Thursday, 28 May 2015

சுவாமி சிவானந்தர்


                                                                 swami shiva28


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.
1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 


1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.


அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். 


வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமி


                                                  Padagacheri1.png

மகான்களின் அவதார நோக்கமே பலருடைய பிணிகளைத் தீர்ப்பதற்காகத்தான். இதற்காகத் தங்களின் நலம் கருதாமல், செயல்படுபவர்கள் மகான்கள். மனிதன் என்பவன் மகான் ஆவதற்கு நல்ல குரு வேண்டும். அவரது உபதேசம் சிறக்க வேண்டும். மகான் ஆவதற்குரிய குணங்கள் இவனுக்கு இருக்கிறதா என்பதை நல்ல குருவானவர் ஆய்ந்து அறிவார். அப்படித்தான் பாடகச்சேரி சுவாமிகளுக்கு நல்ல குரு வாய்த்தார். ஆந்திராவில் இருந்தபோது எரிதாதா சுவாமிகள் இவரை ஆட்கொண்டார். யோக ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்து, சுவாமிகளுக்குப் புடம் போட்டார். கும்பகோணம் வந்த பிறகு வடலூர் வள்ளலார் சுவாமிகள் சூட்சுமமாக இவரை ஆட்கொண்டார், அருட்பா பாடிய ராமலிங்க ஸ்வாமி அவர்களே இவ்வுருமாகி திருப்பணி செய்யும் விருப்பமுற்றாரோ என்கிறது பாடகச்சேரியாரின் துதிப் பாடல்.

பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வீரசைவ ஜங்கமர் பிரிவில் அவதரித்தவர், சுவாமிகளின் தந்தையார் பெயர் - கந்தசாமி ஐயா. தாயாரின் பெயர் - அர்த்தநாரி அம்மை. ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) இவர்களது சொந்த ஊர் பிற்பாடு இவர்கள் அங்கிருந்த கோவை மாவட்டத்தில் உள்ள மஞ்சம்பாளையத்துக்குக் குடிபெயர்ந்து அங்கே வசிக்கத் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் தொடங்கினர். கிராமத்தில் வசித்து வருபவர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடத்தி வைத்தாகவும் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி, பலருக்கும் கல்வி அறிவைப் புகுத்தியதாகவும் சுவாமிகளின் குடும்பம் பற்றிச் சொல்லப்படுகிறது. சிறு வயதிலேயே சுவாமிகள். தன் தாய்-தந்தையரை இழந்துவிட்டதால். அந்தப் பருவத்திலேயே துறவை மேற்கொண்டு விட்டார். 


கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம், மன்னார்குடி செல்லும் சாலையில் வலங்கைமானை அடுத்து. குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு இரண்டு கி.மீ. முன்னால் வரும் ஊர்-பாடகச்சேரி. மெயின்ரோட்டில் இறங்கிக்கொண்டு, வலப் புறம் செல்லும் சாலையில் காலார இரண்டு கி.மீ. தொலைவு நடந்து சென்றால் பாடகச்சேரி சுவாமிகளின் திருக்கோயில் வரும். கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவு. வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு. ஆலங்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு. இந்த ஆலயத்தில் வள்ளலார் சுவாமிகள், பாடகச்சேரி சுவாமிகளின் குருவான எரிதாதா சுவாமிகள் மற்றும் நேபாள் மன்னரும் பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாமிகள், சுவாமிகளின் சம காலத்தவரான சரவணாநந்த பவ, அப்புடு சுவாமிகள் ஆகியோருக்குத் திருவுருவங்கள் உண்டு. பாடகச்சேரி சுவாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய சில பொருட்கள் இங்கே இருக்கின்றன.

