திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை...
அந்தப் பெண்மணியைப் பார்க்கும்போதே அவள் தெய்வத்தின் திருவருளையும் குருவின் பெரும் கருணையையும் நாடியிருக்கிறாள் என்பது தெரிந்தது. கையில் ஒரு சிறுவனைப் பிடித்திருந்தாள். அவனுக்கு அதிகபட்சமாக ஆறு வயதிருக்கலாம். அமைதியாக அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் காணவந்த மகான் அப்போது அதிசயமாக உணவு உண்டுகொண்டிருந்தார். அவர் உண்டு யாரும் பார்த்ததில்லை. ஆனால், அன்று ஒரு பக்தர் உணவைக் கொண்டுவந்து அந்த மகானுக்கு உணவை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண் அந்த மகானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். மகான் ஒரு கணம் அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டுக் குழந்தையை நோக்கினார்.
``இவனுக்கு ஆறு வயசாயிடுச்சு சாமி. இன்னும் பேச்சு வரலை. பார்க்காத வைத்தியமில்லை. நான் பெட்டிக்கடை வெச்சுதான் பிழைக்கிறேன். இதுக்குமேல வைத்தியம் பண்ண சக்தியில்லை. சாமிதான் மனசிரங்கணும்...'' என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் வழிந்தது. மகான் அவளைக் கருணையோடு ஆசீர்வதித்தார். மாறாக, தனக்கு உணவூட்டிய பக்தனிடம், ``அந்தக் குழந்தைக்கு ஒரு வாய் கொடு'' என்றார். அந்த பக்தரும் அப்படியே செய்தார்.

அவள் மீண்டும் குழந்தையோடு மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டு கிளம்பினாள். சாலையில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. நடந்துவந்து கொண்டிருக்கும் போது எதிர்ப்புறம் இருந்து ஒரு பேருந்து அவர்கள்மீது மோதுவதுபோல வந்தது. `அம்மா, பஸ்ஸும்மா, ஜாக்கிரதை' என்ற சத்தம் கேட்க அவள் நகர்ந்துகொண்டாள்.
பேருந்து கடந்துபோனதும், யார் அந்தச் சத்தம் கொடுத்தது என்று பார்த்தாள். பின்னால் யாருமே இல்லை. அதுவரை கேட்டிராதது அந்தக் குரல். மகனைப் பார்த்தாள்.
அவன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் தன் உதடுகள் அசைய, ``அம்மா, நான்தான்மா சத்தம் போட்டேன். எனக்கு இப்போ பேச முடியுதம்மா''என்று சொல்ல அந்தத் தாய் மகான் இருக்கும் திசை நோக்கி விழுந்துவணங்கினாள்.
பேசாத பிள்ளையைப் பேசவைத்த அதிசயத்தைச் செய்த மகான் வேறு யாருமில்லை. அவர்தான் புரவிபாளையம் கோடி சுவாமிகள்.
இந்தப் பாரததேசத்தில் வந்து உதித்த மகான்களில் ஒருவர். தன்னை அறிந்துகொண்டு ஆராதிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை கண்ணை இமைகாப்பதுபோல காத்துவருகிற அற்புதர். குலதெய்வம் எதுவாக இருந்தாலும் அவர்களின் இஷ்ட தெய்வம் கோடி சுவாமிதான்.

கோடி சுவாமிகளின் வரலாற்றைத் தேடிப் புறப்பட்டால், அவர் வயதையும் பிறப்பையும் அறியவே முடியாது.
கோடி சுவாமிகள்... இந்தப் பெயர் எப்படி வந்தது?
“கோடி கோடியான இன்பங்களையும் செல்வங் களையும் பக்தர்களுக்கு வாரி வழங்குவதால் அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம்’’ என்கிறார்கள். அதற்கேற்றாற்போல் தன்னிடம் வந்து ஆசி பெற காத்திருக்கும் அன்பர்களிடம், ``கோடி வரும்... தேடி வரும்...’’ என்றெல்லாம் சுவாமிகள் சொல்வாராம்.
கோடி சுவாமிகளின் இயற்பெயர் என்ன? எப்போது பிறந்தார்? எங்கு பிறந்தார்? இந்த மகானை ஈன்றெடுத்த புண்ணிய தம்பதி யார்? இப்படிப் பல கேள்விகளை சுவாமிகள் இருக்கும்போதே பலரும் அவரிடம் கேட்டார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் சிறு புன்னகை ஒன்றையே பதிலாகத் தந்தார் சுவாமிகள்.
