கும் ஸ்ரீ அரங்கமலை சித்தராகிய பிரம்ம ஸ்ரீ அமிர்தானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பொம்மாடி மலையில் அமைந்துள்ளது.

இறைவன் குடியிருக்கும் ஆலயமாகிய மனித உடலுக்கு வயது வரம்பு கிடையாது என்றும் மதிநுட்பத்தால் தன் உடலை அழிவின்றி காப்பாற்றி கொள்ளலாம் என்றும் 156 ஆண்டு வரை தானே முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் நமது சுவாமிகள்.





சுவாமிகளின் மகா  குரு பூஜை வருடாவருடம் புரட்டாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் வெகு விமர்சியாக  நடை பெற்றுக்கொண்டிருகிறது. இதில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, மகா அலங்காரம், மகா தீபாராதனையும்  மதியம் அன்னதானமும் நடைபெறும்.  பக்தர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 திருச்சியிலிருந்து சுமார் 35 கி.மீ ல் அல்லது கீரனூரில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் பொம்மாடி மலை (Bommadi Malai) அமைந்துள்ளது. 

‘’நடை சித்தர்’’ ‘’ ’பிரம்மஸ்ரீ பாலானந்தா சுவாமிகள்’’





‘’நடை சித்தர்’’ ‘’ ’பிரம்மஸ்ரீ பாலானந்தா சுவாமிகள்’’ அற்புதங்கள்
சுவாமிகளின் பிறப்பு, உறவுகள், ஊர் என்று யாருக்கும் ஏதும் தகவல் தெரிய இல்லை. சுவாமிகளின் உண்மையான பெயரே ஜீவ ஒடுக்க காலத்தின் போது தாமே மொழிந்தார்கள். உண்மை பெயர் ‘’பால கிருஷ்ணன்’’ என்றும் தாம் கிருஷ்ண பக்தர்களின் பிள்ளை என்றும் உரைத்தார்கள். அதற்க்கு மேல் தம்மை பற்றி எதையும் யாருக்கும் கூறாமல் புன்னகை மட்டுமே பதிலாக உரைப்பார்கள்.
சுவாமிகள் எப்பொழுது எவ்வளவு மோசமான காலநிலையில் கூட அது வெயிலோ, வெப்பமோ, மழையோ, புயலோ வெறும் பாதங்களுடன் வேகமாக நடந்து கொண்டே இருப்பார்கள் அதனாலேயே அவரது அடியார்கள் சுவாமிகளை ‘’நடை சித்தர்’’ என்று அழைத்தனர். தினமும் பழனிக்கும் திண்டுக்களுக்கும் பல முறை பாதயாத்திரையாக சென்று வருவார்.
சுவாமிகள் மிக தெளிவான மன நிலையுடன் இருப்பார்கள். யார் என்ன மொழியில் பேசினாலும் அந்த மொழியிலேயே அவர்களுக்கு சுருக்கமாக ஒன்றிரெண்டு வார்த்தைகளில் பதில் உரைப்பார்கள் என்பது பலரது அனுபவ உண்மை.
சுவாமிகளுக்கு எந்த விதமான தீய பழக்க வழக்கங்கள் கிடையாது.
சுவாமிகள் தனிமையில் இருக்கும் பொழுது தமக்கு கிடைத்த உணவை சிறிது எடுத்து அருகில் இருக்கும் எறும்புகளுக்கும், காக்கைகளுக்கும் வைத்து விட்டு இறைவனுக்கு நன்றி கூறி விட்டு உண்பார்கள். சில சமயங்களில் கருடனும் அவருடைய உணவை உண்டதாக பக்தர்களின் தகவல்.
சுவாமிகள் வெள்ளை ஆடை மற்றும் காவி ஆடை மட்டுமே உடுத்துவார்கள். அந்த ஆடை கந்தலான பிறகே தமது அடியார்கள் வழங்கும் புதிய ஆடையை மாற்றி கொள்வார்கள். அப்படி கந்தல் இல்லாமல் ஆடையை மாற்றி விட்டால் சிறிது நேரத்தில் கழற்றி வேலியில் போட்டு விட்டு மீண்டும் பழைய ஆடையுடன் காட்சி தருவார்.
சுவாமிகளுக்கு இருப்பிடமே பலருக்கும் சர்ச்சையாக உள்ளது.
