Wednesday, 30 September 2020

ஸ்ரீ சாது கருணாம்பிகை தேவி

 ஸ்ரீ சாது கருணாம்பிகை  தேவி


🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️

     இறைத் தத்துவத்தை உணர பக்தியில் பலவகைகள் உண்டு. சிரவணம்,கீர்த்தனம்,  ஸ்மரணம், பாத சேவனம், வந்தனம், அர்ச்சனம்,தாஸ்யம், சினேகம், ஆத்ம நிவேதனம் என்னும் சரணாகதி. பாதைகள் வேறானாலும் இலக்கு ஒன்றே. எண்ணற்ற மானுடர்களில் ஆண், பெண் பேதமின்றி இறைவனை சென்றடையும் ஆத்மா ஒன்றே.

    பெண் சித்தர்களுள் ஔவையாரும், காரைக்கால் அம்மையாரும் மனித உடலோடு கயிலையங்கிரிக்குச் சென்று இறைவனை நேரில் தரிசித்தவர்கள். இம்மண்ணுலகில் அவர்களைப் போல் மானிடப் பிறப்பெடுத்து, இறையை நாடிச் சென்று,இறை அனுபவத்தைப் பெற்று, சித்த நிலை கண்டு, ஜீவ முக்தி அடைந்த பெண் சித்தர்கள் பலருண்டு.                              அருளன்னை ஸ்ரீசாரதா தேவி, பக்த மீரா, ஸ்ரீஅன்னை, அக்கா மகாதேவி, மாயம்மா, சர்க்கரை அம்மாள், அம்மணியம்மாள் கரூர் பாட்டி சித்தர் என இன்னும் நம்மால் அறியப்படாத மாந்தருள் தெய்வங்களானோர்  பலருண்டு

மதுரையில் முத்து

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    மீனாட்சி அம்மையின் அருளாட்சி  நடைபெறும் மதுரையம்பதியில் தியாகராஜர் பிள்ளை - ஞானாம்பாள் தம்பதியருக்கு 1930 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 19ஆம் தேதி அம்மைநாயக்கனூரில் ஸ்ரீகருணாம்பிகை அம்மை அவதரித்தார்

   அக்காலத்தில் பெரிதாய் பள்ளி சென்று அதிகம் படிக்காவிடினும், இளமை முதலே இறை நாட்டத்தில் ஆர்வம் கொண்டு வள்ளல் பெருமானை தன் மனத்துள் குருவென இருத்தி அருட்பெரும் ஜோதியை தியானித்து வரலானார்.

வழக்குரைத்த வனிதை:-

🍁🍁🍁🍁🍁🍁🍁

   அக்கால வழக்கப்படி அம்மையின் 14ம் வயதிலேயே பெற்றோர் அவருக்கு மணம் முடிக்க வேண்டி அம்மையை வற்புறுத்தினர். இருப்பினும், இல்வாழ்வை வெறுத்த நிலையில் இருந்த கருணாம்பிகை அம்மையாரோ  குடும்ப நண்பர் ஒருவரின் அடைக்கலத்தைப் பெற்று, அக்கால கட்டத்திலேயே பெண்ணுரிமை கோரி வழக்காடு மன்றத்தை நாடினார். வழக்கின் தீர்ப்பும் அம்மையாருக்கு சாதகமாகவே அடைக்கலம் அளித்தவரின் ஆதரவோடு தம் துறவு வாழ்வைத் தொடங்கினார்

நிலவறையில் நிஷ்டை:-

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    திண்டுக்கல்லில் 1956ல் ஓர் ஆசிரமம் அமைத்து அங்கு ஒரு நிலவறையை ஏற்படுத்தி, அதனுள் 18 மாதங்கள் கடும் தவத்தை மேற்கொண்டு சிறந்த தவயோகி ஆனார். காருண்யம்

🏵️🏵️🏵️🏵️🏵️

  இளம்தவசியை நாடித் தம் குறைகளை போக்கிக் கொள்ள அடியவர்கள் வரத்தொடங்கினர். தம்மை நாடி வந்த அடியவர்களின் குறைகளையும்,துன்ப துயரங்களையும் அருளாளரான ஸ்ரீ கருணாம்பிகை  அம்மையார் கருணைகொண்டுபோக்கி வந்தார்

முக்தி நிலை:-

🍀🍀🍀🍀🍀🍀

    ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் தாம் ஜீவமுக்தி அடையும் நாளை அடியவர்களிடம் முன்னதாகவே அறிவித்துவிட்டு, அதன்படி  1970ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் ரேவதி நட்சத்திரத்தில் தன்னை இறைவனுக்கு ஆத்ம நிவேதனமாய் அர்ப்பணித்துத் தன் ஜீவனை இறைவனின் திருவடிகளில் சரணாகதி அடையச் செய்தார்.

ஜீவசமாதி அமைவிடம்:-

💥💥💥💥💥💥💥

    திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆசிரமத்தில் அம்மையாரின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. ஸ்ரீ கருணானந்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

  நாமும் ஒருமுறை அம்மையாரின் அதிஷ்டானத்தைத் தரிசித்து ஸ்ரீ கருணாம்பிகையின் காருண்யத்தைப் பெற்றிடுவோம்.

🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹

        கட்டுரை புனைவு :-

           அகிலா குமார்,

                  ஈரோடு.

கட்டுரை கருத்தாக்கம் :-

🌎சித்தர் தேசம்

No comments:

Post a Comment