Wednesday, 14 December 2016

வியாக்ரபாதர் ஜீவசமாதி



                                             வியாக்ரபாதர் ஜீவசமாதி - திருப்பட்டுர்






திருச்சிராப்பள்ளி-திருப்பட்டுர் பிரம்மபுரிஸ்வரர் கோவிலில் பதஞ்சலி ஜீவசமாதி உள்ளது.
அக்கோயில் அருகே 500 மீட்டர் தூரத்தில் வியாக்ரபாதர் ஜீவசமாதி(படம்) திருப்பட்டுர் கைலாசநாதர் கோவிலில் உள்ளது.

Friday, 9 December 2016

தவத்திரு சாது சாமிகள்


 தவத்திரு சாது சாமிகள்






கடந்த நூற்றாண்டில் பழனியம் பதி முருகபெருமானுக்கு ஆறுகால பூஜை குறைவற நடைபெற செய்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் - தவத்திரு சாது சாமிகள் ஆவார் ..

தவ திரு சாது சாமிகளின் குரு “நந்தி அடிகளார்” ஆவார் ..( 18-சித்தர்களில் தலைமையாக இருந்த கைலாய வர்க்க நந்தி தேவர் அல்ல ) இவர் திருச்சி மாவட்டம் லால் குடிக்கு அருகில் உள்ள பெருவள நல்லூரில் சமாதி கொண்டுள்ளார் ..ஒருமுறை நந்தி அடிகளார் காசி யாத்திரையை முடித்து பழனி வருகிறார் ...சாது சாமிகளை காசி செல்லுமாறு கூறுகிறார்.முருக பெருமானின் பூஜை குறையற நடை பெற வேண்டும் ..அதற்கு தான் இங்கு இருக்க வேண்டுமென சாது சாமிகள் சொல்ல ..அதற்கு நந்தி அடிகளார் நீ வரும் வரை நான் கவனித்து கொள்கிறேன் என பழனியில் தங்கினார் ...சாது சுவாமிகள் காசி யாத்திரை சென்றுவரும் வரை பழனியில் இருந்தார் .

பழனி கிரிவீதியில் தவ திரு சாது சாமிகளின் சமாதி திருக்கோவில் உள்ளது ...சமாதி முருகபெருமானின் ஆறு அட்சரங்கள் கொண்ட அறுங்கோன வடிவில் உள்ளது ..சமாதி மேல் ஸ்ரீ சக்கரம் பிரதிஸ்டை செய்யப் பட்டுள்ளது .சமாதிக்கு சற்று அருகாமையில் வின்ச் பக்கத்தில் சாது சாமிகளுக்கு மடம் உள்ளது ..தினதோரும் அன்ன தானம் குறைவின்றி வழங்கப்பட்டு வருகிறது ..

தன்னாசியப்பர் ஜீவசமாதி

தன்னாசியப்பர் ஜீவசமாதி 




பதினெட்டு சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத் தலமான சென்னிமலையில் ஜீவசமாதி கொண்டுள்ளார் . இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது .
தன்னாசியப்பர் கோவை--பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரத்திலும் ஜீவ ஐக்கியம் பெற்று உள்ளார் .கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலைக்கு அருகே உள்ள சிறிய குகையில் தன்னாசி அப்பர் எனும் சித்தர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
>> இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.
>> பக்தர்களின் அருட்கொடையால் தற்போது கருவறை,விமானம், முன்மண்டபம் கட்டப்பட்டு சிறப்புறக் காட்சியளிக்கிறது. கருவறையில் தன்னாசி ஈசர் மிகப் பெரிய மீசையுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் தெற்குப் பகுதியில் விநாயகர் கோயில் உள்ளது. வடக்குப் பகுதியில் பெருமாள் கோயிலும், அதற்குப் பின்னால் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. மேற்குப் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது.
பதினெட்டு சித்தர்களுக்கும் கோவில் அமைத்து உள்ளனர்
>> மருத்துவ சிகிச்சைகளால் தீர்க்க முடியாத புத்திசுவாதீனம் இல்லாதவர்கள்,பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலில் தங்கி மூலிகை சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தற்போது உள்ள அர்ச்சகர் இதனைச் செய்கிறார். இந்நோய்களால் பாதிக்கப்பட்ட பலர் இங்கே தங்கி தன்னாசி ஈசரின் அருளால் குணமாகிச் செல்வது காலங்காலமாக நிகழ்ந்து வரும் அற்புதம்.
அமைவிடம்: கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீரபாண்டி பிரிவில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே திருமலைநாயக்கன்பாளையம் வழியாக 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்வபுரம் கிராமத்திற்கு வரவேண்டும். இதுவரை பேருந்து வசதி உள்ளது. இதற்கு பின் மீண்டும் மேற்கே 2 கி.மீ. தொலைவு தோட்டங்களினூடே செல்லும் பாதையில் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தங்குவதற்கு வசதியுண்டு.
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை.மாலை 4 மணிமுதல் 7 மணிவரை.