1திண்டுக்கல் M.V.M நகர், R.M காலனி போன்ற இடங்களிலேயே எப்பொழுதும் இருந்ததாக திண்டுக்கல் அடியார்களின் கருத்து.
2.ஒட்டன்சத்திரம் பகுதியில் தான் பெரும்பாலும் இருந்ததாக ஒட்டன்சத்திரம் அடியார்களின் கருத்து.
3.பழனி சாலையில் குழந்தை வேலப்பர் அலையத்தின் அருகிலேயே தான் இருந்துள்ளார் என்று அப்பகுதி வாசிகளின் கருத்து.
4.பழனி அடிவாரம், இடும்பன் மலை பகுதியில் தான் எப்பொழுதும் இருந்துள்ளார்கள் என்பது அங்குள்ள அடியார்களின் கருத்து.
இதையெல்லாம் ஒருங்கிணைக்கும்  அனைவரின் கருத்து- சுவாமிகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் சஞ்சரித்து காட்சி தந்துள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
சுவாமிகளின் அற்புதங்கள் காண்போம்
சுவாமிகளை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடன் வழிபட்டு தரிசனம் செய்தவர்கள் வாழ்வில் மேன்மை அடைந்துள்ளார்கள்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு குடும்பமே தவறான உணவு பழக்கத்தால் நோய் பீடிக்கப்பட்டு கடும் துன்பத்துக்கு ஆளாகி இருந்த காலகட்டத்தில் சுவாமிகள் அவர்களின் வீட்டிற்க்கே சென்று அடிக்கடி உணவு அருந்தி வந்துள்ளார்கள். இதனால் அந்த குடும்பம் வெகு விரைவில் நோயில் இருந்து மீண்டு ஆரோக்கியம் அடைந்துள்ளது. அது முதல் அக்குடும்பமே சுவாமிகளை கடவுளின் அவதாரமாக குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த காலகட்டத்தில் அவரை தரிசிக்க முடியாமல் போனது. சுவாமிகளின் சமாதி பிரதிஷ்ட்டை முடிந்து 48 நாள் மண்டல குரு பூசை விழாவன்று தகவல் கிடைத்து வந்து சுவாமிகளிடம் அலுது புலம்பினர். அந்த சமயத்தில் அந்த குடும்பத்தின் தலைவிக்கு இடுப்பு வலி ஏற்பட்டு நடக்க இயலாமல் இருவர் கைத்தாங்களாக கூட்டி வந்தனர். அடுத்து வந்த ஒவ்வொரு பவர்ணமி இரவு வழிபாட்டில் தொடர்ந்து கலந்து கொண்டார்கள். 3 மாதங்களில் பூர்ண குணம் கண்டு இன்று நன்றாக அனைத்து வேலைகளையும் செய்து மகிழ்வுடன் உள்ளார்கள்.
ஒரு முறை இஸ்லாமிய அன்பர்கள் பொள்ளாச்சி செல்லும் பொழுது திண்டுக்கல் அருகில் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்த காரை நிறுத்தி உள்ளனர். அப்பொழுது அங்கே வந்த சுவாமிகளை கண்ட காரின் ஓட்டுனர் சுவாமிகள் பாதம் பணிந்து விட்டு தேநீர், மற்றும் பலகாரங்கள், தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்துள்ளார். இதை பார்த்த இஸ்லாமிய பயணிகள் அந்த ஓட்டுனரிடம் சுவாமிகளை பற்றி விசாரித்து உள்ளனர். ஓட்டுனரும் சுவாமிகள் பெரிய சித்தர், மகான் என்று கூறவே. இஸ்லாமிய அன்பர்கள் சுவாமிகளின் அழுக்கு ஆடையை மாற்றி விடலாமே என்று கூறி ஓட்டுனரிடம் பணம் கொடுத்து புதிய வெள்ளை வஸ்த்திரம் வாங்கி வர சொல்லி உள்ளனர். ஓட்டுனரும் புதிய வஸ்த்திரம் வாங்கி வந்து பழையதை கழற்றி விட்டு புதிய வஸ்த்திரத்தை அணிவித்து உள்ளார். இதை பொறுமையாக வேடிக்கையுடன் நகைப்புடன் பார்த்து கொண்டிருந்த சுவாமிகள் ஆடை மாற்றியவுடன் ஒட்டன்சத்திரம் சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டார். ஓட்டுனர் பழைய