தனுஷ்கோடி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார் கோயில் மேடையில் ஒற்றைக் கால் ஊன்றித் தவம் செய்ததைப் பல தலைமுறை மீனவர்கள் கண்டிருக்கிறார்கள். அவரைக் கண்டு கடலுக்குச் சென்றால் அது யோகம் என்ற நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. மழையிலும் புயலிலும் வெயிலிலும் அவர் அசையாது நிற்பதைக் கண்டு வியந்திருக்கிறார்கள்.

நடராஜபுரத்தில் வாழும் 75 வயது செல்லதுரை கூறும்போது, ``நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது சுவாமிகளைக் கண்டிருக்கிறேன். என் தாத்தா தன்னோட சிறுவயதிலிருந்தே சுவாமிகள் இப்படி நிற்கிறதைப் பார்த்திருக்கிறதா சொல்லியிருக்கிறார். அவரை யாரும் அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது. அவரைச் சுற்றி பைரவர்கள் காவலிருப்பார்கள் என்று சொல்வார்'' என்கிறார்.
அப்படியானால் அவர் வயதுதான் என்ன? நூறு என்பார்கள். முன்னூறு என்பார்கள். ஆனால் யாரும் அதை உறுதியாகச் சொல்வதில்லை.
‘ஷீர்டி பாபாவின் மறு அம்சம் இவர்’ என்று கோடி சுவாமிகளைப் பற்றிச் சிலர் சொல்கிறார்கள். ‘வடக்கே இருந்துவந்த கோடி சுவாமிகள், உலகளாவிய விஷயங்களை அறிந்தவர்’ என்பர் சிலர். இவர், கொச்சைத் தமிழில்தான் பேசுவார். இந்துஸ்தானியில் சில பாடல்களைப் பாடுவாராம். சில நேரங்களில் ‘ராம ராம’ என்று ஜபிப்பாராம். வள்ளலார், விவேகானந்தர் பற்றி சுவாமிகள் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாராம்!
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைப் பற்றி அடிக்கடி பேசுவாராம். கொல்கத்தா நகரில் உள்ள ஒவ்வொரு வீதிகளின் பெயரையும் கடகடவென்று பக்தர்களிடம் விவரிப்பாராம்.
‘தாத்தா சுவாமிகள்’ என்றும் பக்தர்கள், கோடி சுவாமிகளை அழைப்பர். காரணம், சில நேரங்களில் எந்த ஒரு பக்தரையும் ‘தாத்தா... தாத்தா’ என்றே அழைப்பாராம். `வா தாத்தா... காலேஜ் நல்லா படிச்சிட்டிருக்கியா?’ என்று மாணவர்களிடம் கரிசனமாக விசாரிப்பாராம்.
சுவாமிகள் எப்படி இருப்பார்? செக்கச் செவேல் நிறம்; ஒளி வீசும் கண்கள்; சுருக்கங்கள் விழுந்த தேஜஸான முகம்; அதில் தவழும் அமைதி - சாந்தம்; பஞ்சு போன்ற வெண்தாடி; தன்னைத் தேடி வருபவர்களை நல்வழிப்படுத்துகிற ஞானப் பார்வை; குளிருக்கும் சரி; வெயில் காலத்திலும் சரி... ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூன்று கோட்டுகளை அணிந்தபடியே இருப்பாராம் சுவாமிகள். இதற்கென்று சுவாமிகளுக்குக் கோட்டு மற்றும் தொப்பிகளை அடிக்கடி அவரின் பக்தர்கள் வாங்கி வந்து தருவது உண்டாம். சில நேரங்களில் தலையைக் கிரீடம் அலங்கரிக்கும்.
ஒரு சிலர் அவரை அணுகிப் பேசுவதுண்டு. தங்கள் இல்லம் வந்து ஆசி வழங்குமாறு கேட்பதுண்டு. அப்படிக் கேட்டவர்களில் சிலரின் இல்லத்துக்குச் சென்று சுவாமி சில நாள்கள் தங்கியிருந்ததாகச் சொல்வார்கள்.
தனுஷ்கோடி வாசத்துக்குப் பின் திருச்சி, பழநி, சென்னை தண்டையார்பேட்டை, கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் என்று பயணித்து கடைசியாக
1962-ம் ஆண்டு, புரவிபாளையம் ஜமீனுக்கு வந்து சேர்ந்தார் சுவாமிகள்.
காரில் வந்து இறங்கிய சுவாமிகள், தானாகவே விறுவிறுவென நடந்து, ஜமீன் வீட்டு மாடிப்படியில் ஏறி, தான் இருக்க வேண்டிய இடத்தைத் தீர்மானித்துக் கொண்டாராம். முற்றிலும் அறிமுகம் இல்லாத ஓர் இடத்துக்கு வந்த சுவாமிகள், இப்படி சகஜமாக நடந்துகொண்டதைக் கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டனர். இதற்கு விளக்கம் தரும் வகையில் பின்னாளில் சுவாமிகளே சொன்ன பதில் இது.