குரு-தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஜீவ சமாதி


குரு-தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஜீவ சமாதி



திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயில் பிரமாண்டத் தேரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் ஸ்ரீகுரு தட்சிணமூர்த்தி ஸ்வாமியின் மடாலயம் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் கைவரப்பெற்று பல சித்து வேலைகளைப் புரிந்தார்.
>> தட்சிணாமூர்த்தி ஸ்வாமி வியாதிகளுடனும் விரக்தியடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் தனது இறுதிகாலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்..

>> சித்தர்கள் ஜீவ சமாதியில் ஆழ்ந்தும் இவ்வையகத்தில் வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள் ..அவர்களின் உடல் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த சமாதி பீடம் விளங்குகிறது.. இவரின் சமாதி இன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது .மடாதிபதி மட்டும் சிறிய படியின் வழியே உள்ளே இறங்கி பூசை செய்வார் .

>> ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது. ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி நண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிற்று..
>> ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சாமிகளின் பிறப்பு : திருச்சிக்கு அருகே உள்ள சிற்றூர் கீழாலத்தூர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை -மீனாம்பிகை தம்பதிகள் வசித்தனர். பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர் சிவசிதம்பரம் பிள்ளை. இந்தத் தம்பதிக்கு மக்கட்பேறு அமையவில்லை. எனவே பல தலங்களையும் தரிசித்து வந்தனர்.
>> ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும் அண்ணாமலையார் தோன்றி நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறப்பேன் என்று அருளினார்.
>> அடுத்த நாள் காலை கோயில் சென்று ஆண்டவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர். கனவு கண்டது போல் . மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். 10 மாதங்கள் கழித்து நல்ல ஆண் மகனை ஈன்றெடுத்தார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் அருணாசலம் என்றே சிசுவுக்கு நாமகரணம் சூட்டினர். இவர்தான் பின்னாளில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என அறியப்பட்டார்.
>> குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மவுனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப் பார்த்தபடி இருப்பான். அருணாசலத்தின் நிலைமை குறித்துப் பெற்றோர் கவலைப்பட்டனர். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை . இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் காவி உடை உடலெங்கும் திருநீறு. கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள் அணிந்த துறவி ஒருவர் வந்தார் .. சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவனடியாரிடம் , தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். ஏன் ஸ்வாமி ? என்று கேட்டார். அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டார் துறவி.
>> உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது. துறவியார் மெல்லப் புன்னகைத்தார். பிறகு சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது.
>> இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்காய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். அவ்வளவுதான் 5 வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாகப் பேசியது சும்மா இருக்கிறேன். சரிப்பா, சும்மா இருக்கிறாயா, நீ யார்? என்றார் துறவி. மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு “நீயேதான் நான், நானேதான் நீ ” என்று சுருக்கமாகப் பதில் சொன்னது குழந்தை. உனது பதில் சத்தியம் நான் புறப்படுகிறேன். என்ற துறவி விடைபெற்றார். பெற்றவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