பெல்லாரியில் செள்ளகுரிக்கி என்கிற இடத்தில் வசித்து வந்த எரிதாதா சுவாமிகளின் சீடராக சில காலம் இருந்து அவரது உத்தரவுப் படி தென்னாடு (கும்பகோணம்) வந்தவர் பாடகச்சேரி சுவாமிகள், பாடகச்சேரியில் பல ஆண்டுகள் இருந்தமையால் பாடகச்சேரி சுவாமிகள் ஆனார். நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜா ராம் சுவாமிகள். இவருக்கு பைரவ உபதேசம் செய்து வைத்தார். பாடகச்சேரியில் தான் இருந்த காலத்தில் பைரவ வழிபாட்டைத் தினமும் நடத்தி மகிழ்வாராம். சுவாமிகள். பைரவ வழிபாடு என்பது ஏதோ பூஜை, புனஸ்காரம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது தினமும் ஏராளமான நாய்களைக் கூப்பிட்டு சாப்பாடு போடுவது. சுவாமிகளின் கருத்துப்படி இவை எல்லாம் நாய்கள் அல்ல.... நாய் உருவில் இருக்கும் தேவர்கள் என்பாராம். பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் மாலை பாடகச்சேரிக்கு அருகில் இருக்கும் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருதவல்லி போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்கு இருக்கும் நாய்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு வருவாராம் சுவாமிகள்.

மறுநாள் மதியம் சுமார் முந்நூறு பேருக்கு ஆகும்படி சமைக்கச் சொல்வார். வடை, பாயசம் என்று சமையல் திமிலோகப்படும். இவ்வளவு பேருக்கு சாப்பாடு சொல்கிறாரே? யார் வந்து சாப்பிடப் போகிறார்? இந்தப் பகுதியே பொட்டல்காடாயிற்றே! என்று சமையல் செய்யும் அன்பர்கள் ஆரம்பத்தில் குழம்பினார்களாம். பின்னர்தான், விவரம் அறிந்து வியந்தார்கள். சமையல் முடிந்ததும். அந்த இடத்தில் வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் அனைத்து அயிட்டங்களும் வைக்கப்படும். தன் கையில் வைத்திருக்கும் ஒரு கோலால் தரையைத் திடீரென்று  சுவாமிகள் தட்டிய மாத்திரத்தில், எங்கிருந்துதான் வருமோ தெரியாது.... சுமார் நூற்றுக்கணக்கில் நாய்கள் வந்து இலையின் முன்பாக சமர்த்தாக அமர்ந்து கொள்ளும். இதை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் கிராமவாசிகளுக்கு இவை எல்லாம் நாயாகத் தெரியுமே தவிர, சுவாமிகளுக்கு மட்டும் அனைத்தும் மனிதர்களாகவே தெரியவார்களாம்.

சுவாமிகளின் சொன்ன பேச்சுக்கு அனைத்து நாய்களும் கட்டுப்படுமாம். சுத்தமாக அனைத்து பதார்த்தங்களையும் சாப்பிட்டு முடித்த பின், சுவாமிகளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு. நாய்கள் புறப்பட்டுவிடுமாம். இப்போதும் பல நாய்கள், பாடகச்சேரியின் இந்தத் திருக்கோயில் பக்கம் உலவி வருகின்றன. இங்கு வரும் பக்தர்களும் இந்த நாய்களை மிகவும் மதித்து, அவற்றுக்கு ஏதேனும் உணவளித்து மகிழ்கிறார்கள். தங்களது பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டியும் வியாதிகள் அகல வேண்டியும் சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆபத்சகாயம் என்று சொல்லி அவர்களது நெற்றியில் திருநீறு பூசுவார். அவ்வளவுதான்.... அடுத்த நொடியே அவர்களை பீடித்திருந்த பிணிகள் பஞ்சாகப் பறந்துவிடும்.