வஸ்த்திரத்தை அருகில் இருந்த வேலியில் போட்டு விட்டு அவரும் தேநீர் அருந்தி விட்டு அனைவரும் காரில் ஏறி பொள்ளாச்சி பயணம் தொடர்ந்தனர். செல்லும் வழியில் சுவாமிகள் பழனிக்கு அருகில் உள்ள குழந்தை வேலப்பர் சன்னதிக்கு முன்பாக அமர்ந்துள்ளதை கண்ட இஸ்லாமியர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது சுவாமிகள் முன்பே கழற்றி வீசப்பட்ட அதே பழைய ஆடையுடன் புன்னகைத்து கொண்டு அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதை கண்ட இஸ்லாமிய அன்பர்கள் நாம் காரில் வந்தோம் அய்யாவை நாம் கடக்க வில்லை எப்படி இவ்வளவு விரைவாக இங்கே வந்தார்கள் என்று ஓட்டுனரிடம் வினாவவே. ஓட்டுனர் சுவாமிகள் யார் வாகனத்திலும், எந்த ஒரு வாகனத்திலும் சென்றதில்லை. அதே நேரம் சுவாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். அனால் நானே இன்று தான் நேரில் கண்டு பரவசம் அடைந்துள்ளேன் என்று கூறவே. அனைவரும் ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் சுவாமிகளை வணங்கி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். இதே போன்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.
பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக பல கட்ட பேச்சுவார்த்தையில் தீராமல் இருந்த இஸ்லாமிய அன்பர்களின் சொத்து பிரச்சனை சுவாமிகளின் தரிசனம் மூலம் அன்று சுமூகமாக தீந்துள்ளது. அதன் பின் அவர்கள் சுவாமிகளை சந்திக்கவே இயலவில்லை. சுவாமிகளின் ஜீவ ஒடுக்கத்தின் பின் தகவல் அறிந்து சுவாமிகளின் ஜீவசமாதி தரிசனம் காண குழுவாக வந்திருந்தனர். தரிசனம் செய்து விட்டு அவர்களின் முறைப்படி துவா செய்ய அனுமதி கேட்டனர். நாங்கள் சிரித்து கொண்டே அய்யா இங்கே சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் இல்லை நீங்கள் உங்கள் வழிபாட்டை செய்யலாம் என்று வேண்டிகொண்டோம். அவர்களும் மகிழ்வுடன் துவா செய்து விட்டு மகிழ்வுடனும், திருப்தியுடனும் சென்றனர்.
சுவாமிகளை தரிசிக்கும் அன்பர்கள் மெய்மறந்து பேரானந்த நிலையில் இருந்து விடுவார்கள். அதனாலேயே அவரை யாரும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு அடியார் சுவாமிகளை படம் எடுக்க அவரிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துள்ளார். படம் எடுத்த கையோடு சுவாமிகள் படத்தையும், சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள் படத்தையும் ஒன்றாக வைத்து சமூக ஊடகங்களில் இருவரும் ஒன்று போல் உள்ளனர் என்று பதிவு போட்டு விட்டார். இதனால் அந்த அடியாரின் கண்களில் சுமார் 6 மாதங்களாக தென்படாமல் இருந்துள்ளார்கள் சுவாமிகள். சுவாமிகளும் சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகளும் உருவத்தில் ஒத்திருப்பர் என்பதும் உண்மையே.