>> சாமிகள் தமது வாழ்நாளில் பல ஊர்களுக்கும் பயணித்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ... நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்தார். இறுதியாக திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.அங்கே சோமநாத ஸ்வாமி கோயில் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றின் படுகையிலும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தங்கி இருந்த நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தை தவம் இருப்பதில் செலவிட்டார். பசிக்கும்போது சாலையில் இறங்கி அங்கே உணவு யாசித்தார். எது கிடைத்ததோ அதை உண்டு வந்தார்.
>> சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்காத வைத்தியர் இல்லை. சாப்பிடாத மூலிகை இல்லை என்றாலும் பலன் இல்லை. இறுதியாக யாரோ சிலர் சொன்னதன் பேரில் நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி கோயிலில் உள்ள மூர்த்திகளை வணங்கி உணவே எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்கினார்.2 நாட்கள் சென்றன. முதலியாருக்கு நடராஜ பெருமாளின் அருள் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் காலை வேளையில் ஒரு முடிவெடுத்தார். இன்றைக்குள் எனது நோய் குணமாகவில்லை என்றால் இரவில் நடராஜரின் சன்னிதி முன்னாலேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து. கூர்மையான கத்தி ஒன்றைத் தன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டார்.
>> இரவுவேளை நடராஜருக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் பணி முடிந்ததும் சன்னிதியைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது தூண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்தார். தில்லைப் பெருமானே என் வேண்டுகோளுக்கு நீ இணங்கவில்லை. ஆகவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சன்னிதியில் இருந்த ஓர் அசரீரி வாக்கு. அப்பனே உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய் என்று ஒலித்தது.. மனம் மகிழ்ந்த முதலியார் மறுநாள் அதிகாலையே திருவாரூர் புறப்பட்டார். தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். இரவு வரையில் சன்னிதியிலேயே அமர்ந்து தியானித்தார். அப்போதும் அவரது நோய் குணமாகவில்லை. அப்படியே உறங்கிவிட்டார்.
>> அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, நாம் உனக்கு அடையாளம் சொன்ன தட்சிணாமூர்த்தி இவர் அல்லர். இதே ஊரில் ஒருவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் செல் என்றார். அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (ஸ்வாமிகள்) கண்டுபிடித்தார் முதலியார். பிறகு ஸ்வாமி கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டார். அந்தக் கணமே முதலியாரைப் பிடித்திருந்த வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஆனந்தம் மேலிட, ஸ்வாமியைப் பலவாறு துதித்து பழம் முதலிய பொருட்களைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்கிற ஸ்வாமி. அதன்பிறகு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்றே வழங்கப்படலானார்.இவர் 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்..
>> மடாலயம் என்றாலும் மிகப்பெரிய கோயிலாகவே திகழ்கிறது. பலிபீடம், நந்திதேவர் பிராகாரம் என்று விஸ்தாரமாகவே இருக்கிறது மடாலயம் மணி ஒசையும் மத்தள முழக்கமும் சேர பூஜைகள் நடக்கின்றன. இந்த மத்தளத்தை வழங்கியவர் சரபோஜி மன்னர். அதுபோல் ஜீவசமாதியில் இருக்கும் லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கப்படும் பதக்கத்தையும் இந்த மன்னரே வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது
>> வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடந்து வருகின்றன. தற்போது தவத்திரு குமாரனந்த ஸ்வாமி மற்றும் தவத்திரு பிரமானந்த ஸ்வாமி ஆகிய இருவரும் பட்டத்தில் உள்ள இரு குரு மகா சன்னிதானங்கள் ஆவார்கள். 1984 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். மகான்கள் பிறக்கிறார்கள். மக்களின் சுக துக்கங்களுக்காக தங்களை வருத்திக்கொண்டே வாழ்க்கிறார்கள். மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் எங்கும் வியாபித்து தங்களது இன்னருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிதான்.
>> மடப்புரம் என்பதே திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதி. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் இருக்கிறது.மிகவும் அருமையாக இருக்கிறது.. சமாதியின் பின்புறம் அமர்ந்து தியானம் செய்ய அருமையான அனுபவங்களை பெறலாம் ...ஒருமுறை வந்து பாருங்கள் ..

சித்தர் வான்மீகரின் ஜீவசமாதி எட்டுக்குடி

சித்தர் வான்மீகரின் ஜீவசமாதி  எட்டுக்குடி




திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில் . புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.
>> முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே..இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் .கோவிலின் கன்னி மூலையில் மனோன்மணி தாயார் அருள் செய்கிறார்..
சித்தர் வான்மீகர் ஜீவசமாதி
>> வான்மிக சித்தர்க்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது .இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார்.. வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் .போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார் ..
>> வான்மிக சித்தரின் மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீசர் சன்னதியில் உள்ளது .. அடுத்து இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் ஸ்தல விருச்சம் சரக்கொன்றை மரத்தின் கீழ் வெகு காலம் தவம் செய்துள்ளார் ..