தனது 12 வயதில் சுவாமிகள் பாடகச்சேரிக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. எரிதாதா சுவாமிகளின் அறிவுரைப்படி இங்கே வந்ததும் பட்டம் என்கிற கிராமத்தில் மாடுகளை மேய்க்கும் வேலையில் சேர்ந்தார். பாடகச்சேரியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராம-பட்டம் இந்தக் கிராமத்தில் இருக்கும்போதுதான் சூட்சும ரூபமாக வடலூர் வள்ளலார் சுவாமிகள் வந்து ஞான உபதேசம் செய்து வைத்தாக பாடகச்சேரி சுவாமிகளின் பக்தர்கள் சொல்கிறார்கள். நவகண்ட யோகம் சுவாமிகளுக்கு அப்போதுதான் சித்தி ஆகி இருந்தது. அதாவது உடலை ஒன்பது பாகங்களாக - துண்டு துண்டுகளாக்கி செய்யப்படுகிற ஒரு சித்து வேலை அது. மாடு மேய்க்கும் பணி முடிந்ததும். உடனே இருப்பிடத்துக்குத் திரும்பாமல் ஒரு நாள் நவகண்ட யோகத்தில் இருந்திருக்கிறார் சுவாமிகள். மாடுகளுக்குச் சொந்தக்காரரான  பண்ணையார் இருள் நெருங்கிற வேளை வந்தும் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் (சுவாமிகள்) இன்னும் மாடுகளுடன் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு வேலைக்காரர்களை அனுப்பித் தேடச் சொல்லி இருக்கிறார். அதன்படி, மாடுகளை மேய்க்கும் இடத்துக்குப் போன வேலைக்கார ஆட்கள், சுவாமிகள் கண்டம் துண்டமாக இருக்கும் நிலையை பார்த்து அலறிப் போய். சிறுவனை யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள் என்று பதைபதைத்துப் பண்ணையாரிடம் விஷயம் சொல்வதற்காக அரக்கப் பரக்கத் திரும்பி இருக்கிறார்கள்.

வேலைக்கார ஆட்கள் வீடு திரும்பி பண்ணையாரிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மாடுகளுடன் அங்கே வந்து விட்டார் சுவாமிகள். அதன் பிறகுதான், தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவன் சாதராண ஆள் இல்லை... ஒரு மகான் என்பதை பண்ணையார் உணர்ந்தார். பெரிய கும்பிடு போட்டு, தம்பி.... நீ யாரென்று தெரிந்த பிறகும் உன்னை வேலையில் வைத்துக்கொண்டால், எனக்குப் பெரிய பாவம் வந்துவிடும் என்று மரியாதை செய்து அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு, பாடகச்சேரியிலேயே வெட்டாறுக்கு எதிர்த் திசையில் ஓரிடத்தில் வேல் நட்டு, முருகன் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தார். சுவாமிகள். அப்போது அந்த ஊரில் தவறான காரியங்களில் பலரும் ஈடுபட்டு வந்தனர். அவர்களை எல்லாம் அவ்வப்போது கூப்பிட்டுக் கண்டிக்க ஆரம்பித்தார் சுவாமிகள். சுவாமிகளின் இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. நம்மைக் கண்டிக்க இவன் யார்? என்று வெகுண்டெழுந்த எதிரிகள் அனைவரும் ஒன்று கூடிப் பேசினர். அவர்களில் ஒருவன், அவனை நாம் வெட்டிச் சாய்த்துவிடலாம் என்று கூற.. கைக்கூலிகள் அனைவரும் இதற்கு உடன்பட்டனர். அதன்படி ஒரு நாள் சுவாமிகள் இருக்கும் இடத்துக்கு ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர். அந்த நேரம் பார்த்து சுவாமிகள் நவகண்ட யோகத்தில் இருந்தார். வெட்டிப் போடுவதற்காக வந்த ஆசாமிகள் இதைக்கண்டு மிரண்டனர். டேய்.... யாரோ ஒருத்தன் நம்மளையும் முந்திட்டான் போலிருக்கு. பையன் காலி ஆயிட்டான். நம்ம பாடு இனி கொண்டாட்டம்தான் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். சற்று தூரம் அவர்கள் போன பின் அவர்களுக்கு எதிரே வந்த சுவாமிகள், என்னடா.... என்னை எவனோ வெட்டிப் போட்டுட்டதா சந்தோஷப்படறீங்களா? என்று பெரும் சிரிப்புடன் கேட்டபோது ஆடிப் போனார்கள்.