“சுமார் 200 வருடங்களுக்கு முன், புரவிபாளையத்துக்கு வந்திருக்கிறேன். இங்கேதான் தங்கினேன். ஜமீனில் உள்ளவர்கள் என்னை நன்றாகவே கவனித்துக்கொண்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் இங்கு வந்து தங்க நேரிட்டது. புரவிபாளையம் ஜமீனில் இருந்து வந்த சிலர் என்னைக் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நெய்க்காரப்பட்டி ஜமீன் மாளிகையில் சந்தித்தனர். அவர்கள் கிளம்பும்போது, ‘நானும் உங்களுடன் வருகிறேன்’ என்றேன். அதன்படி புரவிபாளையம் புறப்பட்டேன்.’’

கோடி சுவாமிகள் 300 வருடம் இந்த உலகில் வசித்ததாகச் சொல்கின்றனர் சிலர்.
புரவிபாளையம் ஜமீன் இல்லத்து முதல் மாடிதான் சுவாமிகளது வாசம். சமாதி ஆகும்வரை - தான் இங்கே வசித்து வந்த 32 வருடங்களிலும் (1962- 1994) ஒருநாள்கூட படி இறங்கி கீழே வந்ததே இல்லையாம். அதாவது முக்கியமான பக்தர்கள் சிலர், ஜமீன் பங்களாவுக்குள் வந்து சுவாமிகளை தரிசிப்பார்கள்.
அப்போது மாடியில் மேடை ஒன்று அமைத்து, அதில் இருந்தபடி அவர்களுக்கு தரிசனம் தருவார் சுவாமிகள். ``ஏன் சாமீ, நீங்க கீழே வர மாட்டேங்கறீங்க’’ என்று பக்தர்கள் கேட்டபோது, ``நான் கீழே வந்தா உன்னால என்னைப் பார்க்க முடியாது’’ என்பாராம். எந்தப் பொருளில் கோடி சுவாமிகள் இதைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரியவில்லை.
பக்தர்களில் ஏழை - பணக்காரர் எனும் பாகுபாடோ... சாதி - மத பேதங்களோ பார்க்க மாட்டார் சுவாமிகள். இவரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு என்ன பொருளைத் தர எண்ணுகிறாரோ... அதை சம்பந்தப்பட்டவரை நோக்கி வீசிவாராம். இப்படி அவர் எறியும் பொருள்களுள் தொப்பி, பூமாலை, பழங்கள், இனிப்புகள் போன்றவை அடங்கும்.
சுவாமிகள் தண்ணீர் குடித்து எவரும் பார்த்ததே இல்லையாம்; ஆனால், பக்தர்கள் எப்போதேனும் பாட்டிலில் கொண்டுவந்து கொடுக்கும் பன்னீரைக் கடகடவெனக் குடித்து விடுவாராம். அதேபோல் சுவாமிகள், தன் கையால் உணவு சாப்பிட்டு எவரும் பார்த்தது கிடையாது. பக்தர்கள், தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருள்களை அன்புடன் அவருக்கு ஊட்டி விடுவார்களாம். சுவாமிகள் விருப்பப்பட்டால் உணவுக்காக வாயைத் திறப்பார். விருப்பம் இல்லாவிட்டால், ‘வேண்டாம் போ’ என்பதாக சைகை காட்டி விடுவார்.
சுவாமிகள் புரவிபாளையம் ஜமீனில் இருந்த போது நிகழ்த்திய அற்புதங்கள் பல. பலரின் நோய் தீர்த்து துயர் துடைத்து செல்வச் செழிப்பை அருளிய சுவாமிகள் ஏழை எளியவர்கள் மேல் அன்பாக இருந்தார். அவர் செயல்கள் ஒவ்வொன்றும் பிறருக்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தன.
இந்த உலகத்தில் மகான்கள் தோன்றுவதும் மறைவதும் அவர்களின் விருப்பத்தோடுதான் நடைபெறும். அப்படித்தான் கோடி சுவாமிகள் பக்தர்களைத் தவிக்கவிட்டு மகா சமாதி கொள்ள முடிவுசெய்தார். 11.10.94 அன்று சுவாமிகள் புரவிபாளையத்திலேயே ஸித்தியடைந்தார்.
11.10.94 அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் மகா சமாதியான சுவாமிகளுக்கு ஜமீன் பங்களாவை ஒட்டியே சமாதி அமைக்கப்பட்டது. சுவாமிகளது சிரசுப் பகுதிக்கு நேராக, சிறு துவாரம் ஒன்று அமைத்து, அதன் மேல் சிறிய சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்தனர்.