>> இக்கோவில் குறித்த செய்தி : முத்தரசன் என்னும் சோழ மன்னன் சிக்கல் - சிங்காரவேலரின் சிலையை வடிக்கும்படி சிற்பி ஒருவரிடம் கூறினார். சிற்பியும் சிக்கல் சிங்கார வேலரை சிலையில் வடித்துக் கொடுத்தார். சிலையில் தெய்வீக அழகைக் கண்ட சோழன், இது போல இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.
இதையடுத்து அருகில் உள்ள கிராமத்திற்கு சென்ற சிற்பி, அங்கு தன் கட்டை விரல் இல்லாமலேயே ஆறுமுகனுக்கு மீண்டும் ஒரு சிலையை வடித்தார். அந்த சிலை மிக்க உயிர்த்துடிப்புடன் அமைந்து, ஆறுமுகனின் உடலில் அக்னி ஜூவாலையும் உண்டாயிற்று. திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, 'எட்டிப்பிடி' எனக் கூச்சலிட மயிலைப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர். சிறப்புபெற்ற திருத்தலம் மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். 'எட்டிப்பிடி' என்ற வார்த்தையே காலப்போக்கில் 'எட்டுக்குடி' என்று ஆனதாகவும் ஒரு கூற்று உள்ளது.
>> தலபுராணம்: ஒரு சமயம் திருக்கயிலைக்கு சிவ பெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர், அங்கிருந்த பார்வதி தேவியை வழிபடாமல் வண்டு உருவம் எடுத்து, ஈசனை மட்டும் வலம் வந்து தொழுது சென்றார்..

ஈசனிடம் இருந்து தம்மை தனியாகப் பிரித்தது அம்பிகைக்குப் பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெறவேண்டி பூலோகம் வந்து தவம் மேற்கொண்டார். பூலோகத்தில் ஓரிடத்தில் நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்டுக் கொண்டிருந்தன. அத்தலம் வேதாரண்யம். அதன் அருகில் எட்டி மரங்கள் நிறைந்த காட்டில் வால்மீகி முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த பார்வதிதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற வேண்டி, இங்கே தவம் புரிய வந்ததாகக் கூறினாள். 'கேதார கவுரி' விரதத்தை அனுஷ்டித்துப் பரமனை திருப்தி செய்து வேண்டிய வரம் பெறலாம்' என்று வழி சென்னார் வால்மீகி.
எட்டி வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தொடங்கி, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று 'கேதார கவுரி' விரதத்தை நிறைவு செய்தார் பார்வதி தேவி. உடனே ஈசன் அங்கு தோன்றி, தனது இடப்பாகத்தில் அன்னை பார்வதியை இருத்தினார்.
ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்தத் திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம். பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கம் சவுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. இத்தல அம்பிகையின் திருநாமம் ஆனந்த வல்லி என்பதாகும்.
கேதார கவுரி விரதம் இருந்து எட்டுக்குடியில் ஈசனின் உடம்பில் உமையவள் சரிபாதி ஆனதால் இத்தல அம்பாள் ஆனந்த பரவச நிலையில் உள்ளாள். இவளிடம் கேட்டது உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.
>> நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அருமையாக உள்ளது.. ஒருமுறை சென்று வாருங்கள் ...