இதன் பிறகு. சுவாமிகளுக்கு பாடகச்சேரியில் இருக்கப் பிடிக்கவில்லை. கும்பகோணத்துக்கு கிளம்பி வந்துவிட்டார். அங்கே காரைக்கால் சாலையில் இருக்கும் முத்துப்பிள்ளை மண்டபம் என்னும் இடத்தில் தங்கினார். யோகம், தலம் போன்றவற்றை மேற்கொண்டார். அப்போது பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே கூழ் சாலை ஒன்றைத் துவக்கினார். பசியுடன் வந்தவர்களின் துயரம் தீர்த்தார் ராமநாதபுரத்தில் விஜயபுரம் பகுதியில் வசித்து வந்தவர் - ஆதப்ப செட்டியார். குன்ம (குஷ்டம்) நோயால் இவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் செய்து பார்த்தார். பலன் இல்லை. இறுதியில், தான் வணங்கும் முருகப் பெருமானிடம் மன்றாடி வேண்டிக்கொண்டார். அன்றைய தினம்இரவு முருகுப் பெருமான் அவரது கனவில் தோன்றி, பாடகச்சேரியில் ராமலிங்கம் என்கிற சித்தன் ஒருவன் இருக்கிறான். அவன் என் பக்தன். அவனிடம் போய் உன் குறையைச் சொல் என்று சொல்லி மறைந்தார். கனவு கண்டு குதூகலமான ஆதப்ப செட்டியார், பாடகச்சேரி இருக்கும் இடத்தை விசாரித்து இங்கே வந்து சேர்ந்தார். சுவாமிகள் கும்பகோணத்தில் இருக்கும் விஷயத்தை அறிந்து அங்கு வந்து சந்தித்தார். ஒரு குளிகையை செட்டியாரிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். முருகப் பெருமானையும் சுவாமிகளையும் பிரார்த்தித்துக்கொண்டே அதை உட்கொண்டார் செட்டியார். என்ன ஆச்சிரியம்! அவரது உடலில் குன்ம நோய் இருந்ததற்கான அடையாளங்களே இல்லை. அத்தனையும் மறைந்து போய், ஜொலிக்கும் தேகத்துடன் காட்சி தந்தார் செட்டியார்.

இதில் மனம் மகிழ்ந்த செட்டியாரின் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் சுவாமிகளிடம் வந்து. உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். என்ன தேவை. கேளுங்கள் என்றனர். பாடகச்சேரியில் தான் பூஜித்த இடத்தில் ஒரு மடம் கட்டித் தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி பாடகச்சேரியின் சுவாமிகள் இருந்தற்கான நினைவுகளைச் சொல்லும் முதல் கட்டடம் அப்போதுதான் எழும்பியது. அதன் பிறகு சுவாமிகளின் உத்தரவின் பேரில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் நடராஜர் சந்நிதியைக் கட்டிக் கொடுத்தனர். சுவாமிகளின் தன் காலத்தில் பல திருத்தலங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார். இதில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தஞ்சை கீழ வாசல் வெள்ளை விநாயகர், சென்னை கிண்டி ஸ்ரீமுனீஸ்வரர், திருச்சி உச்சிப்பிள்ளையார், புன்னநல்லூர் மாரியம்மன். கும்பகோணம் நாகேஸ்வரன் ஆகிய திருத்தலங்களைச் சொல்லலாம்.