வேடசந்தூர் பகுதியை சேர்ந்த அடியார் சுவாமிகளின் தீவிர பக்தர். அவரின் தங்கை கணவர் குடி பழக்கத்தால் உடல் சீர் கேட்டு மரண தருவையில் இருந்த பொழுது இவரை காண வேண்டும் என்று கூறி உள்ளார். அங்கே சென்ற வேடசந்தூர் அடியார் சுவாமிகளை வேண்டி விபூதி பூசி விட பல நாட்களாக கண் மூடி அன்ன ஆகாரம் இல்லாமல் இருந்தவர் கண்களை திறந்து பார்த்து உள்ளார். அடுத்த வந்த நாட்களில் சுவாமிகளின் மந்திரமாக ‘’ஓம் ஸ்ரீ நடை சித்தர் பாலானந்த சுவாமிகளே போற்றி’’ என்று கூறி விபூதி பூசி வர சில நாட்களிலேயே பூர்ண குணம் கண்டார்.
ஒரு முறை சுவாமிகளுக்கு வழிபோக்கர் ஒருவர் அசைவ உணவு பிரியாணி வாங்கி வந்து கொடுத்துள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டுள்ளனர். சுவாமிகள் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியில் இருந்து கம கமவென்று சாம்பார் மனம் வரவே வழிபோக்கருக்கு சந்தேகம் வந்து விட்டது. இருந்தாலும் சுவாமிகளிடம் எப்படி கேட்பது என்று மவுனமாக இருந்து விட்டார். இதை உணர்ந்த சுவாமிகள் சூடு அடங்கும் முன் எலும்பை கடியப்பா உனக்கு தான் பிடிக்குமே என்று கூற. வலிபோக்கரும் குழப்பத்தில் எலும்பை கடித்துள்ளார் அது முருங்கை காய் சுவை மட்டுமே இருந்துள்ளது. உடனே பிரியாணியை வாயில் வைத்தவுடன் சாம்பார் சுவையே இருந்துள்ளது. முன்பு சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணி சுவாமிகளின் பார்வையால் சாம்பார் சாதமாக மாறியதை உணர்ந்து சுவாமிகள் பாதம் பணிந்து இனி நான் அசைவம் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அடியார் சுவாமிகளின் தீவிர பக்தர். அவருக்கு சுவாமிகளின் கருணையினால் பல நன்மைகளை அடைந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் சுவாமிகளை காண முடியாமல் தவித்துள்ளார். அந்த சமயத்தில் அவருடைய ஆன்மீக உறவுகளுடன் வெள்ளியங்கிரி யாத்திரை சென்று உள்ளார். மலை வழி யாத்திரையில் சுவாமிகளின் சிந்தனையில் தங்களை நீண்ட நாட்களாக காண இயலவில்லையே என்று நினைத்துள்ளார். அடுத்த கணமே மலையின் முகட்டில் சுவாமிகள் விஸ்வரூப தரிசனம் தந்துள்ளார். யாத்திரை முடிந்து வீட்டிற்கு வந்த உடன் சுவாமிகளின் ஜீவ ஒடுக்க 48 ஆம் நாள் குரு பூசை தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னரே சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு வந்து வழிபட்டு சென்றுள்ளார்.
சேலம் பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் சுவாமிகளிடம் தனது பொருளாதார குறைபாட்டை ஒவ்வொரு முறை சந்திப்பிலும் கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி அவர் ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் சுவாமிகள் மண்ணை அள்ளி கொடுப்பார். இதை பல முறை வாங்கிய பக்தர் வீட்டில் துணியில் மூடையாக கட்டி வைத்தார். சரியாக 21 வது முறை சுவாமிகளை சந்திக்கும் பொழுது குறையை எப்பொழுதும் போல் கூறி உள்ளார். அனால் இந்த முறை சுவாமிகள் சிறிது தானியங்களை கொடுத்து அனுப்பி உள்ளார். வீட்டிற்கு சென்றவர் அவருக்கே தெரியாமல் இருந்த பூர்வீக சொத்து அவரை தேடி வீட்டிற்கே வந்தது, அவரின் பொருளாதார பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் பின் சுவாமிகளின் தரிசனம் அவருக்கு கிடைக்கவே இல்லை. ஜீவ ஒடுக்கத்தின் பின்பே இணையத்தில் பார்த்து வந்து வழிபட்டு சென்றார்.