குகை நமசிவாயர்




தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருப்பருப்பதம் என்னும் மல்லிகார்ஜுனத்தில் (ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம்) அவதரித்தவர் நமசிவாயர். இவர் லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்த மரபில் வந்த தீவிர சைவர் ஆவார் . ஆண், பெண் என்று இப்பிரிவில் உள்ள அனைவரும் கழுத்தில் சைவ சின்னமான லிங்கத்தை அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்கே முதல் வழிபாடு நடத்துவார்கள். இளம்வயதில் இருந்தே சிவபக்தியில் திளைத்தார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
>> ஒருநாள் கனவில் தோன்றிய சிவபெருமான், நமசிவாயா! தென்திசை நோக்கிப் புறப்பட்டு என்னிடம் வா! என்று கட்டளையிட்டார். தன் சீடர்கள் முந்நூறு பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் ஈசன் தன் திருவிளையாடலைத் தொடங்கினார்.
>> நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசிவழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்குத் திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசியபோது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் எண்ணினர். ஆனால், நமசிவாயர், தன் அருட்சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார்.
>> அவர்கள் பின்பு பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோயில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்துவரும்படி சீடர்களை அனுப்பினார். அவற்றை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோயில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என அவர்கள் சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.
>> அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்றுசமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது. நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்யவேண்டும்! என்று நிபந்தனை விதித்தான். தன்னுடைய ஏவலர்களை அழைத்து, பழுக்க காய்ச்சிய இரும்புத்துண்டை இங்கே கொண்டு வா, என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம். சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு இந்த இரும்பைப் பற்றிக் கொள்ளுங்கள்! என்றான். இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே, விரூபாட்சித்தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய அவர், பழுக்கக் காய்ச்சிய இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே! என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட அம்மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.
>> சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். ஆலயதரிசனத்திற்குப் புறப்பட்டார். அண்ணாமலையாரை அவர் வணங்காமல், நலமாக இருக்கிறீரா?, என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவாக்கிர யோகி என்பவர் இதைக் கண்டு கோபம் கொண்டார். பிரம்பால் அவரை அடித்தார். அப்போது, நமசிவாயரின் கண்களுக்கு அண்ணாமலையாரே அவரது குருவைப் போல காட்சியளித்தார். நமசிவாயா! கோயிலுக்குள் இருக்கும் இறைவனை வணங்குவதே சிறந்தது, என்றார். இதன் பிறகு அவர் உள்ளம் உருகி அண்ணாமலையாரை வணங்கினார். தன்னை அடித்த சிவாக்கிர யோகியைக் கண்டபோதெல்லாம் வணங்கி அன்பை வெளிப்படுத்தினார் நமசிவாயர் திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார். அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது.
>> சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுலைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன. அண்ணாமலையார் மீது பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் வழங்கினான் ஈசன். அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகள். இவருடைய சீடர்களுள் விருபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.
>> ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்து விட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள். இரக்கப்பட்ட நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும், என்று ஆறுதல் கூறி வழியனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார்.
>> குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்தான். கோயிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான். இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாயோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின், நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் செய்தார் குகைநமசிவாயர்.
>> இவ்வாறு அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து வந்த குகை நமசிவாயர் ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார். அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரி தான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார்.
>> ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
>> திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையாரின் மேல் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பது மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும்.
>> மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். இவருடைய சீடர் விருபாட்சி தேவரின் ஜீவ ஐக்கிய குகை மலைக்கு சற்று மேலே உள்ளது ...தரிசிக்க தவற வேண்டாம். தியானம் செய்ய அருமையாய் இருந்தது .முலைப்பால் திர்த்தம் இளநீர் போலவே இனிக்கிறது ..ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை நமசிவாயரையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள்.
>> தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது; அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய். திருவண்ணாமலைக்குச் சென்றால் அண்ணாமலையாரின் திருவருளையும், குகை நமசிவாயரின் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெற இவர்கள் இருவரும் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.