இவற்றில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலுக்கு சுவாமிகள் திருப்பணி செய்த விதம் மிகவும் சுவாரஸ்யமானது. கும்பகோணத்தில் இவர் தங்கி இருந்த நாட்களில் ஒரு நாள் தேவராப் பாடல் பெற்ற திருத்தலமான நாகேஸ்வரன் ஆலயத்துக்குச் சென்றார். செடி கொடிகள் மண்டிப் போய், ஆலயப் பிரதேசமே ஒரு காடாகக் காட்சி தந்தது. மனம் வெதும்பினார் சுவாமிகள் . எப்படியாவது இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சபதம் ஏற்றார். திருப்பணிக்காக பக்தர்களிடம் இருந்தே பணம் வசூலிக்கத் தீர்மானித்தார். தும்பைப்பூ மாதிரி இருக்கும் வெள்ளை வேஷ்டி ஒன்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஒரு மேல்துண்டை உடல் மேல் போர்த்திக்கொண்டும் 
இடுப்பில் ஒரு பித்தளைச் சொம்பைக் கயிற்றால் கட்டிக்கொண்டும். நமசிவாய நாமம் சொல்லி வீதி வீதியாக அலைவாராம். சுவாமிகளைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஆன்மிக அன்பர்களும் வியாபாரிகளும் சில்லறை நாணயங்களைச் சொம்பில் போடுவார்கள். யாரிடமும் இவ்வளவு கொடுங்கள் என்று சுவாமிகளாக எதுவும் கேட்டதில்லை.

வள்ளலாரின் ஆசி பெற்றவர் என்பதால், சுவாமிகளுக்குப் பல வித்தைகள் தெரியும். இவர் நினைத்திருந்தால் ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி, அதை விற்று ஆலய கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்திருக்க முடியும். ஆனால் இறைவனுக்குச் செய்யும் தொண்டு, பக்தர்கள் கைங்கர்யமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் இதில் பலரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் இப்படி அலைந்து திரிந்து பணம் சேர்த்துக் கும்பாபிஷேகம் செய்தார். 1928-ஆம் ஆண்டில் இந்த வைபவம் நடந்தது.

இந்தக் கும்பாபிஷேகத்தின்போது ஒரு குழப்பமும் வந்தது. ஆலயப் பணிகளைச் செய்த விஸ்வகர்மா இனத்தவர் நாங்கள்தான் முதலில் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர். ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகர் பெருமக்கள், நாங்கள்தான் கும்பாபிஷேகம் செய்வோம் என்றனர். இந்த நிலையில் கும்பகோணம் பகுதிக்கு காஞ்சி மகா ஸ்வாமிகள் வந்திருந்தார். அவரை சந்தித்து, இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுமாறு கேட்டுக் கொண்டார் பாடகச்சேரி சுவாமிகள். இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்த காஞ்சி மகா ஸ்வாமிகள், விஸ்வகர்மா இனத்தவரே முதலில் கும்பாபிஷேகம் செய்யுட்டும்.... அர்ச்சகர்கள் அடுத்து செய்யட்டும் என்று சொன்னார். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தக் குழப்பம் ஒரு பக்கம் இருக்க, வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றதால், கும்பாபிஷேகத்துக்கு நாள் குறிக்க முடியாமல் நாகேஸ்வரன் கோயிலில் அமர்ந்து அவஸ்தைப்பட்டார் சுவாமிகள். சென்னையில் நீதிபதியிடம் இருந்து தீர்ப்பு வந்தால்தான் கும்பாபிஷேகம் நடத்த முடியும். அப்போது ஒரு மதிய வேளையில் திடீரென சில பக்தர்களை அழைத்தார். பெரியநாயகி அம்மன் சந்நிதிக்கு அருகில் இருக்கும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியில் தன்னை வைத்து பூட்டச் சொன்னாராம் சுவாமிகள். காரணம் புரியாத பக்தர்களும் அதை மறுக்க முடியாமல் அப்படியே செய்தார்கள். மாலை வேளையில் பூட்டைத் திறக்கச் சொன்னார் சுவாமிகள். அப்போது சுவாமிகளின் கையில் அவருக்கு சாதகமாகக் கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நீதிபதியின் கையெழுத்தோடு இருந்தாம். பக்தர்கள் அனைவரும் பிரமித்துப் போயினர். அதாவது, தான் அறைக்குள் பூட்டப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து ஆகாய மார்க்கமாக சென்னைக்குச் சென்று நீதிபதியைச் சந்தித்து இந்த உத்தரவைப் பெற்று வந்தாராம் சுவாமிகள்.