ஸ்வாமிகள் வாசி யோகம், தவயோகம், போன்ற அட்டாங்க யோகங்களை பயிற்சி செய்தவர். இதனாலேயே சுவாமிகளை தரிசனம் செய்தார்க்கும், ஜீவசமாதியை தரிசனம் செய்பவர்களுக்கும் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
சுவாமிகளின் ஜீவ ஒடுக்கத்தின் சமயம் நாடு முழுவதிலும் உள்ள பல சாதுக்களுக்கு சூட்சும அறிவிப்பாக இடத்தையும், காலத்தையும் பற்றிய தகவல்களை சுவாமிகள் கொடுத்துள்ளார்கள். சுமார் 300 க்கும் மேற்பட்ட சாதுக்கள் ஜீவசமாதி பிரதிஷ்ட்டையின் போது குழுமி விட்டனர். வெண் கழுத்து கருடன் சுழன்று வட்டமிட, சாதுக்கள் கூட்டம் அலைமோதிட, நமசிவாய மந்திரமும் சங்கு நாதங்கள் விண்ணை பிளக்கும் ஓசையுடன் முழங்கிட சித்த வித்தியார்த்த குருமார்களால் சுவாமிகள் சமாதி பிரதிஷ்ட்டை நடந்தேறியது.
சுவாமிகள் ஜீவ ஒடுக்கத்தின் பின்பு சமாதி பிரதிஷ்ட்டை வரை 26 மணி நேரங்கள் வரை உடல் விரைக்காமல் நெகிழ்வு தன்மையுடன் லேசான உஷ்ணத்துடனேயே இருந்தது அருகில் இருந்த பலரின் அனுபவ உண்மை.
சுவாமிகளின் சமாதி பிரதிஷ்ட்டைக்கு பின் தொடர்ந்து மூன்று நாட்களும் அவ்வபொழுது பீடத்தில் இருந்து சங்கு நாதம் ஒலித்து கொண்டிருந்ததாக அப்பகுதி வாசிகளின் தகவல். மேலும் அந்த மூன்று நாட்களும் வெள்ளை நாகம் வடிவில் பீடத்தின் மேல் சுவாமிகள் பலருக்கும் காட்சி தந்துள்ளார்கள்.
சுவாமிகளின் ஜீவ அடக்கத்தின் பின்பு பல ஊர்களில் அவர் சஞ்சரிக்கும் காட்சிகளை பலரும் பல ஊர்களில் இருந்து கண்டதாக தகவல் கொடுத்துள்ளனர். சிவகாசி, திருப்பூர், கோவை, ராஜபாளையம், மதுரை, பழனி, சென்னை, வடமதுரை, அய்யலூர், திருச்சி போன்ற ஊர்களில் காட்சி தந்துள்ளதாக தகவல்.
இப்படி பலருக்கும் பல நன்மைகளையும் செய்தாலும் சுவாமிகளின் பெயர், ஊர், இருப்பிடம் போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாதலால் சுவாமிகளின் அற்புதங்களும் அருமையும் பலருக்கும் சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
சித்தர் சுவாமிகள் ஜீவ ஒடுக்க விபரம்-
ஆங்கில வருடம் 13.12.2016 கார்த்திகை மாதம் 28 ஆம் நாள் செவ்வாய் கிழமை மாலை 4 மணியளவில் ''ரோகினி நட்சத்திரத்தில்'' விருப்பாச்சி அருகில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் உள்ள குடிலில் ஜீவ ஒடுக்கம் அடைந்தார்கள்.
14.12.2016 கார்த்திகை மாதம் 29 ஆம் நாள் மாலை 5 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா மண்டபம் புதூர் சிவன் கோவில் அருகில் உள்ள “கொல்லனூர்- தவத்திரு ஸ்ரீ.நாகமணிகண்டன் சுவாமிகளின்” குடும்பத்தாரின் பாரம்பரிய தோட்ட வளாகத்தில் சுவாமிகளின் சூட்சும உத்தரவுப்படி அமைந்துள்ள “ஸ்ரீ ஞான சித்தர் பிருந்தாவனத்தில்” பிரம்மஸ்ரீ பாலானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது.