பூண்டி மகான் எனும் ஆற்றுசுவாமிகள்

                                                              பூண்டி மகான் 




இருபதாம் நுற்றாண்டு இறுதியில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகிலுள்ள கலசபாக்கத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவர் இன்னார் என்று அறிய முடியவில்லை ... ஜீவசமாதி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கப்பட்டார் . சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் இவர் ஆற்றுசுவாமிகள் என்றும் கூறுவார்கள் ..
>> கலசபாக்கத்தில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள் போளூர் ,கலசபாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது. நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையாக காட்சியளிக்கும் சித்தரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள்.
>> பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.
சாமிகளின் பூர்வீகம் :
>> சாமிகள் எப்பொழுது இந்த பகுதிக்கு வந்தார்?,எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலசபாக்கம், குருவிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு. எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள் யாரும் கவனிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை .
>> அவரது செய்கைகள் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது.அவர்கள் அவரை ஏளனம் செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக இருப்பதை ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.
>> ஒருசமயம், தொடர்ந்து வானம் மழையின்றி பொய்த்து போனது. மழை இல்லாத காரணத்தால் பயிர் தொழில், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச் சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம முன்சீப் கிராம மக்களை ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.
அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.
‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். ”ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’பணிந்து வேண்டினர்.
’’என்ன முனிசீப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே! சரி... சரி இப்ப எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...’ என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து உட்கார்ந்தார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று பேசியது கனவா? ஆனால்,அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது போலல்வா இருந்தது ‘’? என்று வியந்து யோசித்தபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.
அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது. நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை. பலவிடங்களில் தேடியும் சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன், ‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி....., சட்டென்று கண் திறந்தார்.
’’போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும் நெகிழ்வாக கரம் கூப்பி வணங்கினர்..

 பலரது வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தி மக்கள் வாழ்வில் பிரச்சினைகளை களைந்து மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய சுவாமிகள் 1978ம் ஆண்டு பூண்டியில் ஜீவசமாதியடைந்தார். இங்கு இவருக்கு கோவில் உள்ளது. இங்கு சென்று மனப்பூர்வமாக மானசீகமாக வேண்டினால் ஜீவசமாதியில் ஜீவனுடன் இருக்கும் பூண்டி சுவாமிகள் நம்மை துயரத்தில் இருந்து காப்பார் என்பது நம்பிக்கை..வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது ... ஒருமுறை சென்று வாருங்கள் ..
சுவாமிகளின் பொன்மொழிகள்...
>> தன் பசித்துன்பத்தைக் பொறுத்து கொள்வதுடன் , பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.
>> பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.
>> இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.
>> மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.
>> மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.
>> தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனும் ஆவான்.
>> எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.
>> மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.


மாணிக்க சாமிகள் எனும் ஓசானி சித்தர்







 கொல்லி மலையில் அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமிட்டர் முன்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்க சாமிகள் எனும் ஓசானி சித்தர் சமாதி பெற்று உள்ளார் ..இவர் நூற்றி நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் . பாம்பாட்டி சித்தரின் பரிபூரணமான அருளை பெற்றவர். 

ஸ்ரீ ராமபிரசன்ன நாதானந்த ராஜயோகி - கொல்லி மலை






கொல்லி மலை அறப்பள்ளீஸ்வரர் ஆலயத்தின் நேர் பின்புறம் ஸ்ரீ ராமபிரசன்ன நாதானந்த ராஜயோகி சமாதி உள்ளது 