கண்கள் அறியாவிட்டாலும் வாயு மனிதர் களுக்கு அருள்வதுபோல, சுவாமிகள் மகா சமாதி அடைந்தபின்னும் பக்தர்களின் வேண்டுதல்களுக்கு அருள்பாலிப்பதை நிறுத்தவில்லை.
சுவாமியின் மகா சமாதிக்கு வந்து வைத்த வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறின. பக்தர்கள் சுவாமி தங்களோடே இருப்பதாக உணரத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் சுவாமிகளின் மகிமையை மேலும் அதிகமாக்கினார் இஞ்சுவாடி கோபால் சுவாமிகள். கோடி சுவாமிகள் வாழ்ந்த காலத்திலேயே பக்தர்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.
`தனுஷ்கோடி என்னும் புண்ணிய பூமியில் எனக்குப் பிரியமான அன்னதான சேவையில் பங்குகொள்பவனின் பித்ரு சாபங்கள் அனைத்தையும் நான் போக்குகிறேன்' என்று வாக்கு கொடுத்திருக்கிறார்.
அதேபோன்று ஸ்தூல உடல் புரவிப் பாளையத் தில் இருந்தாலும் சூட்சுமவுடல் தனுஷ்கோடியில் சஞ்சரிக்கும் எனக் கூறியிருக்கிறார்.
சுவாமிகளின் இந்தக் கருத்தினைக்கொண்டு தனுஷ்கோடியில் தற்போது தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த நிலையில்தான் இஞ்சுவாடி கோபால் சுவாமிகள் மூலம் கோடி சுவாமிகள் மற்றுமோர் அற்புதமான வழிபாடு ஒன்றை வெளிப்படுத்தினார். அதுதான் கடல் வழிபாடு.
மாசி மாதம் பௌர்ணமிக்கு அடுத்துவரும் திருதியை தினம் சுவாமிகளுக்கு உரியது. அன்று தனுஷ்கோடி கடற்கரையில் இந்த கடல்பூஜை நிகழும். அன்றைய தினத்தில் கோடி சுவாமிகளின் பக்தர்கள் ஒன்றுகூட, தனுஷ்கோடியில் யாகங்கள் நடைபெறும். யாகங்கள் முடிந்ததும், கடற்கரையில் படையல் போடுவார்கள்.

தனுஷ்கோடி கடற்கரை வித்தியாசமானது. ஒருபுறம் அலைகள் புரளும். மறுபுறம் அமைதி தவழும். கடற்கரையில் இவர்கள் படையல் போட்டதும், கருடன் வானில் வட்டமிடும். அமைதியான கடல் பகுதியில் ஓர் அலை உருவாகும். அந்த அலை கரைவரை வந்து பக்தர்கள் சிலிர்ப்போடு பார்த்துக்கொண்டிருக்கும்போதே கரையில் போட்டிருக்கும் படையலை இலையோடு வாரி எடுத்துக்கொண்டு செல்லும்.
கோடி சுவாமிகளே அலை வடிவாய் வந்து அந்தப் படையலை ஏற்பதாய் ஐதிகம். அனைவரும் கண்களில் நீர் கசிய கலியுகத்தில் நிகழும் அந்த அற்புதக் காட்சியைக் கண்டு களிக்கலாம். அந்த அலை அடங்கியதும், மீண்டும் அந்தக் கடல் பகுதி அமைதியாகிவிடும். இது இன்றும் நடக்கும் அதிசயம்.
கோடி சுவாமிகளின் பக்தர்கள் இன்று உலகெங்கும் இருக்கிறார்கள். யார் அவரை மனத்தால் நினைத்து வேண்டிக்கொண்டாலும் உடனே அவர் அருள் செய்கிறார். வேண்டிய அனைத்தையும் தருகிறார்.
அப்படிப்பட்ட சுவாமிகளுக்குச் சென்னையில் ஓர் ஆலயம் எடுக்க வேண்டும் என்பது அவர் பக்தர்களின் தீராத ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது. கடந்த 8.3.2020 அன்று சென்னை பெருங்குடியில் கும்பாபிஷேகம் - ஶ்ரீலஶ்ரீ பொன்முடி கோடி சுவாமிகளின் கலசம் நிறுத்தும் விழா கோலாகலமாக நடந்தேறியது.
வாய்ப்பிருக்கும் பக்தர்கள் கலந்துகொண்டு கோடி சுவாமிகளின் அருளுக்குப் பாத்திரர் ஆகலாம்.
No comments:
Post a Comment