சித்தர்களின் சூட்சும ஆணையின்படி 18 சித்தர்கள், மகாமேரு, பான லிங்கத்துடன் ஆலயம் அமைய 2018 ஆவணி மாதம் முதல் திருப்பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்......
ஸ்ரீ ஞான சித்தர் பிருந்தாவனம்
கொல்லனுர், ஸ்ரீராமபுரம் கிராமம்,
வேடசந்தூர் தாலுக்கா,
திண்டுக்கல் மாவட்டம்.
தொடர்புக்கு-9865115544, 9788530055

சங்கு ஸ்வாமிகள் ஜீவசமாதி






மகான்களது அவதார காலங்கள் மாறுபட்டிருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான். அதாவது பக்தியை இயன்றுவரை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது. வறுமை, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு உதவுவது. இவையே அவர்களின் நோக்கங்கள். பக்தர்களது எளிய வாழ்வுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை என்றென்றும் கிடைக்கும்படி அருள்புரிந்தனர். வைத்தியர்களால் கூடத் தீர்க்க முடியாத விதிப் பயனால் விளைந்த நோய்களை தங்களது அருளாசியினால் பறந்தோட வைத்தார்கள்.

தென் தமிழகத்தில் கோவில்பட்டியில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் பசுவந்தனை எனும் கிராமம் உண்டு. இங்கே விவசாயக் குடும்பத்தில் அவதரித்த சங்கு ஸ்வாமிகள் என்பவர் மிகச்சிறந்த சித்த புருஷர். இவர் பிறந்தது. சமாதி ஆனது முதலான விவரங்கள் பல காலமாக அறியப்படாமலே இருந்தது. என்றாலும் ஸ்வாமிகளுடன் இருந்து சீடர்களது காலத்தைக் கொண்டு ஓரளவு ஊகித்து அறிந்துள்ளனர். அதாவது, சங்கு ஸ்வாமிகள் பிறந்தது 1785 என்றும், ஜீவசமாதியானது 1870 என்றும் அனுமானிக்கப்படுகிறது.

சங்கு ஸ்வாமிகளின் தந்தையார் பெயர் சிவஞான தேசிகர். இவருக்கு இரு மகன்கள். மூத்தவர் தங்கப்பிள்ளை. இளையவர் சங்கு ஸ்வாமிகள் (தங்கப் பிள்ளையின் வாரிசான ஏழாவது தலைமுறையினர் பசுவந்தனையில் இன்றும் உள்ளனர் இவர்களில் மூத்தவரான பிரம்மநாயகம், சங்கு ஸ்வாமிகளின் சமாதி வழிபாடுகளை கவனித்து வருகிறார். அடுத்தவரான ஐ. மாடசாமி பிள்ளை பசுவந்தனை அருள்மிகு கயிலாயநாதர் ஆலயத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார்) சங்கு ஸ்வாமிகளுக்குத் திருமணம் ஆகவில்லை. சங்கு ஸ்வாமிகள் எப்படி இருப்பார் என்பதற்கான தகுந்த புகைப்பட ஆதாரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை. எனினும் இளம் வயதில் ஸ்வாமிகள் இப்படிதான் இருந்திருப்பார் என்ற யூகத்தின்பேரில் அவருடைய அன்பர்கள் படம் ஒன்றை வரைந்து உருவாக்கியுள்ளனர். அதில் கட்டுமஸ்தான தேகம், சாந்தமும், தெய்வீகமும் தவழும் திருமுகம். கம்பீரமான மீசை. திருநீறும் ருத்திராட்சமும் துலங்கும் திருமேனி என அருள் ததும்பும் வடிவமாகத் திகழ்கிறார் ஸ்வாமிகள்.

சங்கு ஸ்வாமிகள் அவதரித்த பசுவந்தனையிலேயே இவரது ஜீவசமாதி இருக்கிறது. சமாதியின் மேல் லிங்கப் பிரதிஷ்டை முன்னே நந்திதேவர். தவிர, இங்கு விநாயகரும் தரிசனம் தருகிறார். ஜீவசமாதி, கதைச் சிற்பங்கள் நிறைந்த விமானத்துடன் திகழ்கிறது. பிராகாரத்தில் சங்கு ஸ்வாமிகளின் சிஷ்யரான நத்தக்காடு சங்கு ஸ்வாமிகள் சமாதி இருக்கிறது. மேலும் கோவிந்தபுரம், சங்கு ஸ்வாமிகள். சிங்கிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள். மாவிலிப்பட்டி சங்கு ஸ்வாமிகள் முதலான சிஷ்யர்களும் சங்கு ஸ்வாமிகளுக்கு உண்டு. இவர்களது சமாதிகள் வேவ்வேறு இடங்களில் உள்ளன்.

தினமும் காலை ஒன்பது மணிக்கு சங்கு ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு வைக்கப்படும் பிரார்த்தனை குறைவின்றி நிறைவேறுவதாகச் சொல்கிறார். இங்கு பூஜைகள் செய்துவரும் பிரம்மநாயகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அசுவினி நட்சத்திர தினத்தன்று சங்கு ஸ்வாமிகளின் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது.