முருகானந்த ஸ்வாமிகள்

                                                        முருகானந்த ஸ்வாமிகள் 






'சின்னப்பயல்' என்றும், 'சின்னான்' என்றும் ஸ்ரீ iகுழந்தையானந்த ஸ்வாமிகளால் உரிமையோடு அழைக்கப்பட்ட ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள் கி.பி.1886-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ஆம் தேதி (பார்த்திப மார்கழி மாதம் 22-ஆம் தேதி ) புதன்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் அவதரித்தார். குருவின் திருவருள் கிட்டியது ஒரு சுவையான வரலாறு.
1930-ல் குமரலிங்கத்திற்கு ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் விஜயம் செய்தார். 15 ஆண்டுகளுக்கு முன்னமேயே, தன்னுடைய முந்தைய விஜயத்தின் போது, "சின்னப்பய"லின் பரிபக்குவம் அறிந்து அனுக்கிரம் செய்திருந்தார் . தற்போது சின்னான் துறவற ஒழுக்கத்தை முற்றிலுமாகக் கடைப்பிடித்து வருகிறான் என்பதைக் கேட்டுணர்ந்து அவனை அழைத்து வருமாறு ஆக்ஞாபித்தார்.
குருவின் திருவருள் கூடிவரும் நாள் நெருங்கிய நிலையில், அவ்விருவரின் சந்திப்பும் சுவையானதாகவே அமைந்தது. தினந்தோறும் இச்சீடன் காலை 10-மணிக்கு குருநாதரைச் சந்திக்க வந்துவிடுவான். ஸ்வாமிகளின் முன்பாக, ரேழியில் அமர்ந்து அவரது திவ்ய ஸ்வரூப தரிசனத்தில் மூழ்கி ஆனந்தம் கொள்வான். மதியம் வீட்டிற்குச் சென்றுவிட்டு, மீண்டும் மாலை 4-மணிக்குத் திரும்பவந்து, "நாதன் முன் நந்தி போல" அமர்ந்திருப்பான். இடையில் குருநாதரின் ஆணையை ஏற்று, சித்தர்களின் பாடல்களை வாசிப்பான்.
சீடனின் வாசிப்பில் தன்னை மறந்து, குருநாதர், சித்தர்களின் அனுபவ வாக்கியங்களில் மூழ்கியிருப்பார். இரவு 12-மணிவரை கூட அங்கிருந்து விட்டு, குருநாதர் ஆகாரம் அருந்திய பின்னர்தான் வீட்டுக்குச் செல்வான் சின்னான். பல நாட்களில் குருவின் பிரசாத அமிழ்தம், விரைவில் ஞான உமதேசம் பெறவிருந்த சின்னானுக்கே முதலில் வழங்கப் படுவதுண்டு. அனைத்தும் குருநாதரின் அன்பும் ஆசியும்தான்
குருநாதரிடம் மஹாவாக்ய உபதேசம் பெறுவது என்பது குருநாதரிடம் இடைவிடாது பல்லாண்டுகள் பக்தியுடன் பணிசெய்து வருபவர்க்கு மட்டுமே இந்த மஹாபாக்யம் கிட்டும். குருவின் பரிபூரண அன்பையும் அருளையும் பெற்ற சின்னானுக்கு அந்த அதிர்ஷ்டம் விரைவில் கிட்டியது. 'சின்னப்பயல்' மஹாஞானியாகும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த குருநாதர், "வருகின்ற பௌர்ணமி அன்று உனக்கு மஹாவாக்ய உபதேசம் நடைபெறும்" என்று அருளினார்.
அந்த நாள் ஆனி மாதம் குரு வாரம், மூல நட்சத்திரம் கூடிய நன்னாளாகும். தனது மழலைச் சொற்களின் காரணமாக 'குழந்தை' என்று வழங்கப்பெற்ற குருநாதர், "தத்வமஸி" என்று கூற, பதிலுக்கு, "அஹம் ப்ரஹ்மாஸ்மி" என்று , வடமொழியை அறியாத 'சின்னப்பயல்' கூற, சின்னான் மறைந்து, ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள் தோன்றினார். இது நடந்தது 1930-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் நாள்-பிரமோதூத வருடம் ஆனி மாதம் 26-ஆம் நாள் வியாழக்கிழமை.
சிவமாய், பிரம்மமாய், தானறியத் தன்னந் தனியனாய், சர்வானந்த மயமாய், அத்வைத சமாதிநிலையில் சதா இருப்பது தான் ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளின் இயல்பு. அத்வைத அநுபவத்தில் திளைத்திருந்த ஸ்வாமிகளை மாத்வ மடாதிபதியாய் இருந்த மஹாப்பெரியவர் ஒருவர் தரிசித்து இன்புற்றுத்திளைத்த அதிசயமும் ஸ்ரீமுருகானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்தது.
குமரலிங்கம் அக்ரஹாரத்திற்கு விஜயம் செய்திருந்த அப் பெரியவரைச் சந்திக்க ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள் மிகவும் விருப்பப்பட்டார். ஆசார அநுஷ்டானங்களில் அணுவளவும் பிசகாத அந்த மடாதிபதியை, ஏகாலி குலத்தவனான 'சின்னப்பயல்' தரிசிக்க முடியுமா? இது அன்று குமரலிங்கம் அக்ரஹாரத்தில் இருந்த அன்றைய பெரியவர்களின் கேள்வி.
