Wednesday, 5 October 2016

நாராயண பிரம்மேந்திரர் காட்டுப்புத்தூர்


                                                       நாராயண பிரம்மேந்திரர்







நாராயண பிரம்மேந்திரர் என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூரில் சமாதியடைந்த சித்தராவார். பழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது காட்டுப்புத்தூருக்கு வந்து தங்கினார். இவர் தனது 120வது வயதில் காட்டுப்புத்தூரில் சமாதியடைந்தார். இவருடைய சமாதி நாராயண பிரம்மேந்திரர் மடம் என அழைக்கப்படுகிறது. இவருடைய வரலாறு பிரம்மேந்திர கீதம் என்ற நூலில் பதிவாகியுள்ளது.

பிறப்பும் இளமையும்

நாராயண பிரம்மேந்திரர் ஆந்திர மாநிலத்திலுள்ள வேட்கூர் எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் வேங்கடாசல ரெட்டி ஆவார். கல்வியைக் கற்றப்பிறகு இலக்குமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று இல்லறத்தில் வாழ்ந்தார். இரு குழந்தைகளையும் வளர்த்து திருமணம் செய்து வைத்தார்.

துறவரம்

நாராயண பிரம்மேந்திரரின் கனவில் வந்த அம்பிகை துறவரம் மேற்கொள்ளச் சொல்ல, அவர் துறவரம் மேற்கொண்டார். அவருடைய உறவினர்கள் அவரைத் தேடி சித்தூரில் இருப்பதை அறிந்து சென்றார்கள். நாராயண பிரம்மேந்திரர் தன்னுடைய நிலையை விளக்கிச் சொல்ல அவரை உறவினர்கள் விட்டுவிட்டனர். சித்தூரிலிருந்து திருப்பதிசெல்ல முனைந்தார்.

தமிழக வருகை

சித்தூரிலிருந்து திருப்பதி செல்ல நினைத்தார். திருப்பதி ஏழுமலையான் மேல் நூறு விருத்தங்களைப் பாடினார். ஆனால் திருப்பதி செல்ல வேண்டாமென அம்பிகை கனவில் தோன்றி கூறினாள். அதனால் தென்பகுதியான தமிழகத்திற்கு நாராயணர் வந்தார். இங்கு சிலரிடம் துறவிகளுக்கான இடத்தினைப் பற்றி கேட்டார். அவர்கள் பழனியைப் பற்றிக் கூற பழனிக்கு செல்ல உத்தேசித்தார்.

காட்டுப்புத்தூர் வருகை

பழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது, காட்டுப்புத்தூரில் அப்போதிருந்த ஜமிந்தார்துறவிகளைக்கு அன்னதானமும், அரைக்காசும் கொடுப்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அவருடன் வந்த சில துறவிகளுடன் நாராயணர் காட்டுப்புத்தூருக்கு வந்தார். காட்டுப்புத்தூரில் சந்திரசேகரப் பிள்ளை,செவ்வைத்தியலிங்கம் பிள்ளை,சஞ்சீவி உபாத்தியாயர் ஆகியோர் நாராயணரின் அருமையை உணர்ந்து காட்டுப்புத்தூரிலேயே தங்கிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதனால் பழனி செல்வதை மறந்து காட்டுப்புத்தூரில் தங்கினார்.

சமாதி

நாராயண பிரம்மேந்திரர் காட்டுப்புத்தூரில் அறுபத்து மூன்று வருடங்கள் வாழ்ந்தார். பின்பு கிபி 912 (கலியுகம் 5012 விரோதிகிருது வருடம்) கேட்டை நட்சத்திரமான, மாசி மாதம் 28ம் தேதி சமாதியடைந்தார். அவருடைய சமாதியில் சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சமாதியை மடமாக மாற்றி எண்ணற்ற சாதுக்களும், துறவிகளும் வருகின்ற இடமாக மாற்றினர். இது காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திர மடாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இவருடைய குரு பூசை மாசிமாதம் கேட்டை நட்சத்திரத்தன்று கொண்டாடப் படுகிறது. கடந்து 2012ல் நாராயண பிரம்மேந்திரரின் 100வது குருபூசை விழா கொண்டாடப்பட்டது.

நன்றி : Jagadeeswaran Natarajan



No comments:

Post a Comment