ஒருமுறை சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லக்குத்தி பெரியசாமித் தேவர் ராஜா, பூர்வ ஜன்ம வினைப்பயனால் மகோதரம் என்னும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயால் பெரிதும் அவதிப்பட்டார் (சங்கு ஸ்வாமிகள் காலத்தில் ஜமீனை ஆண்டு வந்தவர் இவர்) பசுவந்தனையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இருக்கிறது சிங்கம்பட்டி பசி எடுக்கும், சாப்பிட முடியாது. இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. வாந்தி, குமட்டல் என்று நரக வேதனையை அனுபவித்து வந்தார் ஜமீன்தார் இதைக் கண்ட அவருடைய குடும்பமே சோகத்தில் தவித்தது. அரண்மனை வைத்தியர்கள், வெளியூர் வைத்தியர்கள் என்று பலர் முயன்றும் ஜாமீன்தாரின் நோயை குணப்படுத்தவே முடியவில்லை. தெய்வ பக்தியில் சிறந்தவரான ஜமீன்தார்.

அவர் கனவில் தோன்றிய நடராஜ பெருமான். அன்பனே வருந்தாதே உனக்கு ஏற்பட்ட நோயைத் திர்க்கவல்ல சங்கு ஸ்வாமிகள் பாண்டிய தேசத்திலே பசுவந்தனை எனும் தலத்தில் உள்ளான். எனக்கு மிகவும் வேண்டிய அடியவன். பரமஞானி, விடிந்ததும் அவனைத் தேடிப் புறப்படு. நலம் பெறுவாய் என்று அருளினார். இறைவன் அருளியதில் குளிர்ந்துபோன ஜமீன்தார்.

விடிந்ததும் சிவனாரை வணங்கிவிட்டு பசுவந்தனை நோக்கிப் புறப்பட்டார். பல நாட்கள் பயணித்து பசுவந்தனை திருத்தலத்தை அடைந்தார். பல்லக்கில் ஜமீன்தார் வருவதைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்த ஊர்மக்கள் பல்லக்கைத் தொடர்ந்தனர். அவர்களிடம் இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்பவர் எங்கே வசித்து வருகிறார்? என்று பவ்யமாகக் கேட்டார். சங்கு ஸ்வாமிகளா? அப்படி ஒரு ஆசாமி இந்த ஊரிலேயே இல்லை என்றனர் மக்கள். இந்த ஊரில்தான் இருக்கிறார் ஒருவேளை. அந்தத் தவசீலரைப் நீங்கள் தரிசித்தது இல்லையோ? அப்போது கும்பலில் இருந்த ஒருவன். மகாராஜா. இந்த ஊரில் சங்கு ஸ்வாமிகள் என்று எவரும் இல்லை. ஆனால் சங்கு என்று ஒரு சோம்பேறி இருக்கிறான். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற பாழடைந்த மண்டபத்தில் அந்தச் சோம்பேறி படுத்துகிடைப்பான் என்றான். ஜமீன்தாரின் முகம் பிரகாசம் ஆனது. ஆமாம். அவர்தான். நான் அவரைத்தான் தரிசிக்க வேண்டும். எனக்கு வழி காட்டுங்களேன் என்றார் கெஞ்சலாக, ஊர்ஜனங்கள் முன்னே நடக்க பாழடைந்த மண்டபம் நோக்கிப் பல்லக்கு புறப்பட்டது. அங்கே மண்டபத்தின் சிதிலமடைந்த திண்ணையில் கால் மேல் கால் போட்டு ஏதோ சிந்தித்த பாவனையில் இருந்தார் சங்கு ஸ்வாமிகள். பல்லக்கில் இருந்து இறங்கிய ஜமீன்தார் ஸ்வாமிகளை நோக்கி மெள்ள நடந்தார்.