குருவருள் துணை நின்றால் நடக்காதது தான் எது? அக்ரஹாரத்தினுள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலையில் நின்று மாத்வப் பெரியவர் பூஜை செய்துகொண்டிருந்த கனத்த திரையிடப்பட்ட பூஜாக்ருஹத்தை கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளின் கண்முன்னே அந்த அதிசயம் நிகழ்ந்தது.
.
ஸ்ரீ குழந்தை குருநாதரின் திருவருளால், பூஜாக்ருஹத்தை மூடியிருந்த திரைகள் அற்றுக் கீழேவிழ, பூஜையில் இருந்த மாத்வ ஸ்வாமிகள், சாலையில் ஏக்கம் நிறைந்த விழிகளுடன் நின்று கொண்டிருந்த ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளைக் கண்ணுற்றார். நேரிலேயே தெய்வத்தைக் கண்டுவிட்ட ஆனந்தத்துடன், பூஜையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் தன்னை மறந்த நிலையில் சின்னான் ஸ்வாமியை நோக்கி ஓடிவந்து, ஆரத் தழுவினார். த்வைத பாவத்தைச் சற்றே மறந்து, அத்வைதாநுபவத்தில் மூழ்கித் திளைத்தார். முழுதும் இறுதியுமாய் முழுஞானி ஒருவரைத் தரிசிக்கும் பேறுபெற்றார் இம் மகான் . தான் செய்து வந்த பூஜையின் பலனாகத்தான் பிரம்மஞானியாகிய ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது என அகமகிழ்ந்தார் அப்பெரியவர்.
"பழம் முதிர்ந்து உதிரும் நிலை யை அடைந்துவிட்டது" எனத் தன் ஒரே மகளான மாரியாயியை அழைத்து ஒரு நாள் கூறினார் ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள். அவ்வண்ணமே, விக்ருதி வருடம் சித்திரை மாதம் 22-ஆம் தேதி , வெள்ளிக்கிழமை , பஞ்சமியும் மூலமும் நிறைந்த நாளில் மஹாசமாதி அடைந்தார் ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகள்.
ஸ்ரீ முருகானந்த ஸ்வாமிகளின் அஸ்திக் கலசம் ஸ்தாபிக்கப்பட்டு ஜீவசமாதி உருவாக்கப் பட்டுள்ள ஸ்ரீ முருகானந்த ஆஸ்ரமம், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் கிராமத்தில் காளியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஸ்வாமிகளின் மகள் வயிற்றுப் பேரனான திரு யோகானந்தம் அவர்களின் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டுவரும் இந்த சமாதி ஆலயத்தில், ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் வத்தலகுண்டு ஆஸ்ரமத்தை நிர்வகித்து வருபவரும் ஸ்ரீ ஸ்வாமிகளின் பரம்பரையைச் சேர்ந்தவருமான திரு.கணேசன் ஸ்வாமிகள் அவர்களால், காசிமாநகரிலிருந்து கோண்டு வரப்பட்ட மஹாலிங்கமூர்த்தி ஸ்தாபனம் செய்யப்பட்டு, அன்னாரால் நூதன கும்பாபிஷேகம் கடந்த 23.01.2012 திங்கட்கிழமை அன்று ஸ்வாமிகளின் ஜன்ம நட்சத்திரமும் அமாவாஸ்யையும் கூடிய அன்று சிறப்பாக நடைபெற்றது.
அன்று துவங்கி, ஆலயத்தில் இரு கால பூஜைகளும், ப்ரதோஷ-அமாவாஸ்யை-பௌர்ணமி பூஜைகளும் தவறாது, திரு நவநீத கிருஷ்ணன் ஸ்வாமிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. 2012-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும், சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் ஸ்வாமிகளின் குருபூஜை விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது . அந்நாளில் மகேச்வர பூஜையும் (அன்னதானமும்) நடைபெறுகிறது.
வழித்தடம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் பேருந்தில் ஏறி குமாரலிங்கத்தில் இறங்க வேண்டும் . அங்கு முருகானந்த சாமியார் மடம் என்று கேட்டால் சொல்வார்கள் ..உடுமலைப் பேட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் இருக்கும் . பழனிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடைப்பட்ட ஊர் தான் குமரலிங்கம்.பழனியிலிருந்து குமரலிங்கத்திற்கு உள்ளூர் பேருந்து வசதி உள்ளது ..ஒருமுறை வந்துபாருங்கள்..