சுவாமிகள், கடைசி காலத்தில் தான் இருந்த கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆகவேண்டும் என்று விரும்பினாராம். ஆனால், அவரின் சென்னை பக்தர்கள் சிலர் வற்புறுத்தலாகக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1949-ஆம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.

சமாதி ஆவதற்கு ஒரு வாரம் முன் சென்னையில் இருந்து கும்பகோணம் வந்தார் சுவாமிகள். அப்போது சுவாமிகள் பக்தரும் கும்பகோணத்தின் முன்னாள் சேர்மனுமான ராமநாத ஐயரின் மனைவி இறந்துபோயிருந்தார். அவரது வீடே சோகமாக இருந்தது. இந்த வேளையில் விஷயம் கேள்விபட்டு சுவாமிகளும் அங்கு வந்தார். சுவாமிகளின் திருக்கரத்தைப் பிடித்துக்கொண்டு ராமநாத ஐயர் கதற, ஏன் அழறே? அவ சாகலைடா... இன்னும் அவளுக்கு ஆயுள் இருக்கு என்று சுவாமிகள் சொல்ல.... ஐயர் உட்பட அனைவரும் பிரமை பிடித்தது போல் சுவாமிகளையே பார்த்தனர். இது கயிலாய மலை விபூதிடா என்று சொல்லி பாடையில் பிணமாக இருக்கும் ஐயரின் மனைவி நெற்றியில் பூச.... அடுத்த நொடியே அந்த மாது எழுந்து உட்கார்ந்தார். சவ வீடு சந்தோஷ வீடானது. பின்னர் வந்த பல வருடங்களுக்குப் பிறகு ராமநாத ஐயர் இறந்து போக, இந்த அம்மாள் 1982-ல்தான் இறந்துபோனாராம். சுவாமிகளின் ஆசியால் அந்த அம்மாளுக்கு ஆயுள் விருத்தி ஏற்பட்டது.

தனக்கு சமையல் செய்த வந்த அம்மாள் ஒருவர் இறந்துபோனபோதும் வடலூரில் ஒரு தைப்பூசத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துபோன ஒரு பக்தரையும் தன் சித்து திறமையால் மீண்டும் அவர்களை உயிர்ப்பித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?

நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!

Thursday, 14 May 2015

ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான்


                                          image



          உலக சமாதான ஆலயஸ்தாபகர்ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான்அவர்கள் மதச்சார்பு மொழி இவைகளைக்கடந்து உலக எல்லா நாடுகளிலும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஞானம் வழங்கிய ஞான வள்ளலாவார்கள்

தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சார்ந்த கான்சாபுரம் என்னும் சிற்றூரில் புகழ்மிக்க குடும்பத்தில் சையத் இபுராஹீம், மும்சாபீவி தம்பதியருக்கு மகனாக 02.05.1900 மாவது ஆண்டு அவதரித்தார்கள்

மகான் அவர்கள் உலகனைத்து நாடுகளுக்கும் பலமுறை சென்று உலக சமாதான ஆலயம் என்னும் தாம் கண்ட அமைப்பின் மூலம் அனைவருக்கும் பேறின்பம் தத்துவ தவஞான விளக்கமும் தன்னிலையையும் அனுபவபூர்வமாக வழங்கியதால் ஞானவள்ளல் என்று மக்களால் போற்றி அழைக்கப்பட்டார்கள். 

மகான் அவர்கள் இளமையில் தந்தையை இழந்ததால் கல்வி கற்கும் வாய்ப்பு அமையவில்லை.தீவிரபக்தி வணக்கங்களில் நாட்டமுடையவராய் மிக துணிச்சல் உடையவராயும் எந்தமறை பொருளையும் கண்டுபிடித்தே தீருவேன் என்று உறுதிகொண்டவராய் விளங்கி வந்துள்ளார்கள்.