கண்ணில் நீர் மல்க அவரை வணங்கினார். தட்டுகளில் பழங்களும் பலகாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜமீன் தாரை ஏறெடுத்துப் பார்த்த சங்கு ஸ்வாமிகள், என்ன அப்பனே, அந்த நடராஜ் பெருமான் உன் நோயைத் தீர்க்க முடியவில்லை என்று என்னிடம் அனுப்பி இருக்கிறாரோ? எல்லாமே ஒரு நாடகம்தான். இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு என்று தட்டில் இருந்த பழம் ஒன்றை எடுத்து அவருக்குக் கொடுத்தார். இறை அருளால் கிடைத்த தெய்வப் பிரசாதம் எனக்கருதி அதை உண்டார் ஜமீன்தார் என்னே ஆச்சிரியம். அந்தப் பழத்துண்டுகள் வயிற்றுக்குள் சென்றதும் ஒரவித புத்துணர்வு ஜமீன்தாரை ஆட் கொண்டது. அமிர்தத்தை உண்டவர் போல் மகிழ்ந்தார். ஆடினார் பாடினார். சங்கு ஸ்வாமிகளுக்கு நன்றி தெரிவித்து விழுந்து வணங்கினார். அவரது மகிமையை ஊர் மக்களுக்கும் புரிய வைத்தார். சங்கு ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வைபவத்துக்கும் சிங்கம்பட்டி ஜமீனில் இருந்து உரிய மரியாதை இப்போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. பசுவந்தனை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பாசனம் மற்றும் குடி நீருக்கு எப்போதுமே தட்டுப்பாடு உண்டு. காரணம், இங்கு ஆறு குளங்கள் எதுவும் கிடையாது. எனவே மழை நீரை சேகரித்து வைத்து, அதைத் தட்டுப்பாடான காலங்களில் பயன்படுத்துவது வழக்கம். ஒரு வருடம் மழை பொய்த்துப் போனாலும் அதோகதிதான். இதுபோன்ற தருணத்தில் சங்கு ஸ்வாமிகளே பல ஊருணிகளை (குளம்) ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது அவர் எங்காவது பயணிக்கும்போது எதிர்ப்படும் எவராவது சாமி ரொம்ப தாகமாக இருக்கு. தண்ணி வேணும் என்று கேட்டுவிட்டால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து கைகளால் மணலைத் தோண்டுவார். உடனே அவர்களும் சேர்ந்து தோண்டுவார்கள். சிறிது ஆழ்த்திலேயே தண்ணீர் ஊற்றுபோல பிய்ச்சிக்கொண்டு வரும். ஸ்வாமிகளின் அருள் திறத்தால் உண்டான பல ஊருணிகள் இன்றும் பசுவந்தனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ளன. இவை சங்கு ஸ்வாமிகள் ஊருணி என்றே அழைக்கப்படுகின்றன.

எல்லா மகான்களையும் போலவே, தான் சமாதி ஆகப்போகும் காலம் இதுதான் என்று துல்லியமாகத் தன் சீடர்களிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார் சங்கு ஸ்வாமிகள். அந்த நாளும் வந்தது. அன்று பசுவந்தனை கயிலாயநாதர் ஆலயம் சென்று இறைவனைத் தொழுதார். பிறகு அவர் சொன்ன அதே நேரத்தில் ஜப மாலையுடனும் சீன முத்திரையுடனும் சமாதி ஆனார். ஸ்வாமிகள். அவர் கூறியிருந்தபடி சமாதி அமைத்து. அவரது பூத உடலை நல்லடக்கம் செய்தனர் சீடர்கள். இன்றும் தன் சமாதி கோயிலை நாடி வரும் பக்தர்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி நல்லருள் புரிந்து வருகிறார் சங்கு ஸ்வாமிகள். நாமும் அவரின் திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம்.

தலம் பசுவந்தனை சிறப்பு சங்கு சுவாமிகள் சமாதி கோயில். எங்கே இருக்கிறது? கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது பசுவந்தனை. மதுரை- நெல்லை ரயில் மார்க்கத்தில், கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவு. மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவு. தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் இருக்கறது.

தகவல் பலகை
தலம் பசுவந்தனை சிறப்பு சங்கு சுவாமிகள் சமாதி கோயில்.
எங்கே இருக்கிறது? கோவில்பட்டியில் இருந்து தெற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது பசுவந்தனை. மதுரை- நெல்லை ரயில் மார்க்கத்தில், கடம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவு. மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறில் இருந்து கிழக்கே சுமார் 21 கி.மீ. தொலைவு. தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானில் இருந்து மேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது? பசுவந்தனைக்கு அருகில் உள்ள                                           நகரம் கோவில்பட்டி. தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் கோவில்பட்டியை அடைவது எளிது. கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி முதலான ஊர்களில் இருந்து பசுவந்தனைக்குப் பேருந்து வசதி உண்டு. என்றாலும் பேருந்து சர்வீஸ் குறைவாகவே உள்ளது.

தொடர்புக்கு                                         ஐ. மாடசாமி, கணக்கர், அருள்மிகு கயிலாசநாத ஸ்வாமி திருக்கோயில், பசுவந்தனை 628 718 ஓட்டப்பிடாரம் வட்டம்                                         தூத்துக்குடி மாவட்டம். போன் 0461- 226 2306 மொபைல் 94428 35981