11.11.1911ம் ஆண்டு மேலைநாட்டு மன்னர் ஒருவரின் முடிச்சூட்டுவிழா விமரிசையாக கொண்டாடியபோது மகான் ஒரு பெரியவரை அணுகி இந்த விழா கொண்டாட காரணம் என்ன என்று கேட்டார்கள் நமது அரசருக்கு முடிசூட்டு விழாவானதால் கொண்டாடவேண்டியது அவசியம் என்றார்.உடனே அரசருக்குப் பெரியவர் யார் என்று கேட்டார்.கடவுள் என்று சொன்னார்.கடவுளை நான் பார்க்க முடியுமா என்று கேட்ட போது சின்னஞ்சிறு குட்டி இவ்வளவு பெரிய கேள்வி கேட்கிறாயே என்று செல்லமாக தட்டி பார்க்கலாம் முயற்சி எடு என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.அன்றுமுதல் கடவுளை கண்டுவிட வேண்டுமென்ற எண்ணம் உதித்த நாளை தமது ஞான உதயதினமாகக் கொண்டு அன்றிலிருந்து பலவகை யோகங்கள் தொழுகைகளில் பாடுபட்டும் கடவுளைக் காண முடியவில்லை.

இறுதியாக பர்மா ரங்கூனில் வசித்துவந்த இந்தியாவிலுள்ள ஹைதராபாத் டெக்கான்,பிஜப்பூர் வாசியான ரெத்தின வியாபாரி சையத் இப்ராஹீம் ஃகாரிபுல்லாகாமில் என்ற வேத அறிஞர் வயது முதிர்ந்தவர் அவரின் நட்பு ஏற்பட்டு தர்க்க ரீதியாக உரையாடியதில் நெற்றிப்பொட்டை தொட்டு உணர்த்தும் தாந்திரீக யோகமுறை உபதேசத்தை அவரிடம் 07.01.1938 இரவு 11.11 மணிக்கு பெற்றுக்கொண்டார்கள்.

அன்றிலிருந்து மகான் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது.பேருண்மையைக் கண்டுகொண்டேன் என்ற நிலையில் பேறின்பம் ததும்பி,அறிவு தன்னிலை விளக்கமும்,பிரபஞ்ச தத்துவ ஞானமும், நான்கடவுள் விளக்கமும்,தமது பெரும் முயற்சியாலும், ஆராய்ச்சி விவேகத்தாலும் பெறப்பட்டார்கள் அன்றிலிருந்து ஒரு பெரும் குருவாக மக்களால் மதிக்கப்பட்டார்கள்.

1939ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்து தாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்று விரும்பி மதுரைக்கு வந்து தங்கி பல இன்னல்களுக்கு இடையே சிறு துண்டு நோட்டீஸ்கள் மூலம் மக்களுக்கு அறிவிப்பு செய்ததில் மக்கள் தங்கள் கேள்விகளுக்கு விளக்கமறிந்து ராஜமரியாதை தந்து ஆதரித்தார்கள்.

1941ல் பரிபூரண பரஞ்ஜோதியின் உயர்ஞான சபை துவங்கினார்கள்.மக்கள் ஆதரவு கூடியபின் சொந்த நிலம் வாங்கி 20.06.1947 மதுரையில் உலக சமாதான ஆலயம் நிறுவினார்கள்.அதன் பிறகு சென்னை சென்று 31.10.1943ல் சபை துவங்கி 20.07.1946ல் சொந்த நிலம் வாங்கி உலக சமாதான ஆலயம் என்னும் சபையை தோற்றுவித்தார்கள். காலத்தால் மக்கள் அறியலானர்கள் தற்போது உலகமெல்லாம் சபைகள் ஏற்பட்டு மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
 மிகுந்த நன்றி :  www.paranjothimahan.com |